Saturday, July 24, 2010

இன்செப்ஷன் - திரைப்பட அனுபவம்

இணைய தள சீட்டியகத்தில் (குழம்ப வேண்டாம் - 'ட்விட்டரை'த்தான் அப்படி தமிழ் படுத்தியிருக்கிறோம்) ஆறு மணி நேரத்தில் இந்தப் படத்தைப் பற்றி 7000 சீட்டியடித்தார்கள். அப்படியாகத்தானே பிரமாதப் படுத்தப் பட்ட படத்தைப் பார்க்க அம்பா 'ஸ்கைவாக்' சென்றோம்.

இன்செப்ஷன் என்றால் ஆரம்பம் அல்லது தொடக்கம் என்று தமிழ் அகராதியில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். படம் சுமார் 130 நிமிடமே ஓடுகிறது.

கதையில் ஒரு பெரும் வணிகப் பேரரசை உருவாக்கிய கிழவர் சாகக் கிடக்கிறார். அவர் மகனுக்கு ஆட்சிப் பொறுப்பு போகப் போகிறது. எதிர் நிறுவனக்காரர்கள் மகனின் மனத்தில் 'அப்பா வழி நமக்கு உதவாது. வணிகப் பேரரசை உடைப்பதுதான் சரி' என்ற எண்ணத்தை விதைத்து விட்டால் நமக்குப் பிரச்சினை விட்டது என்று யோசிக்கிறார்கள். நமக்குத் தேவையான் எண்ணத்தை அடுத்தவர் மனதில் விதைப்பதுதான் 'இன்செப்ஷன்'. கனவில் புகுந்து குழப்பம் செய்யத் தெரிந்தவர்கள் கையில் அலுமினியப் பெட்டியுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் உதவக் காத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நம்ம ஊர் மெகாசீரியல் கதாநாயகிகளின் திறமை இயக்குனருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

மகன் அப்பாவின் சடலத்தை எடுத்துக் கொண்டு அமெரிக்கா பயணப் படுகிறார். விமானம் அமெரிக்கா சேர்வதற்குள் அவரைத் தூங்கப் பண்ணி கனவை வரவழைத்து, அந்தக் கனவில் நுழைந்து அவர் மூளைக்குள் எண்ணத்தை விதைக்க வேண்டும். அது ஒரு கனவில் முடியாது. கனவுக்குள் கனவு வேண்டும் என்று மூன்று கட்டக் கனவுத் திட்டம் தீட்டி, மூன்றில் முடியாமல் மூன்றரைக்குள்ளும் போகிறார்கள்.

அந்தக் காலத்து விட்டலாச்சார்யா படம் பார்க்க அறிவுத் திறன் தேவையில்லை. இங்கே ஐ.க்யூ (IQ) 160 க்கு கீழே இருந்தால் பிரச்சினை. என் மாதிரி அட்சர குச்சிகளுக்கு மிகவும் சிரமம். நல்ல வேளை எழுத்துப் போட்டு படம் காண்பித்தார்கள். படத்தின் நடுவே தொண்டைக் கமறலாக இருக்கிறது என்று லேசாக ஒருமுறை செருமிக் கொண்டேன். பக்கத்து சீட்டில் துணைவியார் நானும் கனவுக்குள் போய் குறட்டை விடுகிறேன் என்று நினைத்து விட்டார். நீங்களும் எதற்கும் ஒரு முறை கிள்ளிப் பார்த்து விடுங்கள்.

