சென்னையைப் பற்றிக் கொண்டிருக்கும் ஹிந்து நாளிதழின் கடைசி பக்க சமாச்சாரம். "தேமே" என்று சொடக்கு போட்டுக் கொட்டாவி விட்டுக் காலம் கடத்திக் கொண்டிருந்த நம்மை இந்த சு-டோகு வந்து விவகாரத்தில் மாட்டி விட்டது.
சு-டோகு ஒரு மூளையைக் கசக்கும் விளையாட்டு அல்லது புதிர். ஒரு சதுரத்தின் 81 கட்டங்களில் சில கட்டங்களில் மட்டும் 1 முதல் 9 வரையான இலக்கங்களை நிரப்பியிருப்பார்கள். மிச்சக் கட்டங்களை 1 முதல் 9 வரையான இலக்கங்களைக் கொண்டு நாம் நிரப்ப வேண்டும்.
விதிமுறைகள் உண்டு. நிரப்பப் பட்ட சு-டோகு புதிரில், எந்த ஒரு அகல அல்லது உயர வரிசையிலும் 1 முதல் 9 வரை எண்கள் ஒரே ஒரு முறைதான் வரலாம். அனைத்து எண்களும் ஒவ்வொரு வரிசையிலும் உபயோகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பது சொல்லாமலேயே புரியும். 81 கட்டங்களுள்ள ஒரு சதுரம் 9 கட்டங்களுள்ள 9 சிறிய சதுரங்களை உள்ளடக்கியிருக்கும். இந்த சிறிய சதுரங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் 1 முதல் 9 வரையான இலக்கங்கள் ஒரு முறைதான் வரலாம்.
என் நாலாவது படிக்கும் பெண் போன வாரம் நாளிதழை தூக்கிக் கொண்டு வந்து, "இருவரும் சேர்ந்து புதிரை விடுவிக்கலாம்" என்றாள். அவளுடைய வகுப்புத் தோழி சு-டோகு போட்டு ·பிலிம் காட்டி விட்டதால் நம் தலையில் விடிந்து விட்டது. இந்த மாதிரியான பேராபத்துகளை திருமணத்திற்கு முன் எதிர்பார்க்காமல் ஒரு வெகுளித் தனமாக இருந்து விடுகிறான் மனிதன். அதுவும் தலைமுறை தலைமுறையாக!
நமக்கும் மூளைக்கும் தூரம் அதிகம் என்பதைப் பெண்ணிடம் எப்படி வெளிப்படையாக ஒத்துக் கொள்வது. "என்னடா வம்பாகி விட்டதே" என்று யோசித்துக் கொண்டே குழந்தையிடம் "இந்த வாரம் அப்பா பிஸி. அடுத்த வாரம் பார்க்கலாம்" என்று சமாளிக்க வேண்டியிருந்தது.
நடுவில் ஒரு நாள் ஹிக்கின்பாதம்ஸ் போக வேண்டியிருந்தது. அங்கே ஏதேச்சையாகப் பார்த்தால், சு-டோகு புதிரை விடுவிப்பது எப்படி? என்று ராபின் வில்ஸன் என்பவர் எழுதிய புத்தகம் இருந்தது. சல்லிசாக 95 ருபாயில் கிடைத்ததை ஏதோ கடவுளே வரம் கொடுத்த மாதிரி ஒரு உணர்வுடன் வாங்கி வந்து அவசரகதியில் படித்த்தால்தான் இன்று தப்பிக்க முடிந்தது. பின்னே மண்டபத்தில் யாரவது சு-டோகு விடுவித்துக் கொடுத்து அதையா கொண்டுவந்து பெண்ணிடம் காட்ட முடியும்.
இன்று காலை எழுந்தவுடம் முதல் காரியமாக "அப்பா! போன வாரமே சொன்னீங்களே... வாங்க இப்பவே சு-டோகு போடலாம்" என்று பெண் நாளிதழுடன் வந்து விட்டாள். விடாக்கண்டி!!
90 நிமிடப் போராட்டத்தின் பின் புதிர் விடுபட்டு ஏதோ கொஞ்ச நஞ்சம் இருக்கும் பெயர் கெட்டுப் போகாமல் காப்பாற்றிக் கொண்டாகி விட்டது. அந்த மகிழ்ச்சியிலும், எங்கேயும் இடி படாமல் (!?!) அடுத்த வேளை சாப்பாடு சாப்பிடலாம் என்ற நிம்மதியிலும் பதிந்த பதிவு இது.
சு-டோகு - பெயரைக் கேட்டால் ஜப்பானியச் சமாசாரம் போலத் தோன்றும் இது 1970 ஆம் வருடம் ந்யூ யார்க் நகரத்தில் உருவாகியது என்று சொல்கிறார்கள். இந்தப் புதிருக்கு முதலில் அமெரிக்கர்கள் இலக்க இடம் (Number Place) என்றுதான் பெயரிட்டிருந்தார்களாம். 1980 வாக்கில் ஜப்பானை அடைந்த இந்த புதிருக்கு ஜப்பானியர்கள் ஸஞ்ஜி வா தோகுஷின் நி ககீரு (Sunji wa dokushin ni kagiru) என்று பெயரிட்டனர். இதற்கு "இலக்கத்திற்கு ஒரு இடம் மட்டுமே" என்று பொருளாம். நாளடைவில் குறுகி சு-டோகு. சு என்றால் இலக்கம். டோகு என்றால் ஒற்றை. சு-டோகு யுனைடெட் கிங்டமை அடைந்து அங்கே ஏறக்குறைய ஒரு வெறித்தனமான பொழுதுபோக்கானது 2004 ஆம் ஆண்டில்தான் என்கிறார்கள்.
எது எப்படியோ! சுனாமி போல் வந்த சு-டோகு ஆபத்து சிற்றலை போல் விலகி விட்டது. தப்பித்தேன்.
1 comment:
Very informative. Thanks.
- Suresh Kannan
Post a Comment