[தமிழ் மணம் பதிவர்கள் கொடுத்த 'பில்ட் அப்' ஆல் உந்தப் பட்டு என் பெண்ணும் கூட வரச் சொல்லிக் கேட்க, நேற்று பிரார்த்தனாவில் படம் பார்த்தோம். தமிழ் மணத்தில் 'படம் பார்த்தால் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது' என்று கை மேல் ஏற்கெனவே போட்டிருப்பதால் இங்கு அனுபவம் வரும் முன்னே, ஆராய்ச்சி வரும் பின்னே!!]
கனமான கருத்தை (அப்பா - மகள் உறவு) ஆர்ப்பாட்டம் இல்லாமல், அட்டகாசம் இல்லாமல், அதிரடி இல்லாமல், ஃபார்முலா இல்லாமல், சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். அப்படியும் கடைசியில் படம் ஆமை வேகத்தில் நகர்கிறது.
மூணார் மற்றும் குன்னூர்(?) காட்சிகள் கண்ணுக்குக் குளிர்ச்சி. உறுத்தாத படப் பிடிப்பு.
ப்ரகாஷ் ராஜ் சில சமயத்தில் மிகையாக நடிப்பார் என்பது என் கருத்து. இந்தப் படத்தில் அளவோடு நடித்து சிறப்பித்திருக்கிறார். த்ரிஷா பெண்ணை குறும்புக் காரப் பெண்ணாகப் பார்த்திருக்கிறேன், துள்ளும் இளசாகப் பார்த்திருக்கிறேன்(உஸ்ஸ்.. சற்று கிட்டே வாரும் ஐயா! கவர்ச்சிக் கன்னியாகப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் உதைத்தாலும் உதைப்பார்கள், நம் காதோடு இருக்கட்டும்). குணச் சித்திரத்தில் இதுதான் முதல் தடவை. ப்ரகாஷை மீறிப் பிரகாசித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் முகவெட்டை வைத்துக் கொண்டு அவரால் உணர்ச்சிப் பூர்வமான பாவங்களை வெளிப் படுத்த முடியாது என்பதும் என் கருத்து. கண்ணால் பேசியே இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார். நன்றாகச் செய்திருக்கிறார். வாழ்த்துகள். சும்மா வாஸ்துவுக்காக ப்ரித்வி ராஜை சேர்த்திருக்கிறார்கள் போலும்.
மனைவியை தப்பாகப் புரிந்து அறைந்து விட்டு பிறகு அவரிடம் கெஞ்சும் இடம், நடுத்தெருவில் தன் பெண் சட்டையை உருவிக் கொண்டு வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில் முதலில் கூனிக் குறுகிப் போய் நடக்கும் ப்ரகாஷ் ராஜ், பிறகு பெண் செய்த நல்ல காரியம் புரிந்து நெஞ்ஜை நிமிர்த்திக் கொண்டு நடக்கும் கட்டம், கடைசியில் மனைவியை சரியாகப் புரிந்து கொண்டு அவருடைய பெற்றோரை தானே அபியின் கல்யாணத்திற்குக் கூப்பிடுவதாகச் சொல்லும் கட்டம் முதலியவற்றில் ப்ரகாஷ் ராஜ் தனது 'ட்யுப் லைட்' பாத்திரத்தை மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றவர்களும் சளைக்கவில்லை.
படத்தை எப்படி முடிப்பது என்று திணறியிருப்பது புரிகிறது. க்ளைமாக்ஸ், ஆன்டை(anti) க்ளைமாக்ஸ், க்ளைமாக்ஸ் தொடர் போரடிக்கிறாது. ஜஸ்பீர் - ரவி காதல் தேவையற்ற ஒட்டு.
மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய மற்றுமொரு 'ப்ரகாஷ் ராஜ் - ப்ரித்வி ராஜ் முத்து'.
இனி தீவிர ஆராய்ச்சியை விரும்புபவர்கள் படிக்கலாம்.
பெண் சிசுவை நெல் கொடுத்துக் கொல்லும் சமகால அப்பன் கதைகளைக் கேட்டிருக்கிறோம், பெண் குழந்தை பெற்று, மனைவி வயிற்றை இரண்டு முறை ஏற்கெனவே கிழித்திருந்தாலும் பரவாயில்லை, மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த சமகால அப்பன்களை பார்த்திருக்கிறேன். பெண் பிறந்து விட்டாள், இனி அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் ஆண்டியாகி விடுவேன் என்ற மனப்பான்மையை நெருங்கியிருந்து கேட்டிருக்கிறேன். சுற்றத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து பெண்ணை விரும்பாத உறவுக்குக் கட்டி வைத்துவிட்டு பிறகு வருத்தப் பட்ட அப்பனையும் பார்த்திருக்கிறேன். இத்தகைய அப்பன்கள் நிறைந்த தமிழ் நாட்டில் அபியின் அப்பா எந்தச் சராசரி அப்பனை பிரதிபலிக்கிறார் என்று புரியவில்லை.
அபியின் அப்பாவையும் சேர்த்து மேற்கூறிய அப்பாக்களைத் தயாரித்து சந்தையில் விடுபவர்கள் பெண்களாகிய அம்மாக்கள்தாம். அவர்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது (அ) இருந்தது என்ற கேள்வி எழலாம். சற்றே சுதந்திரம் கிடைத்திருக்கும் சமகால நகர்புற அம்மாக்கள் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சற்று யோசித்தால் எதிர் கால அப்பாக்கள் வேறு மாதிரி இருக்க வாய்ப்பு உண்டு. நாட்டுப் புறத்தில் இந்தப் படம் ஓடுமா என்பதே சந்தேகம்.
தற்போதைய இளம் பெண்கள் (நாட்டுப் புறத்திலும் சரி, நகர் புறத்திலும் சரி) அபியைப் போலவே 'சுகுர்' ராக இருக்கிறார்கள். எல்லாம் கேபிள் தொலைக்காட்சி செய்த மாயம். அவர்கள் உருவாக்கும் ஆண்களுக்கு மேலும் பரந்த மனப்பான்மையை ஊட்டி வளர்ப்பார்கள் என்று நம்பலாம்.
மொத்ததில் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை வளர்க்கும் கருத்துக்களை தூண்டி விட்ட படம்.
இனி போட்டுத் தாக்குங்கள்!! காத்திருக்கிறேன்.
1 comment:
Dear Uday,
I happen to come across your blog while going through your linkedin profile. Its nice to see a Senior VP of our company is finding time to blog and that too of non-official views and in Tamil language. I am not sure how many HCLites are reading your blog and I am sure your blog will become a major discussion forum if many HCLites come to know about it :)
Regarding your review, there is a minor correction. You have mentioned that this movie is a "Prakash Raj - Prithiviraj" combination. I have not seen this movie yet, but I guess Prithiviraj is not part of the movie and your were trying to refer as "Prakash Raj-Radha Mohan" combination.
Regards and Thanks,
Zakir.
Post a Comment