Sunday, August 14, 2005

இந்திய அமெரிக்க உறவுகள் - ஒரு அலசல்

இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை அந்த இரு நாட்டு அரசுகளுக்கிடையே உள்ள உறவாகத்தான் பெரும்பாலானோர் கருதுவார்கள். இருந்தும் நடப்பில் வணிக உறவுகளும், இரு நாட்டுக் குடிமக்களுக்கிடையே உள்ள தனிப் பட்ட உறவுகளும், அவற்றின் தாக்கங்களும் மிக முக்கியமானவை. இந்த உறவுகள் சில சமயம் அரசுகளின் உறவுகள் செல்லும் திசைக்கு எதிர் திசையில் செல்லக் கூடும். அத்தகைய நிலை, அரசின் உறவுகளைக் கூட எதிர் திசையில் திருப்பி விடக் கூடிய வல்லமை பெற்றது. இதற்கு மிகப் பெரிய உதாரணம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள உறவின் தற்போதைய நிலை.

அணி சேரா நாடுகள் என்று தங்களை பிரகடனப் படுத்திக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, பனிப்போர் (சுய உந்துதல் அற்ற போர்?! ஆங்கிலத்தில் - Cold War) நடந்த சமயத்தில், உண்மையில் அரசியல் காரணங்களுக்காக வல்லரசுகளில் ஒன்றான சோவியத் யூனியனிடம் நெருக்கம் காட்டி வந்தது. அதேபோல் பிரகடனம் செய்து கொண்ட சீனாவும் பாகிஸ்தானும் கூட உண்மையில் அமெரிக்காவிற்கு ஆதரவான செயல்கள் புரிந்து வந்தன.

இதெல்லாம் நடந்த போதிலும் இந்தியாவின் மக்களாட்சி என்ற பரிட்சை வெற்றி பெற வேண்டும் என்ற விழைவு அமெரிக்காவிற்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. கம்யூனிஸம் என்ற அதற்குப் பிடிக்காத தத்துவம் தழைக்கக் கூடாது என்ற சுயநலமும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். அதனால்தான் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடிய போதெல்லாம் அமெரிக்கா உதவிக் கரம் நீட்டியது.

ஆனால் 1970 களில் அமெரிக்காவின் நண்பனான பாகிஸ்தானைப் பிரித்து வங்காள தேசம் என்ற புதிய நாடு உருவாக இந்தியா துணை நின்ற போது அமெரிக்கா அதனை எதிர்த்தது. அப்போது எதிர்வரவிருந்த போருக்குள் சீனா நுழைந்து விடாமல் தடுக்க ஒரு பரஸ்பர ராணுவ உதவி ஒப்பந்தத்தை சோவியத் யூனியனுடன் அமைத்துக் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுடன் மூண்ட போரில் வென்றது. அமெரிக்காவிற்கு கோபம் தலைக்கேறி, இந்தியாவிற்குச் செய்து வந்த அத்தனை உதவிகளையும் நிறுத்திக் கொண்டது. இந்தியா பிறகு அணுகுண்டுச் சோதனை மேற்கொண்ட பொழுது அமெரிக்காவுடனான உறவுகள் மேலும் மோசமடைந்து இந்தியாவின் மேல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.

இந்தியாவின் அரசியல் உறவுகள் சோவியத் யூனியனுடன் சற்று இணக்கமாக் அமைந்தாலும், இந்திய மக்களின் பழக்கங்கள் வேறுவிதமாக இருந்தன. அவர்கள் ரஷ்ய மொழி படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டார்கள். சாரி சாரியாக அமெரிக்காவில் சென்று மருத்துவம் படித்தார்கள். பிற்காலத்தில் கணிப் பொறியியல் படித்தார்கள். அங்கேயே குடியேறினார்கள். அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டார்கள். அமெரிக்கர்களுக்கு இந்தியாவில் இருக்கும் திறமைகளை எடுத்துக் காட்ட ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஜீன்ஸ் அணிந்து கொண்டார்கள். ராக் இசை கேட்பதில் நாட்டம் காட்டினார்கள். இரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவுகள் ரோலர்-கோஸ்டர் (Roller Coaster) பயணம் போல் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தாலும், தனி நபர் உறவுகள் மற்றும் இணக்கங்கள் இரு நாடுகளைடையே வலுப் பெற்றுக் கொண்டிருந்தன.

