Sunday, July 17, 2005

காரியமில்லா வாயு !!

எனது இளைய சகோதரர் அவர் ஆரம்பப் பள்ளி செல்லும் வயதில் கரியமில வாயு என்று எழுதச் சொன்னால், எழுத்துப் பிழையுடன், காரியமில்லா வாயு என்றுதான் எழுதுவார். அது ஒரு காரியத்திற்கும் உதவாத வாயு என்பதால் அந்தப் பெயர் கூடச் சரிதான் என்று நாங்கள் அவரைப் பாராட்டியதுண்டு.

நாம் பிராண வாயுவைச் சுவாசிக்கிறோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் சுவாசிக்கும் காற்றின் ஒவ்வோரு மில்லியன் மூலக்கூறுகளிலும் 380 மூலக்கூறுகள் கரியமில வாயு உள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சுவாசித்த காற்றில் 280 மூலக் கூறுகள் மட்டுமே கரியமில வாயு இருந்தது.

வளி மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு எப்படி இவ்வளவு உயர்ந்தது?

லிட்டருக்கு சுமார் 10 கிலோமீட்டர் செல்லக் கூடிய ஒரு சிற்றுந்தை நீங்கள் ஒரு வருடத்திற்கு 15000 - 20000 கிலோ மீட்டர்கள் உபயோகித்தீர்களாயின், ஏறக்குறைய ஒரு டன் பெட்ரோல் செலவழித்திருப்பீர்கள். அது சுமார் மூன்று டன் எடையுள்ள கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குள் செலுத்தியிருக்கும்.

அதே போல 1000 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரு அனல் மின் நிலையம் சுமார் 6 மில்லியன் டன் அளவிற்கு கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குள் செலுத்துகிறது.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அபரிமிதமான வளர்ச்சிக்கான காரணம் இதுதான்.

கரியமில வாயு காற்றை விட எடை அதிகமானது ஆகவே கடல் மட்டத்திலேயே சஞ்சரிக்கிறது. இதனால் உலகின் சராசரி வெப்ப நிலை சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. கடலின் அமிலத் தன்மை அதிகரித்து வருகிறது.

கரி, இயற்கை எரி வாயு, மற்றும் கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் எரிபொருள்கள் மூலம் கிடைக்கும் சக்தியுடன் கூட இந்தக் கரியமில வாயுவும் கிடைக்கிறது. மேற்கூறிய fossil (தமிழ் பதம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்) எரிபொருள்களுக்கு இன்னும் சரியான மாற்று எரிபொருள்கள் கண்டுபிடிக்காத நிலையில் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப் படுத்த முடியாதா?

முடியும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்!

எரிபொருளை எரிப்பதால் கிடைக்கும் கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குள்தான் செலுத்த வேண்டும் என்று எதாவது சட்டம் உள்ளதா என்று இவர்கள் கேட்கிறார்கள். ஆனால் உலகின் அனைத்துப் புகைபோக்கிகளும் இன்று வளிமணடலத்திற்குத்தான புகையை விடுகின்றன. இப்படிச் செய்யாமல் கரியமில வாயுவை நிலத்தடியில் செலுத்தி விட்டால்?

உந்து வண்டிகளில் இப்படிச் செய்வதற்குச் சாத்தியக் கூறுகள் குறைவு. ஆனால் அனல் மின் நிலையங்களில் செய்ய முடியும்.

சாதாரணமாக நிலத்தடிக் குடிநீர் கிடைக்கும் ஆழத்திற்கும் வெகுவும் கீழே துளையிட்டு நுண்துளைகளுள்ள பாறைப் பகுதிக்குள் இந்த வாயுவைச் செலுத்தலாம் என்று தீர்மானித்து பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். சாதாரணமாக இந்த நுண்துளைப் பாறைகளுக்குள் உப்பு நீர் நிறைந்திருக்கும். கரியமில வாயுவை அழுத்ததுடன் இந்த உப்பு நீருக்குள் செலுத்தினால் நிலத்தடியில் உப்புச் சோடா தயாரிக்கலாம்!

கச்சா எண்ணெய் கிணறுகள் உள்ள பகுதிகளில் நுண்துளைப் பாறைகளுக்குள் உப்பு நீருக்குப் பதிலாக கச்சா எண்ணெய் புகுந்திருக்கும். கரியமில வாயுவை கச்சா எண்ணெய் நிறைந்த நுண்துளைப் பாறைப் பகுதிக்கு உள்ளே செலுத்துவதால் எண்ணெயின் பிசுபிசுப்புத் தன்மை குறைக்கப் படுகிறது. நுண்துளைப் பாறைகளினூடே உள்ள எண்ணெய், கரியமில வாயு பட்டவுடன், (அதற்கும் பாறைக்கும் இடையேயான உராய்வு குறைக்கப் பட்டு விடுவதால்) எளிதில் வெளியே தள்ளப் படுகிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். தூர்ந்து போகும் நிலைக்கு வரவிருக்கும் கிணறுகளுக்குள் கரியமில வாயுவைச் செலுத்துவதன் மூலம் அந்தக் கிணறு அளிக்கும் பலனை வெகுவாக அதிகரிக்கலாம் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஆகவே கரியமில வாயு உண்மையில் ஒரு காரியமில்லா வாயு அல்ல.

இவ்வளவு கண்டு பிடித்திருக்கும் அறிவியல் அறிஞர்கள் இப்படி வாயுவை நிலத்துக்குள் செலுத்துவதால் எத்தகைய ஆபத்துகள் வரும் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. இரண்டு வகை ஆபத்துகள் புலப்படுகின்றன.

முதல் ஆபத்து: நிலத்தடிக்குள் சென்ற கரியமில வாயு படிப்படியாக மேலெழுந்து வளிமண்டலத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து விடக் கூடும். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நுழையும் வாயுவால் அதை நிலத்திற்குள் செலுத்தியத்ற்கான செலவு விரயமாகும். வளிமண்டலச் சீரழிவு எதிர்பார்த்தது போல் கட்டுப் படாது. அவ்வளவுதான்!

இரண்டாவது ஆபத்து: இது கொஞ்சம் பிரச்சனை அதிகமுள்ளது. அழுத்தம் தாங்காமல் நிலத்தடியில் செலுத்தப் படும் வாயு ஒரேயடியாக டன் கணக்கில் பூமியைப் பிளந்து கொண்டு வளிமண்டலத்திற்குள் நுழைந்தால் சுற்று வட்டாரத்தில் உள்ள உயிரினங்கள் மூச்சுத் திணறி இறந்து போகும். எரிமலைகள் கிளப்பும் கரியமில வாயுவின் திடீர் வெளிப்பாட்டினால் இப்படி உலகில் ஏற்கெனவே நடந்திருக்கிறது.

எது எப்படியோ? எதிர்காலச் சந்ததியினர்களுக்கு மண்ணைத் தோண்டினால் பரிசாக நாம் விட்டுச் சென்ற வாயுதான் நிறையக் கிடைக்கப் போகிறது!

எதிர்காலச் சந்ததியினர் நம்மை விடக் கில்லாடிகளாக இருப்பார்கள். நம்மை விட சிறப்பாக தமது சக்தித் தேவைகளை அமைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்றைய உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது.

No comments:

Blog Archive