
நதியா கிருத்துவ நிறுவனம் நடத்தும் பள்ளியின் 'கரெஸ்பாண்டெண்டாக' வருகிறார். தன் பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் எட்டு இளவட்டங்கள் கூத்தடிக்கும் போதெல்லாம் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், தண்டிக்கக் கூடாதென்று சுற்றியிருப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவர்களை அடித்துத் திருத்த முயற்சிக்கும் ஒரு ஆசிரியரை கண்டிப்புடன் பணி நீக்கம் செய்கிறார்.
திடீரென்று பார்த்தால் 'நத்தூஸ்' அதே நிறுவனம் நடத்தும் ஒரு மன நோய் காப்பகத்தில் 'ஸ்டெதாஸ்கோப்'புடன் திரிகிறார். அங்கிருக்கும் மருத்துவர்களுடன் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி என்று விவாதிக்கிறார்!!
நடுவில் ஒரு கன்னிகாஸ்த்ரி ப்ளஸ் 2 படிக்கும் அநாதை மாணவி ஒருவரை நதியாவிடம் ஒப்படைக்க, அவர் நம் எட்டு இளவட்டங்கள் படிக்கும் அதே வகுப்பில் இளம் மாணவியைப் புகுத்துகிறார். படத்தில் காதல், பொறாமை, கொலை வெறி, எல்லாம் உள்ளே வருகிறது. அது வரை படத்தில் வரும் 'ஜோக்குகளை' என் பெண் ரசித்துச் சிரிப்பதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.
நம் எட்டு பேர் குழு தலா நான்கு பேருள்ள இரண்டு குழுக்களாக தம்மை பிரித்துக் கொண்டு ஆரம்பத்திலிருந்தே அடித்துக் கொள்பவர்கள். மற்ற பள்ளிகளுடன் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது இந்த அடிதடி முற்றிப் போய் பள்ளியின் மானம் கப்பலேறும் நிலை வருகிறது. நதியா பொறுமையை சற்றே இழந்து நம் கதாநாயகர்களைத் திட்டி விட்டுப் போகிறார். அவர்களுக்கு ரோஷம் வந்து விடுகிறது. ஒன்று சேர்ந்து விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தில் வந்து பள்ளியின் பெருமையைக் காப்பாற்றுகிறார்கள். இந்த இடம் உணர்ச்சிபூர்வமாக படமாக்கப் பட்டிருக்கிறது. நிற்க!
காதலும் அதனால் வரும் பொறாமையும் சூடு பிடிக்கிறது. எட்டுப் பேரில் ஒருவன் இன்னொருவனைப் பழி வாங்கும் நிலைக்குப் போகிறது. ஆனால் இடையில் ஒரு பாவமும் செய்யாத மூன்றாமவன் ஆண்டு நிறைவு விழாவின் போது நிறைவேற்றப் பட்ட சதித் திட்டத்தில் நண்பனை காப்பாற்றப் போய் இறந்து போகிறான். காதலித்தவனுக்கு காதலி எழுதி வைத்த கடிதம் மூலம் உண்மை உரைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று திரையில் காண்க.
இயக்குனருக்கு கதை சொல்வதில் இருந்த சிக்கலைப் பற்றி படத்தின் நடுவே நாம் யோசிக்கிறோம். கிளைக் கதைகள் கதையோடு பொருந்த சற்றே சிரமப் படுகின்றன. கடைசிப் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அவ்வளவாக கருத்தைக் கவரவில்லை. பாராட்ட வேண்டிய சமாச்சாரம் என்னவென்றால், 'டூயட்' பாடலைக் கூட பொறுப்புடன் விரசம் தட்டாமல் எடுத்திருக்கிறார்கள். பள்ளியின் நூறு வயதான மணிக்குக் கீழே அமைக்கப் பட்ட மேடையில் நடக்கும் மாணவர்களின் இசைக் கச்சேரி விறுவிறுப்பாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. எப்போதும் போல நதியா மிதமில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவர் நடிக்க வேண்டுமென்றால் சைக்கிள் ஒட்டிக்கொண்டே பாடும் காட்சி ஒன்றாவது வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதி விடுவார் போலும்!
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் 'ஜோக்' பார்க்கும் மகிழ்ச்சிக்காகப் படம் பார்க்கலாம். ரொம்ப நாள் ஓடாது.
சத்யம் தியேட்டரில் இனிமேல் பாப்கார்ன் வாங்குவதில்லை என்று வைத்திருக்கிறேன். 'சவக் சவக்' என்று தரமிழந்து போய் கிடக்கிறது. அதை விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்