Sunday, March 29, 2009

பங்குச் சந்தையில் பணம் பண்ணுவதா! போங்கப்பா!!

பங்குச் சந்தையில் சரியான சமயத்தில் பங்குகளை வாங்கி விற்கத் தெரிந்தவனுக்குத்தான் அதெல்லாம் முடியும். "ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி"யிருந்து கோட்டை விட்ட கதைகள் ஏராளம். பேராசையும் (Greed) திகிலும் (Fear) ஆட்டிப் படைக்கும் சந்தைக் களம் அது.

இது போன்ற (சராசரி?!) நினைப்புகளை உடைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அது "மதிப்பு சராசரியாக்கும் முறை" (Value Averaging) என்ற புத்தகம். சல்லிசாக ரூ150 விலையில் ஹிக்கின்பாதம்ஸில் கண்ணில் பட்டது. மைக்கல் ஈ எட்லேசன் (Michel E Edleson) என்பவர் எழுதியிருக்கிறார். ISBN 81-7094-228-4. அவர் இந்தப் புத்தகத்தை அமெரிக்க பங்குச் சந்தையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். மேலும் இவர் கூறும் முறையில் பங்குகளில் நேரடியாக வர்த்தகம் (Stock Trading) செய்யாமல் பரஸ்பர நிதிகளை (Mutual Fund) உபயோகிப்பதை அறிவுறுத்துகிறார்.

பங்குச் சந்தையில் காலையில் வாங்கி மாலையில் விற்கும் (ஏறக்குறைய சூதாட்டத்திற்கு ஈடான) தினப்படி வர்த்தக (Daily Trading) முறை கேள்விப் பட்டிருக்கிறோம். நிறுவனங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து அறிந்து நீண்ட கால முதலீடு செய்யும் அடிப்படை முதலீட்டு (Fundamental Investing) வகை கேள்விப்பட்டிருக்கிறோம். நண்பரோ அல்லது நட்பான தரகரோ துப்புக் கொடுக்க அதை வைத்து பங்கை வாங்கிப் போடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.

நம் ஆசிரியர் இதெல்லாம் எதுவுமே தேவையில்லை (!?!) என்கிறார். திட்டமிட்ட முதலீட்டு (Systemmatic Investment) முறைகள் இரண்டை அறிமுகப் படுத்தும் இவர் கொள்கை விதிப் படி முதலீடு (ஃபார்முலா இன்வெஸ்டிங்) செய்ய, முறையே இரண்டு கொள்கை விதிகளை அறிமுகப் படுத்துகிறார்.

அந்த விதிகளில் ஒன்று பங்கு விலையைச் சராசரியாக்கும் (Cost Averaging) விதி. மற்றொன்று பங்கு மதிப்பைச் சராசரியாக்கும் (Value Averaging) விதி.

சுமார் 20 வருடங்களில் பங்குச் சந்தையின் செயல்பாட்டை ஆராய்ந்து அதன் மூலம் தனது விதிகளை ஆதாரத்துடன் நிலை நிறுத்தியிருக்கிறார். விதியை விதியால் (formula) வெல்லும் வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்!

எளிமையாக எழுதப் பட்டிருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம் இது. விதியைப் புரிந்து கொண்டு தற்போது செயல் படுத்திக் கொண்டிருப்பதாலும், விதியை விவரிக்க ஒரு இடுகை போதாது என்ற காரணத்தாலும் அந்த விதியை பின் வரும் ஒரு இடுகையில் (அது இந்தியப் பங்குச் சந்தையிலும் வேலை செய்கிறது என்று எனக்குத் தோன்றினால்) காண்போம்.

No comments:

Blog Archive