விக்கீபீடியாவைப் போல் இது ஒரு திறந்தவெளி மென்பொருள் சேவை.
நம்ம ஊரில் வரைபடம் பார்த்து போகும் இடம் கண்டுபிடிப்பது வழக்கில் இல்லை. தெருமுனை டீக்கடையில் அல்லது ஆட்டோ ஸ்டாண்டில் அல்லது சிக்னலில் பக்கத்தில் நிற்கும் ஆட்டோ காரரிடம் கேட்டு 'பிடிச்சு பிக் அப் பண்ணி போய்க்கிட்டே' இருப்பவர்கள் நாம். ஆனால் சென்னை போன்ற மாபெரும் நகரங்களில் 'சுப்பு தெருவில் இருக்கும் ஹார்பர் மணி' வீட்டுக்கு வழி கேட்டால் அன்னாருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவரே மேலும் கீழும் நம்மைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கும் நிலை வந்து விட்டது நித்திய உண்மை.
ஜிபிஎஸ் (GPS) தொழில் நுட்பம் மூலம் கைபேசியில் வரைபடம் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் வரைபடம் அதரப் பழசு. சமகாலத் தெருக்களுக்கும் கைபேசி காட்டும் வரைபடத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அதைப் பார்ப்பவர் தவறை கைபேசி தயாரிப்பவர்களுக்குச் சுட்டிக் காட்டவும் வழி கிடையாது. கூப்பிட்டுச் சொன்னாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ மேலோட்டமாக இன்சொல் பேசிவிட்டு வெறுமே இருந்து விடுவார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு 'கூகிள் எர்த்' என்ற மென்பொருள் வெளிவந்தது. இந்த மென்பொருளை நாம் தரவிறக்கி நம் கணினியில் நிறுவி உபயோகிக்க வேண்டும். இந்த மென்பொருள் உதவியுடன் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் கட்டடங்களையும் தெருக்களையும் இனம் கண்டு பிடித்துப் பெயரிட முடியும். இந்தியாவின் மேல் எடுக்கப் பட்ட பல செயற்கை கோள் புகைப்படங்கள் மேல் மேகமூட்டம் தெரிந்ததால் பல இடங்களில் தரையில் இருப்பதை இனம் கண்டு பிடிக்க முடியாது. 'கூகிள் எர்த்' உபயோகித்து நாமே நம் பகுதி வரைபடத்தை தொகுத்துத் திருத்த முடியாது. கட்டடங்களுக்கும் தெருக்களுக்கும் பெயர் வைப்பதோடு சரி.
இன்றைய 'திறந்தவெளி வீதி வரைபடம்' அடுத்த கட்ட மென்பொருள் புதினம். மென்பொருளை தரவிறக்கத் தேவையில்லை. செயற்கைக் கோள் வரைபடங்கள் தெளிவாக உள்ளன (நான் பார்த்த வரை). நம்மால் செயற்கைக் கோள் பட உதவியுடன் கட்டடங்கள் மற்றும் சாலைகளின் எல்லைகளை மாற்றி எழுத (தொகுக்க) முடியும். தெளிவாக அறுதியிட முடியும். ஜீபிஎஸ் கருவி நம்மிடம் இருந்தால், நாம் சாலையில் பயணித்து பயணம் செய்த பாட்டையைக் கருவியில் பதிவு செய்து இந்த மென்பொருளில் சேர்ப்பதன் மூலமும் வரைபடத்தை மேலதிகத் துல்லியமாகத் திருத்த முடியும்.
பொதுமக்களால் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்தச் சேவை எதிர்காலத்திற்கு மிகவும் உபயோகப் படும். அரசுக்குச் செலவில்லாமல், அவர்களின் சோம்பேறித்தனமான இடையூறும் இல்லாமல் நாமாக நம் சுற்றுப் புறச் சாலைகளை தெளிவாகவும் துல்லியமாகவும் ஒரு பொது வரைபடத்தில் பராமரிக்க இயலும். ஆனால் வரைபடத்தின் துல்லியத்திற்கு தனி ஒருவரைப் பொறுப்பாக்கி தவறுகளுக்கும், அவற்றின் காரணமாக ஏற்படும் குற்றங்களுக்கும் வழக்கு போட்டு உதைக்க முடியாத காரணத்தால் இத்தகைய வரைபடங்களை நம்பி நுகர்வதில் ஆபத்துகள் உள்ளன. ஒரு வரைபடத்தை எத்தனை போர் தொகுத்திருக்கிறார்கள் என்ற விபரம் தெரிந்து உபயோகித்தால் ஆபத்துகளை ஓரளவு தவிர்க்கலாம்.
சி கே பிரஹலாத் (New Age of Innovation) புத்தகத்தில் சொல்வது போல் அடுத்த சந்ததியினர் தொழில் நுட்ப உதவியுடன் அரசின் இடைப்பாட்டையே தூக்கி எறியும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். லஞ்சத்திற்கும், ஊழலுக்கும், மெத்தனப் போக்கிற்கும் பதில்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று மனதில் தோன்றுகிறது.
No comments:
Post a Comment