Sunday, August 21, 2005

விண்ணுக்கு மின் தூக்கி ?!

இப்பொழுது விண்ணுக்குச் செல்ல ஏவுகணைகளை உபயோகிக்கிறோம். கட்டுப் படுத்தப் பட்ட வேதிப்பொருள் வெடிப்பிலிருந்து கிடைக்கும் சக்தியை உபயோகித்து, சுமைகளை விண்ணை நோக்கிச் செலுத்துகிறோம். இந்த முறை மிகவும் வினைத்திறன் (efficiency) குறைந்தது.
  • செலுத்தப் படும் சுமையின் (payload) எடை ஏவுகணை அமைப்பின் எடையில் ஒரு சிறிய சதவிகிதமே
  • செலுத்தப் படும் ஏவுகணை இயக்கிகள் பல கோடி டாலர்கள் செலவில் கட்டமைக்கப் பட்டு, ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப் படுகின்றன
  • ஏகப் பட்ட எரிபொருள் செலவாகிறது
  • ஒரு கிலோ எடையுள்ள சுமையை விண்ணுக்குச் செலுத்த சுமார் 20000 டாலர்கள் செலவு பிடிக்கிறது
வளி மண்டலத்தைக் கடந்தாலே விண்ணில் நிலவு, செவ்வாய் போன்ற மற்ற இடங்களுக்குச் செல்ல பாதி தூரத்தைக் கடந்தற்கு ஈடாகும். ஏனென்றால், வளி மண்டலத்தைக் கடப்பதற்கு மட்டுமே பாதிக்கு மேல் எரிபொருள் செலவாகிறது.

சமீபத்தில் கொலம்பியாவின் விபத்திற்குப் பின்னரும், டிஸ்கவரி ஏவப் பட்ட போது கொலம்பியாவின் பிரச்சனைகள் திரும்பவும் தலைதூக்கியதாலும், அடுத்த விண்கலமான அட்லாண்டிஸ் ஏவும் நாளை அடுத்த ஆண்டு மத்திக்கு அமெரிக்கா தள்ளி வைத்திருக்கிறது.


ந்நிலையில் விண்ணுக்குச் செல்ல மற்றொரு புதிய முறையைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மின் தூக்கி (elevator or lift) மூலம் பொருட்களையும் மனிதர்களையும் ஒரு கிலோவிற்கு 200 டாலர் செலவில் விண்ணுக்கு எடுத்துச் செல்லும் முறைதான் அது.

இந்த முறையில், பூமத்திய ரேகையில் புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து 100000 கிலோமீட்டர் நீளமுள்ள செங்குத்தான கம்பிப் பாதை அமைக்கப் படும். இந்த கம்பியின் 700 டன் எடையுள்ள எதிர் எடை (counter weight) கம்பியின் எதிர் முனையில் பொருத்தப் பட்டு பூமியின் அச்சு சுற்றும் வேகத்திலேயே விண்ணில் சுற்றிக் கொண்டு இருக்கும். இந்த மின் தூக்கி அமைப்பின் புவி ஈர்ப்பு மையம் பூமிக்கு மேல் சுமார் 30000 கிலோமீட்டர் உயரத்தில் இருக்குமாறு வடிவமைத்தால், இந்த அமைப்பு சமநிலை பெறுவதுடன், கம்பியின் விறைப்பும் தேவையான அளவுடன் இருக்கும். ஆகவே கம்பி செங்குத்தாக பூமியுடன் சுற்றி வரும்.

கம்பியின் புவி ஈர்ப்பு மையத்தில் ஒரு தட்டு அமைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளையும் அங்கு கொண்டு செல்லலாம் என்கிறார்கள். அதே போல விண்ணில் மற்ற இடங்களுக்குச் செல்ல அந்த தட்டிலிருந்து ஏவுகளம் அமைக்கலாம்.

இந்தக் கம்பியின் மேல் பயணிக்கும் மின் தூக்கி சுமார் 7 டன் எடை இருக்கும். அது 13 டன் சுமையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டிருக்கும். இதற்குத் தேவையான மின்சாரத்தை லேசர் பிம்பங்களின் மூலம் பூமியிலிருந்து செலுத்தலாம் என்று யோசிக்கிறார்கள். மணிக்கு சுமார் 190 கி.மீ வேகத்தில் மேலேறும் மின் தூக்கி, எட்டு நாட்களில் தரையிலிருந்து புவியீர்ப்பு மையப் புள்ளிக்குப் போய்ச் சேரும். நீங்களும் நானும் (பணமிருந்தால்) கோடை விடுமுறைக்கு விண்ணுலகம் (?!) போய் வரலாம்.

இந்த யோசனை ஒன்றும் புதியதல்ல என்கிறார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கான்ஸ்டாண்டின் ட்ஸையால்காவ்ஸ்கி என்பவர் இதைப் பற்றிப் பேசி விட்டாராம். 1960 களில் இந்த யோசனையைத் தூசி தட்டிப் பார்த்தவர்கள், இதற்குத் தேவையான கம்பியை அமைக்கும் பொருட்கள் உலகில் இல்லை என்று இதைக் கைவிட்டார்கள். எ·குக் கம்பியைப் போல பலமடங்கு பலம் பெற்று, அதே சமயம் எடையில் அதை விடப் பல மடங்கு லேசான பொருளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

1991 ஆம் ஆண்டில் சுமியோ லிஜிமா என்ற ஜப்பானிய ஆய்வாளர் கரி நானோ குழாயைக் (Nano Tube) கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு விண்ணுக்கு மின் தூக்கி அமைக்கும் யோசனை மீண்டும் உயிர் பெற்று விட்டது.

மேலும் தெரிந்து கொள்ள ஆசையிருப்பவர்கள் இங்கே அல்லது மேலுள்ள படத்தில் சொடுக்கவும்.

2 comments:

Boston Bala said...

மற்ற போஸ்ட்களைப் போலவே பயனுள்ள பதிவு. நன்றிகள்.

Vi said...

சிந்தனையை தூண்டக் கூடிய பதிவுகள். புதிய தகவல்கள், பிடித்திருக்கிறது.

Blog Archive