ட்விட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுகிறது என்று சொல்லியிருந்தார்கள். புரியாததுதான் பிரச்சினை என்று படத்தைப் பார்த்த பிறகுதான் நமக்கே விளங்கியது. பின்னால் சீட்டில் அறிவு ஜீவிகள் சிலர் படத்தை பார்க்கும் போதே ஆராய்ந்து அலசி கோனார் உரை வேறு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

Saturday, May 08, 2010

ரெட்டச்சுழி

இன்று சத்யம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்தேன். சனிக் கிழமை மதியம் படம் ஆரம்பிக்கும் போது அரங்கு நிறைந்திருக்கவில்லை. முதலில் வந்திருந்தவர்கள் சராசரி வயதைக் கணக்கிட்டால் சுமார் 40 க்கு மேல் என்று சொல்லலாம். இளசுகள் எல்லோரும் 'சுறா' பார்க்கப் போயிருந்தார்கள் போலும். டிக்கட் கிடைக்காதவர்கள் பின்னால் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஊரில் இரண்டு வயது முதிர்ந்த முக்கியப் பிரமுகர்கள் எதிரும் புதிருமாக வாழ்ந்து கொண்டு ஒருவர் மேல் ஒருவர் அதிமிஞ்சிய 'காண்டு' காட்டுகிறார்கள். இதற்கிடையே நீ பெரியவனா நான் பெரியவனா என்று போட்டியும் போட்டுக் கொள்கிறார்கள். இரண்டு பக்கத்திலும் பேரன் பேத்திகள் பட்டாளம். அவர்களும் இந்தக் 'காண்டு'வை கட்சி கட்டிக் கொண்டு கண்ணாடி போல் பிரதிபலிக்கிறார்கள். இயக்குனர் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் ஒரு டஜன் வாண்டுகளுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். மிதமில்லாமல் அருமையாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். வாண்டுகளிலேயே கால் சட்டையை அடிக்கடி நழுவ விட்டுக் கவர்ச்சி காட்டும் சிறுவனின் நடிப்பு நினைவில் நிற்கிறது.

படத்தில் முதல் பாதி சவ்வாய் இழுக்கிறது.. தேவையில்லாமல் முதல் பாதியில் ஓட்டியிருக்கும் பல காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். முதல் தலைமுறைக் காதல் தோல்வி (பெரியவர்களின் பகைக்குக் காரணம்) சொல்லப் பட்டவுடன் சூடு பிடிக்கும் கதை மூன்றாம் தலைமுறைக் காதலைச் சேர்த்து வைக்க வாண்டுகள் சூட்சுமங்கள் செயல் படுத்தும் போது வேகம் பிடிக்கிறது. உச்சக் கட்டமும் மனதைத் தொடும் படி அமைந்து இருந்த்து.

படப்பிடிப்பு (முக்கியமாக வெளிப்புறக் காட்சிகள்) மிகவும் அருமை. சேரன்மாதேவிக்கு ஒரு நடை போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பாடல்கள் எதுவும் நிற்கவில்லை. எனக்கு இந்த வித்தியாசமான படம் பிடித்திருந்தது.

இரண்டு பெயர் பெற்ற இயக்குனர்களையும் ஒரு டஜன் குழந்தைகளையும் நடிக்க வைப்பது என்பது இமாலயச் சிரமம். இயக்குனரை கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

Monday, May 03, 2010

பொறாமை உணர்ச்சி

இந்தத் தலைப்பில் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஏறக்குறைய குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கவனித்த போது எனக்குத் தோன்றிய சில கருத்துகள்.

பொறாமை என்பது தனக்கும் பிறருக்கும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நெகுதி (negative) உணர்வு. ஆதங்கம், வருத்தம், கவலை முதலிய உணர்வுகளுக்கும் பொறாமைக்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளியே உள்ளது.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சமூகத்தில் தன் அந்தஸ்து (status), தன் சுதந்திரம் (autonomy) , நெருங்கிய உறவுகள் (relatedness) , நியாயம் (fairness) , நிச்சயம்/பத்திரமாக (centainty) உணர்வது ஆகியவற்றைப் பெரிதும் மதிக்கிறார். இந்த உணர்வுகளுக்குப் பங்கம் வரும் காரியங்கள் தன்னைச் சுற்றி நடக்கும் போது மூளையில் அபாய மணி ஒலிக்கிறது. தற்காப்பைத் தூண்டும் விதத்தில் மனித மூளையில் இத்தகைய உணர்வுகள் கிளம்புவது இயற்கை. தன்னை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போதே இத்தகைய தூண்டுதல்கள் கிளம்பும். தன்னைப் பார்த்துத் தானே பொறாமைப் படுபவர் யாரையும் நாம் பார்ப்பதில்லை.

