கொலம்பியா ஓடம் 2003 ஆம் ஆண்டின் இறுதியில் தரையிறங்கும் போது கோரமான விபத்துக்குள்ளாகியது. கல்பனா சாவ்லா உள்ளிட்ட பல அற்புதமான விண்வெளி ஆய்வு வல்லுனர்களை நாம் இழந்து தவித்தோம். அந்தக் கோரக் காட்சிகள் இன்னும் நம் நினைவில் பசுமையாக உள்ளன.
இன்று பல கடுமையான ஆய்வுகளும், ஓடத்தை மேம்படுத்தும் முயற்சிகளும், வல்லுனர்களுக்கிடையே சர்ச்சைகளும் முடிந்த பின் டிஸ்கவரி ஓடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டு 13 நாட்கள் முடிவடைந்து விட்டது.
டிஸ்கவரியும் வெற்றியுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சென்று அடைந்து விட்டது.
விண்வெளி ஓடத்தின் வெளிப்புறப் பரப்பில், வளிமண்டலத்திற்குள் ஓடம் நுழையும் போது காற்றுடன் உராய்வதால் ஏற்படக்கூடிய அதிமிதமான வெப்பம் ஒடத்தைத் தாக்காத வகையில் கண்ணாடி ஓடுகள் பொருத்தப் பட்டிருக்கும்.
விண்வெளியில் டிஸ்கவரி ஓடத்தின் வெளிப்புறத்தைச் சோதனையிட்ட போது, இந்த ஒடுகளுக்கிடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப உபயோகித்த பொருள் இரண்டு இடங்களில் சற்று வெளியே துருத்திக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
உடனடியாக இந்தப் பிரச்சனைகளை ஓடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், சரித்திரத்திலேயே முதல் முறையாக விண்வெளியில் ஓடத்திற்கு அடியிலே நடந்து சென்று, எதிர்பார்த்ததை விடச் சுலபமாக தீர்த்து விட்டார்கள்.
கொலம்பியா ஒடம் கூட ஒடம் ஏவப்பட்ட போது இந்த கண்ணாடித் தகடுகளுக்கு ஏற்பட்ட சேத்தினால்தான் தரையிறங்கும் போது வெப்பம் தாங்காமல் வெடித்துச் சிதறியது.
பயணம் முடிந்து டிஸ்கவரி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பிரிந்து தரையிறங்கும் பயணத்தைத் தொடங்கி விட்டது. ஓடத்தின் வெளிப்பரப்பு தரையிறங்கும் சவாலை எதிர்நோக்க முற்றிலும் ஆயத்தமாக இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.
டிஸ்கவரி விமானத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விண்வெளி வீரர் ஒரு பெண் என்பது தற்போதைய பயணத்தின் ஒரு சிறப்பு. அவரும் அவரது சக விண்வெளி வீரர்களும் தரையிறங்கும் முன் காமிராவின் முன் சிரித்துக் கொண்டே படம் எடுத்து தரையிலுள்ள கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் மகிழ்வுடனும் தம் பயணத்தைத் துவங்குவதாகக் கூறியிருக்கின்றனர்.
தரையிலிருக்கும் நமக்கே மனதின் ஒரத்தில் சற்று உதறலாயிருக்கும் ஒரு பயணத்தை கட்டுப்படுத்தி இயக்க தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் ஆயத்தமாகியிருக்கிறார்.
ஓடம் நாளை இந்திய நேரப்படி மதியம் 2:15 மணியளவில் கென்னடி விண்வெளி மையத்தின் ஓடம் தரையிறங்க அமைக்கப் பட்டிருக்கும் ஓடு பாதையில் தரையைத் தொடப் போகிறது.
ஓடம் தனது விண்வெளி ஆராய்ச்சிப் பணியை செவ்வனே முடித்து விட்டாலும், இந்தப் பயணத்தின் வெற்றி ஓடம் பத்திரமாகத் தரையிறங்கிய பின்னர்தான் தீர்மானிக்கப் படப் போகிறது. ஓடம் பத்திரமாக தரையைத் தொடும் அந்த கணத்தில்தான் விண்வெளி வீரர்களின் குடும்பத்தினர் முகத்தில் நிம்மதிப் புன்னகையைப் பார்க்க முடியும். அந்தப் புன்னகைகள் மிக அழகாயிருக்கப் போகிறது. நாமெல்லாம் தொலைக்காட்சியில் நாளை பார்க்கப் போகிறோம்.
விண்வெளி ஒடத்தின் தலைவிக்கும், அதன் வீரர்களுக்கும், கென்னடி விண்வெளி மைய இயக்குனர்களுக்கும் மன உறுதியும், நிதானமும் நிலைக்கும் வகையில் நம் அனைவர் சிந்தனையும் அவர்களுடன் இருக்கட்டும். பதட்டத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் மன உறுதி அவர்களுக்குத் தரையில் கால் வைத்து நடந்து வீடு நோக்கி செல்லும் அந்த பத்திரமான பயணம் தொடங்கும் வரை நிலைக்கட்டும்.
2 comments:
டிஸ்கவரி ஓடம் பத்திரமாக தரையிறங்க வாழ்த்துவோம்.
நன்றி
அன்புள்ள உதய்,
இன்று தான் நான் உங்கள் வலைப்பதிவை பார்த்தேன். சிலவற்றை படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
என்னை நினைவு வைத்திருக்கிறீர்களா ?
முடிந்தால் ஒரு தனி மடல் அனுப்புங்கள்.
அன்புடன்
தேசிகன்
http://desikann.blogspot.com
desikann@gmail.com
Post a Comment