- இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே. வேறு எவரும் இதில் சம்பத்தப் படவில்லை
- அண்மையில் களங்கப் பட்டிருக்கும் நிறுவனத்தில், அதன் ஊழியர்களிடம் இருக்கும் சத்தியம், அவர்கள் செய்யும் சேவையில் இருக்கும் சத்தியம் மற்றும் களங்கப் பட்டிருக்கும் நிறுவன நுகர்வோர் நம்பிக்கையில் உள்ள சத்தியம் பற்றி நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம். அவர்களை எள்ளளவும் சந்தேகப் படவோ, சிறுமைப் படுத்தவோ நாம் இதன் மூலம் விழையவில்லை
நரிகள் ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டு கிடையில் நாட்டாமை செய்திருக்கிறார்கள். குட்டு வெளியாகும் என்ற பயம் வந்ததும் தலைமை நரி நான் மட்டும்தான் தோல் போர்த்தியிருக்கிறேன். மற்றவர்கள் உண்மையிலேயே ஆடுகள் என்று அறிக்கை விட்டிருக்கிறது.
எது நரி, எது ஆடு என்று இனம் புரியாமல் எல்லாரும் தவித்துக் கொண்டிருக்கையில் வெளியேறிய நரி சொல்வதை எல்லோரும் நம்புங்கள், நாங்களெல்லாம் ஆடுகள்தான், நாட்டாமைக்கு வருகிறோம் என்று சிலர் கிளம்பினார்கள்.
நீ இதுவரை ஏற்றுச் செய்த தலைமைப் பொறுப்பில் உன் தலை மேல் வரவுக் குறிக்கோள், செலவுக் குறிக்கோள், லாபக் குறிக்கோள் என்று எவரும் கத்தி வைக்கவில்லையா? தணிக்கை செய்யப் பட்ட காலாண்டு அறிக்கைகளை உலகத்திற்குச் சொன்ன போது உனக்குச் சொல்லவில்லையா? நடப்புக்கும் அறிக்கைக்கும் வித்தியாசம் இருந்திருக்குமே அதை உனக்குக் கண்டு பிடிக்கத் தெரியவில்லையா? உன்னை பொம்மலாட்ட பொம்மை போல் செலுத்திக் கொண்டிருந்தார்களா? அப்படி செலுத்திய மேலதிகாரிகள் கீழே நீ நீடிக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்க நம் மர மண்டைக்கே தோன்றுகிறது. புறப்பட்ட 'ஆடு'களைக் கேள்வி கேட்க நாதியில்லாமல் இருந்த மாதிரித் தெரிந்தது.
"குற்றம் நடக்காததற்கு எவண்டா சாட்சி இங்கே" என்றார்களாம். "குற்றம் சாட்டப் பட்டவந்தான் ஐயா!" பதில் வந்ததாம் பணிவாக!! 'கேட்பவன் கேணையன் என்றால் எருமை கூட ஏரோப்பிளேன் ஒட்டும்' என்பார்கள். அந்தக் கதை ஏறக்குறைய அரங்கேறிக் கொண்டிருந்தது.
நிறுவனத்தின் தரத்தை உலகறிய அளந்து காட்டுவதில் என்னை விட விற்பன்னன் எவன் என்று மார் தட்டிய வணிகச் செய்தி ஊடகங்களும், ஆய்வு நிறுவனங்களும், மக்கள் கவனத்தை திசை திருப்பும் பரபரப்புச் செய்தி வெளியிடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
இவர்களில் எவனுக்கும் இதுவரை 'ஐயா தவறுகளை உடனுக்குடன் வெளிச்சம் போடத் தவறிவிட்டேன். என் கணிப்புகளையும் ஆய்வறிக்கைகளையும் மிகவும் நம்பியதாலும் கூட பலர் பணத்தை நரிக்குக் கொடுத்து விட்டு விழிக்கிறீர்கள். வருந்துகிறேன். திருத்திக் கொள்கிறேன்" என்று சொல்லும் தைரியமும் பக்குவமும் இல்லை. பொறுப்பை தானாகக் கையில் எடுத்துக் கொண்டு சரியாக வேலை செய்யாதவனும் ஒருவகையில் தவறுக்குத் துணை செல்பவனே. இவர்களில் எத்தனை பேர் நரிகள் கொடுத்த விருந்துகளிலும் கேளிக்கைகளிலும் திளைத்துக் களித்தவர்கள் என்று எவருக்கும் நினைவில் வரவில்லை. சிக்கிக் கொண்ட "ப்ரைஸ்வாட்டர் ஹவுஸ்" மேல் எரியும் தீயில் இவர்கள் குளிர் காய்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் சில (பெயர் சொல்ல விரும்பவில்லை) நானே கடைந்தெடுத்த மாணிக்கம் என்ற தொனியில் பிளிறிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை தெளிவாகப் படம் போட்டுக் காட்டுகிறது.
மத்திய அரசு வரலாற்றில் இல்லாத முதல் முறையாகத் தலையிட்டிருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
திருக்குறள்
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு [குற்றங்கடிதல் 43:6]
2 comments:
Well said sir
this is the real position the IT field investment for the public..
our Govt put long term deposit more money that Sathiyam group.
சில பல ஆந்திர அரசியல் (வியாதி) வாதிகள் இந்நிறுவனத்தில் நிறைய முதலீடு செய்துள்ளார்கள்.
அவர்கள் பணத்தை மீட்கவே இந்த ஒரங்க நாடகம். மற்றபடி ஒரு மண்ணும் நடக்காது.
பொறுத்திருந்து பார்போம்.
Post a Comment