மனிதன் ஆதி காலத்தில் இருந்து அபாய கட்டங்களில் தன்னைக் காத்துக் கொள்ள இரண்டு சூட்சுமங்களைத்தான் (strategy) உபயோகிக்கிறான். ஒன்று தப்பித்து ஒடுவது. மற்றொன்று எதிர்த்து நின்று சண்டை போடுவது. இரண்டு சூட்சுமங்களையும் செயல் படுத்த வேண்டிய உத்திகள் (tactics) சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். தனக்கும் அண்ணனைப் போல் உரிமைகள் வேண்டும் என்று வாதம் செய்யும் தங்கை எதிர்த்து நிற்கும் சூட்சுமத்தையும், எனக்கு செல்ஃபோன் பிடிக்காது அதனால் நான் அதை உபயோகிப்பதில்லை என்று போலியாக நியாயப் படுத்தும் ஏழைக் கல்லூரி மாணவன் சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் சூட்சுமத்தையும் முறையே உபயோகிக்கிறார்கள்.

பண்படாத மனதுள்ளவர்கள் அபாயத் தூண்டுதல்கள் தன் மூளையில் கிளர்ச்சி கொள்ளும் போது யோசிக்காமல் இயல்பாக வரும் சூட்சுமத்தையும் அதன் உத்திகளையும் கடைப் பிடிக்கிறார்கள். குழந்தைகளின் இயல்பான நடத்தைகள் இதற்குப் பெரிய உதாரணம். இத்தகைய நடத்தைகள் முதிர்ந்தவையாகத் (mature) தெரிவதில்லை. சுற்றியிருப்பவர்களிடம் மேலும் நெகுதியான உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்து விடுகின்றன. சில சமயம் இவை குடுமிப் பிடிச் சண்டையில் கொண்டு போய் விடக் கூடும். பண்பட்டவர்கள் யோசித்துச் சூட்சுமத்தையும் உத்திகளையும் கையாள எத்தனிப்பதால் அவர்கள் செய்கை முதிர்ச்சி உடையதாகத் தெரிகிறது. அவர்களைச் சுற்றி இருப்பவர்களும் பத்திரமாக உணர்கிறார்கள்.

Sunday, May 02, 2010

'என்ட்ரெப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?

முதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'என்ட்ரெப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?

'என்ட்ரெப்ரெனர்' என்பவர் தன்னையும், தன் நேரத்தையும், யோசனைகளையும், உழைப்பையும் தன் வசம் வைத்திருப்பவர். சமூகத்திற்குப் பயனுள்ள வேலைகள் செய்து பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர். புதிய பாதைகளைக் கண்டுபிடிப்பவர். தொழிலுக்குச் சம்பளம் என்று யோசிக்காதவர். லாபத்தைப் பெருக்கி அதைப் புதிய வழிகளில் எப்படிச் செலவு செய்யலாம் என்று யோசிப்பவர்.

வாழ்க்கையின் தேவைகளால் தளர்ந்து போகாதவரும், வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் வேகம் உள்ளவரும் 'என்ட்ரெப்ரெனர்' ஆகும் வாய்ப்புகள் அதிகம். 1980 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்படிப் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறார்கள்.

இந்த ஆங்கில வார்த்தைக்குத் தமிழ்ப் பதம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் இதைப் பற்றித் தமிழர்கள் பழங்காலத்தில் யோசிக்கவே இல்லையா?

Tuesday, April 06, 2010

அமெரிக்கப் பொருளாதாரம் வளருகிறது !!

இந்த ஆண்டில் அது சுமார் 2.5 சதவிகிதம் வளரும் என்று கணித்திருக்கிறார்கள். பாதாளச் சரிவிலிருந்து திரும்பியிருப்பது வரவேற்கக் கூடியது. அதே நேரம் யோசிக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன.

