இரண்டு நாளாக முதலிட்டாளர்கள் சத்யம் நிறுவன மேலாளர்களை நார் நாராகக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் சத்யம் அதன் தலைமை பொறுப்பில் இருப்பவரின் மகன் நடத்தும் இரண்டு நிறுவனங்களை 1.5 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முயற்சித்ததுதான்.
- 'மேய்டாஸ் இன்ஃப்ரா' மற்றும் 'மேய்டாஸ் ப்ராப்பர்டீஸ்' என்ற இரண்டு நிறுவனங்களும் ராமலிங்க ராஜூவின் மகன் நடத்தும் நிறுவனங்கள். அவற்றின் சந்தை மதிப்பீடு 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு இல்லை என்று அதிரடியாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்
- சத்யம் செய்யும் கம்யூட்டர் தொழிலுக்கும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை
- கம்ப்யூட்டர் தொழிலில் கொடிகட்டிப் பறந்து லாபம் ஈட்டிய பணத்தை செலவு செய்யாமல் இருப்பில் வைத்திருந்தார்கள் சத்யம் மேலாளர்கள். இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்கினால் சத்யம் சேமித்து வைத்திருக்கும், முதலீட்டாளர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய லாபப் பணம், ராமலிங்க ராஜூவின் குடும்பத்தினரைப் போய்ச் சேரும். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இதற்காகக் கடன் வாங்கத் தேவையிருக்கும்
- இவ்வளவும் தெரிந்திருக்க வேண்டிய 'போர்டு' உறுப்பினர்கள் எப்படி இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? அவர்களுக்குப் போதிய சுதந்திரம் சத்யம் நிறுவனத்தால் வழங்கப் பட்டதா?
- ஐ டி தொழில் செய்யத்தான் உங்களுக்குப் பணம் கொடுத்தோம். சம்பந்தமில்லாத தொழிலில் இறங்கும் முன் முதலீட்டாளர்களான எங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும்
ஆகியவை முதலீட்டாளர்கள் முன் வைக்கும் வாதங்கள். நியாயமான வாதங்கள்!!
ராமலிங்க ராஜூ 'சத்யம் முதலீட்டாளர்கள் உணர்ச்சிகளை மதித்து நிறுவனங்களை வாங்கும் முயற்சியைக் கை விட்டு விட்டது' என்று அறிவித்திருக்கிறார்.
சந்தையில் மிகுந்த மதிப்பை ஈட்டியிருந்த சத்யம் நிறுவனர்கள் ஒரே நாளில் 420 ரேஞ்சிற்குத் தள்ளப் பட்டு விட்டார்கள். மீளுவது கடினம் என்றுதான் தோன்றுகிறது.
No comments:
Post a Comment