Sunday, August 21, 2005

அஞ்சல்காரர் BPO பணியாளராகும் கதை !!

எனது தந்தையின் பெயர் சற்று அசாதாரணமானது. இந்தியாவில் அவர் வாழ்ந்த பல ஊர்களில் (பெரு நகரங்கள் தவிர) அவர் பெயரையும் ஊரையும் மட்டும் முகவரியில் குறிப்பிட்டு அவருக்குத் அஞ்சல் அனுப்பினால் அது அவரது வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ போய்ச் சேர்ந்து விடும். நளினசேகரன், தூத்துக்குடி என்று முகவரியிட்ட பல கடிதங்கள் தவறாமல் அவரைச் சென்றடைந்துள்ளன. ஏனென்றால் ஊரிலேயே அந்தப் பெயரில் ஒருவர்தான் இருக்கிறார் என்று அஞ்சல்காரருக்கு வழக்கத்தில் தெரியும்.

நாட்டின் குடிமக்களின் பெயரையும் அவர்கள் வசிக்கும் முகவரியையும் பற்றிய ஆழ்ந்த அறிவு அஞ்சல் துறைக்கு உள்ளது. இந்த அறிவு அஞ்சல் வினியோகிக்கும் அஞ்சல் துறைப் பணியாளர்களிடையே பொதிந்துள்ளது.

இந்த அறிவு அஞ்சல் துறையின் வியாபாரத்திற்கு உதவும் ஒரு சொத்து. இந்தச் சொத்தை இது நாள் வரை அஞ்சல் வினியோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வந்த அஞ்சல் துறை இப்போது விழித்துக் கொண்டிருக்கிறது.

வங்கிகள் தனிப்பட்ட கடன், விவசாயக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் என்று கடன்களை அள்ளி வீசிய வண்ணம் இருக்கின்றன. வளரும் இந்தியாவிற்கு இத்தகையக் கடன்கள் மிகத் தேவை. கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு வராக் கடன்கள் மூலம் ஆபத்து இருப்பதையும், கடனாளும் திறனுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்கள் கடன் வழங்க வேண்டிய கட்டாயத்தையும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். தனிநபர் அடையாள அட்டை இன்னமும் இந்தியாவில் வழங்கப் படாத நிலையில் பினாமி பெயரில் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகம்.

உண்மையான விண்ணப்பதாரர்களை இனம் கண்டுகொள்ள இது நாள் வரை தனது செலவில் ஆட்களை பணியமர்த்தி தேவையான தகவல்களைச் சேகரித்து வந்த வங்கிகளுக்கு, இந்திய அஞ்சல் துறை, முகவரி மற்றும் அடையாளச் சான்றிதழ் வழங்கும் சேவையை அளிக்க முன்வந்துள்ளது. சிடிபேங்க், ஜீ.ஈ மனி (G.E Money) போன்ற நிறுவனங்கள் அஞ்சல் துறையின் இந்தப் புதிய சேவையை நுகர ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இதேபோல தொலை தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் பொய்யான விண்ணப்பதாரர்களை இனம் கண்டுபிடிக்கும் தேவை உள்ளது. ரிலையன்ஸ் இன்·போகாம், டாடா இண்டிகாம் போன்ற நிறுவனங்களும் கூட அஞ்சல் துறையுடன் விண்ணப்பதாரர் அடையாளச் சான்று பெறும் சேவைக்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்கள்.

அஞ்சல் துறைக்கு இதன் மூலம் 3000 கோடி ரூபாய் அதிக வருமானம் வரும் என்று தெரிகிறது.

இந்த அமைப்பு பெருநகரங்களில் எந்த அளவிற்குத் திறம்பட இயங்கும் என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. நானும் எனது பகுதி அஞ்சல்காரரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூடக் கிடையாது. எனக்கு வரும் கடிதங்கள் மூலம் என் பெயரும், முகவரியும் அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் பெயரைச் சொன்னால் என்னை அவரால் அடையாளம் காட்ட இயலுமா என்பது சந்தேகம். ஆனால் நிச்சயமாக கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இது சாத்தியம். 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். ஆகவே அஞ்சல் துறையின் புதிய திட்டம் வெற்றி பெறும்.

அடுத்த தீபாவளிக்கும் பொங்கலுக்கும் வீட்டுக்கு வரும் அஞ்சல் பணியாளரை அதிக நேரம் 'வெயிட்' செய்ய வைக்காமல் 'வெயிட்'டாக கவனியுங்கள். பின்னால் கண்டிப்பாக உதவும்!

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல திட்டம் தான். கிராமங்களில் நிச்சயம் உதவும் . எங்கள் ஊர் அஞ்சல்கார ருக்கு சுற்று வட்டார கிராம மக்கள் குறைந்தது 3000 பேரையாவது தெரியும் !!!!

Blog Archive