அமெரிக்கர்கள் எதிர்கால வருவாயைக் கருத்தில் கொண்டு இன்றே கடன் வாங்கிச் செலவு செய்பவர்கள். அவர்களுக்கு சேமிப்பு எண்ணம் இது வரை இருந்ததில்லை. ஆனால் பேராசையால் தெரிந்தே வராக்கடன் கொடுத்து ஏமாந்த வங்கிகள் இன்று பலமாகத் தும்மினாலே கடன் அட்டையும் வீட்டுக் கடனும் வழங்கும் நிலையில் இல்லை. சக்திக்கு மீறிய கடன் வாங்கி, அதுவும் மூழ்கிப் போய், இருந்த சொத்தையெல்லாம் தொலைத்த பல அமெரிக்கர்கள் இன்று கிடைப்பதை சேமிக்கும் மன நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவே அமெரிக்காவில் சேமிப்பு வளர்ந்து தனிநபர் செலவு குறையும் என்று எதிர்பார்க்கலாம். தனிநபர் செலவு குறையும் போது உற்பத்தியை உயர்த்தினால் உற்பத்தி செய்யப் படும் பொருட்களை உள்ளூரில் வாங்க ஆள் இருக்காது.

அமெரிக்கா இறக்குமதிகளைக் குறைத்துக் கொண்டு ஏற்றுமதியை அதிகப் படுத்தப் போகிறதா? திடீரென்று எதை ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்.பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Saturday, March 27, 2010

அங்காடித் தெரு

சென்னை ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு மலிவு விலை பல் பொருள் அங்காடி பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கையில் முளைக்கும் 'டீன் ஏஜ்' காதலைச் சொல்கிறது. அந்த வயதில் காதல் உணர்ச்சிக்கும் பொறுப்புணர்ச்சிக்கும் இடையே ஏற்படும் போராட்டத்தை இயல்பாகச் சொல்கிறது. 'ஜிங்-பேங்' இல்லாத மலிவு பட்ஜெட் படம். நடிப்பும் இ...யக்கமும் பார்க்கும் படி இருந்தது. சில கோரக் காட்சிகளின் உக்கிரம் குறைக்கப் பட்டிருந்தால் இன்னமும் தூக்கலாக இருந்திருக்கும். திரை அரங்கில் இரண்டாம் நாள் காட்சிக்குக் கூட்டமில்லை. 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாட்டு பிடித்திருந்தது.

Sunday, June 28, 2009

மாசிலாமணி (திரைப்படம் பார்த்த அனுபவம்)

இட்லிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம் என்று இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம் ஐயா! பாட்டுகள் பரவாயில்லை. 'சிக்கு சிக்கு பூம் பூம்', 'ஓ திவ்யா', 'டோரா டோரா' நமக்குப் பிடித்திருந்தன. மற்ற படி இரண்டரை மணி நேர ரம்பம்.

கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தவே 45 நிமிடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். கதை என்று ஒன்று இந்தப் படத்தில் இருக்கப் போகிறதா என்று கவலைப் பட ஆரம்பித்து விடுகிறோம் நாம். கடைசி கதாபாத்திரமாக இன்ஸ்பெக்டர் இடைவேளைப் பக்கம்தான் படத்தில் வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

கதாநாயகனுடன் வரும் இரண்டு நண்பர்கள் அடிக்கும் லூட்டி இருக்கும் போது எம் எஸ் பாஸ்கர், கருணா டிராக் எதற்கு என்று இன்னமும் புரியாமல் கிடக்கிறோம்.

கதாநாயகி ஒவ்வோரு கோணத்தில் அசினை நினைவூட்டுகிறார். நடனமாடும் போது சில சமயம் அசின் மாதிரி ஆடுகிறார் என்று எனக்குத் தோன்றியது..

