Wednesday, September 07, 2005

உலகின் மில்லீனியம் (Millenium) வளர்ச்சிக் குறிக்கோள்கள்

2000 ஆம் ஆண்டில் நடந்த ஐக்கிய நாடுகளின் மில்லீனியம் உச்சி மாநாட்டில் உலகின் வசதிகள் ஆகக் குறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்கு வேண்டிய முதலீடுகளைச் செய்யப் போவதாக உலக நாடுகள் உறுதி எடுத்துக் கொண்டன. உலகின் வறுமையின் தீவிரத்தை 2015 ஆம் ஆண்டிற்குள் கணிசமாகக் குறைக்க அவர்கள் எட்டுக் குறிக்கோள்களையும் அவற்றிற்கான இலக்குகளையும் நிர்ணயித்தனர்.

குறிக்கோள் 1:

தீவிரமான ஏழ்மையையும், பசியையும் அறவே ஒழிக்க வேண்டும்.
  • இலக்கு: ஒரு டாலருக்கும் குறைவாக ஒரு நாளைக்குச் சம்பளம் பெறுவர்களின் மக்கள் தொகை விகிதம் 2015 ஆம் ஆண்டிற்குள் பாதியாகக் குறைக்கப் படவேண்டும். தொடர்ந்து பசியில் வாடுபவர்கள் எண்ணிக்கை விகிதத்திற்கும் இதே இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.
குறிக்கோள் 2:

உலகில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும்
  • இலக்கு: உலகின் அனைத்துக் குழந்தைகளும் 2015 ஆம் ஆண்டுக்குள் ஆரம்பக் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

குறிக்கோள் 3:

ஆண் பெண் சமநிலை ஊக்குவிக்கப் பட வேண்டும். பெண்களுக்கு சம அதிகாரம் வழங்கப் பட வேண்டும்.

  • இலக்கு: தற்போது ஆரம்ப, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி பெறுவதில் ஆண்களுக்கும் பெண்டிருக்கும் இருக்கும் வித்தியாசங்கள் 2015 ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும்.

குறிக்கோள் 4:

குழந்தைகள் இறப்பது குறைக்கப் பட வேண்டும்.

  • இலக்கு: ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்காக 2015 ஆம் ஆண்டுக்குள் குறைக்கப் பட வேண்டும்.

குறிக்கோள் 5:

ஆரோக்கியமான பிரசவங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றம் வேண்டும்.

  • இலக்கு: பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையில் 75 சதவிகிதமாக 2015 ஆம் ஆண்டிற்குள் குறைக்கப் பட வேண்டும்.

குறிக்கோள் 6:

ஹெச். ஐ. வி, எய்ட்ஸ், மலேரியா முதலிய நோய்கள் போராடி அழிக்கப் பட வேண்டும்

  • இலக்கு: ஹெச். ஐ. வி, எய்ட்ஸ் நோய்கள் பரவுவது தடுக்கப் பட வேண்டும். இந்த நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். மலேரியா பரவும் வேகம் மட்டுப் படுத்தப் பட வேண்டும்.

குறிக்கோள் 7:

சுற்றுச் சூழல் சீராகப் பராமரிக்கப் படுவது உறுதி செய்யப் பட வேண்டும்.

  • இலக்கு: சீராக சுகாதாரமான குடிநீரும், அடிப்படைக் கழிவு நீக்கும் வசதிகளும் கிடைக்காத மக்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டிற்குள் பாதியாகக் குறைக்கப் பட வேண்டும்.

குறிக்கோள் 8:

உலக அளவில் வளர்ச்சிக்காக அனைத்து நாடுகளும் இணை சேர வேண்டும்.

  • இலக்கு: வளர்ச்சியில் பின் தங்கியுள்ள நாடுகளின் வளர்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டும். (தாராளமான வளர்ச்சி நிதி வழங்குவதும் இதில் அடங்கும்)

No comments:

Blog Archive