Friday, August 19, 2005

மும்பை பங்குச் சந்தை !!

130 ஆண்டுகளாக இயங்கி வந்த மும்பை பங்குச் சந்தை இன்று முதல் லாபமீட்டும் நோக்கமுள்ள ஒரு பதிவு செய்யப் பட்ட நிறுவனமாக தேவையான கழகக் கட்டமைப்புடன் (corporate structure) இயங்க ஆரம்பித்துள்ளது.

பங்குத் தரகர்களால் அவர்கள் வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட இந்த நிறுவனம், இத்தனை நாள் லாபமீட்டும் நோக்கமில்லாத ஒரு அமைப்பாக இயங்கி வந்தது.
  • மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியிடு பெரும்பாலானோர் கவனிக்கும் ஒரு முக்கிய குறியீடு
  • அதே போல் இந்தச் சந்தையில்தான் இந்தியாவின் பெரும்பான்மை நிறுவனங்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன
இந்த இரண்டு பெருமைகளைத் தவிர முக்கியமான மற்ற பல விஷயங்களில் அரசு ஆரம்பித்த தேசிய பங்குச் சந்தைதான் முன்னணியில் உள்ளது.

சந்தையில் பண வர்த்தகம் (cash trading), வரம்பு வர்த்தகம் (margin trading) என்று இரு வகை வர்த்தகங்கள் உண்டு.

பண வர்த்தகத்தில் முதலிட்டாளர் விற்கும் அல்லது வாங்கும் பங்குகளை கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும். விற்பவரின் கையில் கண்டிப்பாக அவர் விற்கும் அளவிற்கு பங்குகள் அவரது உரிமையில் இருக்க வேண்டும்.

வரம்பு வர்த்தகத்தில் ஒப்பந்தத் தீர்வு கால (settlement time) ஆரம்பத்தில் விற்றப் பங்குகளை அந்தக் காலம் முடியும் முன் சந்தையில் வாங்கியோ அல்லது வாங்கிய பங்குகளை விற்றோ ஈடு (square off) கட்டி விடலாம். விற்பவரின் கையில் பங்குகள் இருக்க வேண்டிய அவசியமில்லை.

பண வர்த்தகப் பிரிவில் இந்தியாவில் நடக்கும் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாகவே மும்பைப் பங்குச் சந்தையில் வர்த்தகம் நடந்து வந்தது.

அதே போல Derivatives பிரிவில் மும்பைப் பங்குச் சந்தையில் ஆகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் நடந்து வந்தது.

பங்குச் சந்தை உரிமையையும் வர்த்தக உரிமையும் இணைத்து இயக்கும் கொள்கையைக் கடைப்பிடித்ததாலும், சந்தைச் சீர்திருத்தங்களை மும்பைப் பங்குச் சந்தை நிறுவனர்கள் தொடர்ந்து புறக்கணித்ததாலும் இந்த நிலை வந்தது என்கிறார்கள் இந்தத் துறை வல்லுனர்கள்.
புதிய கட்டமைப்புடனும் புதிய நோக்கங்களுடனும் புதிய பயணம் தொடங்கியிருக்கும் இந்தியாவின் மிகப் பழமையான சந்தை வெற்றிகள் பல காண வாழ்த்துவோம்.

No comments:

Blog Archive