படத்தில் எழுத்துப் போட்டவுடன் முதல் ஆளாக வெளியே ஓடி வந்து விட்டேன் (குடும்பத்துடன் போனதால் நடுவே ஓட இயலவில்லை). மற்றபடி சொல்லிக் கொள்ளும் படியாக் எதுவும் இல்லை. கொஞ்ச நாளில் சன் ம்யூஸிக் சானலில் பாட்டுகளையும் காமெடி காட்சிகளையும் பார்த்து விடலாம். மற்றதற்கெல்லாம் காசு கொடுத்துப் பார்ப்பது தேவையற்ற விஷயம்.

கல்பாத்தி சகோதரர்கள் முதலில் கணினிப் பயிற்சி கொடுத்தார்கள். பிறகு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தார்கள். இப்போது திரைப்படம் தயாரிக்க இறங்கியிருக்கிறார்கள்.

பெய்யெனப் பெய்யும் மழை....

போன வாரமெல்லாம் இந்தியாவில் மழை தவறிப் போய் விட்டது. இப்படியே விட்டால் பஞ்சம், பட்டினி, விலைவாசி உயர்வு என்று நாடே கெட்டுப் போய் விடும் என்று கட்டியம் கூறி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். நேரங் கெட்ட நேரத்தில் புயல் அடித்து பருவ மழையையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டது என்று அந்தப் புயலைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒரு படி மேலே போய் எங்கோ இருக்கும் 'எல் நீனோ' தான் இதற்கும் காரணம் என்றார்கள்

பருவமழை இரண்டு நாட்களாக முன்னேற ஆரம்பித்த உடன் பிரியாணி சாப்பிட்டு பீடா போட்டு விட்டு எல்லாரும் தூங்கப் போய் விட்டார்கள். வருடங்களும் ஒடிக் கொண்டுதான் இருக்கின்றன. பருவமழையும் அவ்வப் போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

நம் நாட்டில் ஒருவன், தான் கல்லில் இடறிக் கொண்டு 'கல் தடுக்கி விட்டது' என்று சிறு வயதிலேயே சொல்லப் பழகுகிறான். முள்ளின் மேல் தான் காலை வைத்து விட்டு 'முள் குத்தி விட்டது' என்று குற்றம் சொல்கிறான். இப்படியே ஏதாவது இசகு பிசகாக நடக்கும் போது வெளி உலகின் மேல் பழியைப் போட்டு விட்டு நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கும் மனப்பான்மை அல்லது கலாச்சாரம் வளர்ந்து கிடக்கிறது. கையாலாகாத்தனத்திலால் வளர்ந்த கலாச்சாரம் இது.

பருவ மழை ஏன் இப்படி பருவத்தில் பொய்க்கிறது. இயற்கையைக் குலைக்க நாம் செய்யும் நாச காரியங்கள் என்ன என்று யோசித்துத் திருத்திக் கொள்ளலாம். அல்லது மழை அதிகம் கிடைக்கும் போது கிடைக்கும் தண்ணீரைப் பாதுகாப்பது. உபரியாகக் கிடைக்கும் இடங்களில் இருந்து இல்லாத இடங்களுக்குக் கொண்டு செல்ல வழி வகுப்பது என்று காரியம் செய்யலாம். இதையெல்லாம் செய்ய வேண்டிய அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டிருக்கும் வரை நாம் கையாலாகத்தனத்தில் மேலும் கையைப் பிசைந்து கொண்டிருக்கலாம். அல்லது கிடைக்கும் முதல் வாய்ப்பில் பெட்டியைக் கட்டி நம் பிள்ளைகளை வெளி நாட்டில் குடியேற்றி விடலாம்.

என்னது?.... சின்ன வயசிலேயே குழந்தைக்கு சரியாக யோசிக்கக் கற்றுக் கொடுக்கலாமா? அப்படிச் செய்தாலாவது அடுத்த தலைமுறை இந்தியாவைப் பார்த்துக் கொள்ளுமா? வாரும் ! அப்படிச் செய்த நாடுகள் எல்லாம் உருப்பட்டு விட்டனவா என்று கொஞ்ச நேரம் பொழுது போக்காய் தர்க்கம் பண்ணி விட்டு நடக்கிற காரியத்தைப் பார்க்கப் போவோம்.

Blog Archive