இன்று தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா சக்கைப் போடு போடுகிறதென்றால், அதற்கு இங்கிருந்து சென்ற சாதாரண இந்தியக் குடிமகன் அமெரிக்கர்களுக்கு இந்தியத் திறமைகளை எடுத்துக் காட்டி அவர்களுக்கு இந்தியாவின் மேல் நம்பிக்கையை வளர்த்தது ஒரு அசைக்க முடியாத முக்கிய காரணம்.

இந்தியாவில் நேருவின் சோஷலிஸக் கொள்கையின் மேல் மிகுந்த நம்பிக்கையும், சந்தைப் பொருளாதாரம் ஆபத்து மிக்கது என்று அதன் மேல் அவநம்பிக்கையும் வைத்திருந்த இந்தியப் பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மகளுக்கு அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்தில் எதிர் நீச்சல் அடிக்கக் கூடிய மணமகனைத் தேடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். இப்படியாக இந்தியக் குடிமகனின் நம்பிக்கைகள் மாறத் தொடங்கின. இன்று அமெரிக்காவில் தொழில் அனுபவம் பெறுவது தங்கள் வளர்ச்சிக்கு முக்கியம் என்று நினைப்பவர்கள்தான் இந்தியாவில் அதிகம். அங்கேயே குடியேறும் வாய்ப்புக்கு ஏங்குபவர்களும் முயற்சிப்பவர்களும் அனேகம்,

1990 களில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வந்த பொழுது பழமையில் ஊறிய பலருக்கு அதில் நம்பிக்கையில்லை. முந்தைய பா.ஜ.க அரசின் தலைவர்களில் சிலர்தான் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையில் நண்பர்கள் என்று கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இடையில் இந்தியத் தொழில் மற்றும் பொறியியல் வல்லுனர்களின் திறமையால் தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா பலமான நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டது. இருநாடுகளின் சாதாரணக் குடிமக்களிடையே நல்லிணக்கம் வளராமல் இது சாத்தியமில்லை.

9/11 சம்பவத்திற்குப் பிறகு இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரவாததிற்கு எதிரான போரில் ஓரணியில் இருப்பது தெளிவாகியது. மக்களாட்சி மற்றும் மத நல்லிணக்கக் கொள்கைகளை நம்பும் இந்திய மக்களிடையே மற்ற அண்டை நாடுகளில் காணப் படும் மத அடிப்படைவாதமும் அதை ஒட்டிய தீவிரவாதமும் அளவில் குறைந்து காணப்படுகிறது.

வளர்ந்து வரும் எதிர்கால ஆசிய வல்லரசுகளில் இந்தியாவின் மக்களாட்சி முறை வெற்றி பெறுவதின் முக்கியத்துவம் அமெரிக்காவிற்குப் புரிந்திருக்கிறது. உலக வர்த்தகத்தில் இந்தியப் பங்கின் எதிர்கால மதிப்பும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் சமீப காலங்களில், தனது நெடுநாளைய கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்த போதும் கூட, இந்தியாவிற்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தைத் தருவதில் அமெரிக்கா தயக்கம் காட்டவில்லை. இதற்கு இரானிடம் இந்தியா எரிவாயு வாங்குவது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை, மியான்மாரிடம் சக்தி வாங்குவது அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை என்ற அரசியல் காரணங்கள் கூறப்படலாம். இந்திய அமெரிக்கக் குடிமக்களிடையே உறவுகள் மற்றும் நம்பிக்கைகள் பலப்படுவதும் அதிமுக்கியக் காரணம்.

(இந்தக் கட்டுரை கடந்த சில வாரங்களில் வெளியாகிய எகனாமிக் டைம்ஸ் கட்டுரைகளைத் தழுவி எழுதப் பட்டது)

No comments:

Blog Archive