Sunday, February 08, 2009

தி ப்ரெஸிடெண்ட் இஸ் கமிங் (2009)

இது ஒரு பாலிவுட் படம். ஜனவரியில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை டாடா ஸ்கை 'ஷோ கேஸ்' இல் பார்க்கலாம். குனால் ராய் கபூர் என்பவர் இயக்கியிருக்கிறார்.

கதை இதுதான். அமெரிக்க (முன்னாள்) அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வருகிறார். அவர் ஒரு துடிப்பான இந்திய இளைஞரிடம் கைகுலுக்கிப் பேச வேண்டும். அதற்காக அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தைப் பணிக்கிறார்கள். அந்த நிறுவனம் நாடு முழுவதும் சலித்து ஆறு இளைஞர்களைத் (நான்கு இளைஞர் மற்றும் இரண்டு இளைஞிகள்) தேர்வு செய்து தூதரகத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் சிறு வயதிலேயே சாதித்தவர்கள். பங்குச் சந்தையில் கோடீஸ்வரர் ஒருவர், அழகு சாதனப் பொருள்கள் விற்கும் நிறுவனத் தலைவி, கம்ப்யூட்டர் துறையில் விற்பன்னன் என்று சாதனைப் பட்டியல் நீள்கிறது.

நாளை அதிபருடன் சந்திப்பு என்ற நிலையில் இந்த ஆறு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க தூதரகத்திலேயே போட்டி நடத்துகிறார்கள் விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த இரு பெண்கள். அவர்களிள் ஒருவருக்கு மட்டும் அதிபருடன் காலை உணவு உண்ண அழைப்பு கிடைத்திருக்கிறது. மற்றவருக்கு அது ஏகப் பொறாமையை கிளப்புகிறது. அத்துடன் அந்த மற்றவர் அகப்பட்டதைச் சுருட்டும் 'க்ளெப்டோமேனியாக்' பழக்கமுள்ளவர்.

விளம்பர நிறுவனப் பெண்கள் இரவோடிரவாக பல சுற்று திறமைப் போட்டி நடத்துகிறார்கள். லஞ்சம் கொடுத்து போட்டியில் தன்னை முன் நிறுத்திக் கொள்வது, பாலியல் குற்றம் சாட்டிப் போட்டியாளனை நீக்குவது, அறியாமையைப் பயன்படுத்தி இக்கட்டில் மாட்டி விடுவது என்று இந்திய இளைஞர்கள் இப்படித்தான் என்று வகை தொகை இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் போட்டியிடுகிறார்கள். வெற்றி ஒன்றே இலக்கு, அதை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று முயற்சிக்கிறார்கள். தன்னலமும், போட்டியும், பொறாமையும் அவர்களை எப்படியெல்லாம் செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறார்கள். திடீர் திருப்பமாக, வந்திருக்கும் ஒரு போட்டியாளர் தீவிரவாதி என்கிறார்கள். கடைசியில் யார் அதிபருடன் கை குலுக்குகிறார் என்பது உச்சக் காட்சி.

சுமார் 90 நிமிடம் படம் ஓடுகிறது. ஹிந்திப் படமா ஆங்கிலப் படமா என்று கூற முடியாமல் ஒரே மணிப்பிரவாளம். ஹிந்தி வசனங்களுக்கு திரையில் கீழே ஆங்கில எழுத்துப் போட்டதால் இதை ஆங்கிலப் படம் என்று வகைப் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் ஆறு வகைப் இந்தியப் பாணியில் ஆங்கிலம் பேசுகிறார்கள் இளைஞர்கள்.

நகைச்சுவை என்று எடுத்திருகிறார்கள். ஆனால் படம் முழுக்க அவல உணர்ச்சிதான் மேலோங்கியது. அடுத்து என்ன வரப் போகிறது என்ற குறுகுறுப்பை வளர்த்தாலும், காட்சிக்குக் காட்சி அவலம் அதிகரிப்பதால் படம் எப்போது முடியும் என்றுதான் இருந்தது.

ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது. இரு ஜாடிகளில் நிறைய நண்டுகள் இருக்கும், ஒன்றில் இந்திய நண்டுகள். மற்றொன்றில் வேற்று நாட்டு நண்டுகள். வேற்று நாட்டு நண்டுகள் இருந்த ஜாடி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலியாகி விடும். நண்டுகள் ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொண்டு அனைத்தையும் வெளியேற்றி விடும். இந்திய ஜாடியில் நண்டுகள் அப்படியே இருக்கும். உள்ளே பார்த்தால் ஏதாவது ஒரு நண்டு ஜாடியின் விளிம்புக்கு ஏற முயற்சிக்கும். மற்றவை உடனே அந்த நண்டை இழுத்துக் கீழே தள்ளி விடும்.

அவுட்சோர்ஸ்ட், ஸ்லம்டாக் வரிசையில் இந்தியக் குழப்பங்களைச் சொல்லும் இன்னொரு படம்.

No comments:

Blog Archive