லாண்ட்மார்க்கில் DVD கொட்டிக் கிடந்தது. ஆர்வக் கோளாறால் உந்தப் பட்டு வாங்கி வந்து பார்த்தேன். ஆர்வக் கோளாறு நன்றாகவே வேலை செய்திருந்தது. படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெரும்பாலான வசனங்கள் பெர்சிய மொழியில் இருந்த போதிலும் (மிச்சம் ஆங்கிலம்) ஆங்கிலத்தில் கீழே எழுத்துப் போட்டதால் படம் நன்றாகப் புரிந்தது.
ஆஃப்கானிஸ்தானில் முடியாட்சி முடிந்த கால கட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது. ரஷ்ய ஆக்கிரமிப்புக் காலத்தினூடே நகர்ந்து தாலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஃப்கானில் கதையை முடித்திருக்கிறார்கள். தாலிபான் ஆட்கள், ஒரு பெண்ணை அவள் கற்பில்லாதவள் என்று குற்றம் சாட்டி, பொது மக்கள் கூடியிருக்கும் விளையாட்டரங்கில் கல்லால் அடித்துக் கொல்லும் கொடுரத்தை தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
படம் எங்கோ சீனாவில் படமாக்கப் பட்டதாம். ஆனால் ஆஃப்கானிஸ்தானை பார்ப்பது போலவே உணர்ந்தேன். இந்தப் படத்தில் ஒரு பாலியல் பலாத்காரக் காட்சியில் நடித்ததற்காக ஆஃப்கான் சிறுவர்கள் இருவரை பாரமவுண்ட் நிறுவனத்தார் அரேபிய நாட்டிற்குக் குடியேற்றினர் என்கிறது இணைய தளம்.
அமீர், ஹஸ்ஸான், அஸ்ஸீஃப் என்ற மூன்று ஆஃப்கான் சிறுவர்களைப் பற்றிய படம் இது. அமீர் பணக்கார பாபாவின் (அப்பாவின் பெயர்) மகன். காபூலில் வசிக்கிறார்கள் அப்பா கம்யூனிசக் கொள்கைகளையும், இஸ்லாம் மதத்தின் சில முரண்பாடான கொள்கைகளையும் தீவிரமாக விமரிசிப்பவர். தன் மகன் தன்னைப் போல் இல்லாமல் கோழையாக வளர்கிறான் என்று வருத்தப் படுபவர்.
ஆமீர் பட்டம் விட, பாபாவின் வேலைக்காரனான அலியின் மகனென்று வளரும் ஹஸ்ஸான் அமீர் அறுத்துப் போடும் பட்டங்களை ஓடிச் சென்று பிடித்து வருகிறான். அமீரின் நம்பிக்கையான வேலைக்காரன்.
அஸ்ஸீஃபிற்கு தெருவில் அமீரையும் ஹஸ்ஸானையும் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மிரட்டுவதே வேலை. ஒரு நாள் ஹஸ்ஸான் அமீர் அறுத்த பட்டத்தைப் பிடித்து வரும் போது அமீரின் பார்வை பட அஸ்ஸீஃபால் பலாத்காரம் செய்யப் படுகிறான். அமீர் தன் வேலைக்காரனை காப்பாற்றாமல், அவன் மேல் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டே துரத்தி விடுகிறான்.பிறகு ரஷ்ய ஆக்கிரப்பின் போது அப்பாவுடன் தப்பியோடி அமெரிக்காவில் (கலிஃபோர்னியாவில்) குடியேறுகிறான். அங்கே அவன் ஒரு எழுத்தாளனாகி ஒரு ஆஃப்கானியப் பெண்ணை மணந்து கொள்கிறான். அப்பா செத்துப் போகிறார்.
பிறகு ஒரு நாள் அவனுக்கு ஹஸ்ஸானின் மரணம் பற்றிய தகவல் கிடைக்கிறது. அப்போதுதான், தன் அப்பா அலியின் மனைவியிடம் விளையாடிப் பெற்ற குழந்தைதான் ஹஸ்ஸான் என்று தெரிந்து கொள்கிறான். ஹஸ்ஸானுக்கு ஒரு மகன் இருப்பது தெரிந்து அவனைத் தேடி ஆஃப்கானிஸ்தான் போகிறான். தாலிபானில் சேர்ந்திருக்கும் அஸ்ஸீஃபின் பிடியில் நடனப் பையனாக (பச்சா) ஹஸாரா (ஆஃப்கான் அகதி) என்ற முத்திரையில் வளரும் அந்தச் சிறுவனைப் எப்படிப் போராடி மீட்கிறான் அமீர் என்பதுதான் கதை.
விறுவிறுப்பாகச் செல்லும் கதை. சொல்லப் பட்டிருக்கும் விதம், காட்சி அமைப்புகள், படப் பிடிப்பு அனைத்தும் சிறப்பு. ஒட்டு மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம். ஆஃப்கானிஸ்தான் என்ற நாட்டின் சரித்திரம் மற்றும் தற்போதைய நிலைமை பற்றி பல விஷயங்கள் விளங்கின மாதிரி உணர்ந்தேன். இந்தப் படம் பற்றிய மேலும் சுவையான பல செய்திகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
No comments:
Post a Comment