Saturday, July 16, 2005

கம்பியில்லா மின்னஞ்சல் - Wireless e-Mail

மின்னஞ்சலில் ஒரு வசதியுண்டு. கணினியின் உதவியுடன் அதைப் படிக்க வேண்டியிருக்கிறது. மின்னஞ்சலைப் பெற மின்னஞ்சல் சேவை வழங்கும் கணினியிலிருந்து அதை இறக்கிக் கொள்வது நடைமுறை. படிக்க உதவும் கணினிக்கு இணையத் தொடர்பும் தேவை. இந்தக் காரணங்களால் ஒருவர் மின்னஞ்சலை அனுப்பிய அடுத்த கணமே அது பெறுநரின் கணக்கிற்கு வந்து சேர்ந்து விடும் சாத்தியம் இருந்தாலும், பெறுநர் அந்த மின்னஞ்சலை உடனே படிக்கக் கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவு. அனுப்புனருக்கு இந்த நடைமுறை புரிந்திருப்பதால் அனுப்பிய செய்திக்கு உடனே பதில் வரவில்லை என்றால் சில காலம் காத்திருக்கத் தலைப்படுவார். சில பெறுநர்கள் இதனை தங்களுக்குச் சாதகமாகவும் வசதியாகவும் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு!

ரிஸர்ச் இன் மோஷன் (RIM - இனி ரிம் ) என்ற அமெரிக்க நிறுவனம் மின்னஞ்சலைக் கம்பியில்லாமல் பெற வசதி செய்யும் ஒரு வன்பொருள் தயாரித்தார்கள். இந்த வன்பொருள் கையில் எடுத்துச் செல்லும் ஒரு சாதனம். அலைபேசி (செல்பேசி) சேவையை உபயோகித்து இயங்கக் கூடியது. இந்த வன்பொருளை இயக்கும் மென்பொருளையும் அதனுடன் பெறுநரின் மின்னஞ்சலை இணையத்திலிருந்து பெற்று இந்த சாதனத்திற்கு வானலை இணைப்பின் மூலன் உடனுக்குடன் வழங்கும் சேவை வழங்கியையும் (server) அவர்கள் வடிவமைத்தனர். 1997 ஆம் வருடம் இவர்களிடமிருந்து அமெரிக்காவின் பெல் சௌத் (Bell South) நிறுவனம் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பியில்லா மின்னஞ்சல் சாதனங்களை வாங்கியது.

இந்த மின்னஞ்சல் சாதனம் மற்ற அலைபேசிகளைப் போல் இல்லாமல், ஒரு குட்டி தட்டச்சுப் பலகையுடன் வடிவமைக்கப் பட்டது. இந்த குட்டி தட்டச்சுப் பலகையின் விசைகள் பெர்ரி பழத்தின் விதைகளைப் போல் இருந்ததால் இந்தச் சாதனத்திற்கு ப்ளாக் பெர்ரி (Black Berry) என்று பெயரிட்டனர்.

1999-2000 ஆம் ஆண்டுகளில் ப்ளாக்பெர்ரி அமைப்பை பெரிய வியாபாரக் கழகங்களுக்கு விற்கத் தொடங்கிய ரிம் நிறுவனம் தேவையான வானலை நேரத்தை (Air Time) அலைபேசிச் சேவை நிறுவனங்களிடம் குத்தகைக்குப் பெற்றது.

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் மின்னஞ்சல் பெறுநர்களுக்கு வந்ததே தலைவலி! மின்னஞ்சல் அனுப்பிய சில நிமிடங்களுக்குள் உடனுக்குடன் கையில் இருக்கும் கையகல சாதனத்தில் சேர்க்கப் பட்டு அறிவிக்க
பட்டும் விடுமாகையால், மேலாளரின் "ஏன் உடனே பதில் அனுப்பவில்லை?" என்ற கேள்விக்கு சாக்குப் போக்கு எதுவும் சொல்லமுடியாது. ஆனால், பணியாளர்களுக்கிடையே உடனடி எழுத்துத் தொடர்பு வசதி ஏற்படுத்தித் தரும் அசகாய வியாபார ஆதாயங்களால் இந்தத் தொழில் நுட்பம் பற்றிக் கொண்டது.

பின்னர் 2000 ஆவது ஆண்டில் தனது வியாபார தந்திரத்தை சிறிது மாற்றிக் கொண்ட ரிம், ப்ளாக்பெர்ரி சேவையையும் அலைபேசிச் சேவை நிறுவனங்களே வழங்குமாறு தனது வியாபார அமைப்பை மாற்றிக் கொண்டது. அலைபேசிச் சேவை நிறுவனத்தின் ப்ளாக்பெர்ரி சேவைக்கான வருவாயில் ஒரு கணிசமான பங்கு தனக்குக் கிடைக்குமாறு அமைத்துக் கொண்டது.

வசதியுள்ள நாடுகளில் ப்ளாக்பெர்ரி விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. 2002 ஆம் ஆண்டு உலகெங்கும் 3,60,000 ப்ளாக்பெர்ரி சாதனங்கள் விற்பனையாகின.

அதே 2002 ஆம் ஆண்டில் அலைபேசியில் இணைய இணைப்பை நேரடியாகப் பெறும் ஜெனரல் பாக்கெட் ரேடியோ சேவைத் (GPRS) தொழில் நுட்பம் அறிமுகமாகியது. அதுவரை மோபிடெக்ஸ் (Mobitex) என்ற தொழில் நுட்பத்தை உபயோகித்த ப்ளாக்பெர்ரி, GPRS வந்தவுடன் GSM (அலைபேசிச் சேவைக்கான உலக அளவிலான அமைப்பு) தொழில்நுட்பத்திற்கு மாற்றிக் கொண்டது. இதன் மூலம் ப்ளாக்பெர்ரி பயனர்களை மின்னஞ்சல் சென்றடையும் வீச்சுப் பரப்பு (reach) பெறுமளவு உயர்ந்தது.

2002 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து ப்ளாக்பெர்ரி தனது மென்பொருள் உரிமத்தை அலைபேசிச் சாதனம் தயாரிக்கும் உலகப் புகழ் பெற்ற நோகியா (NOKIA) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ப்ளாக்பெர்ரி மென்பொருள் தொழில் துறை நியமமாக (Industry Standard) ஒரு வழி வகுக்கப் பட்டிருக்கிறது என்று அறிந்தவர் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்கைக்குப் பின் ரிம் நிறுவனப் பங்கு விலை 800 சதவிகிதம் உயர்ந்தது என்ற செய்தியிலிருந்து அந்தச் செய்கைக்குக் கிடைத்த வரவேற்பின் அளவு எவ்வளவு என்பது நமக்குப் புரியும்.

2004 ஆம் ஆண்டில் உலகெங்கும் 2.5 மில்லியன் ப்ளாக்பெர்ரி சாதனங்கள் விற்பனையாயின!

இந்தியாவிலும் இன்று ப்ளாக்பெர்ரி சேவை கிடைக்கிறது. என்ன.. கொஞ்சம் விலை அதிகம். அவ்வளவுதான்!!

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

RIM = Research In Motion...

ந. உதயகுமார் said...

அன்புள்ள செல்வராஜ், தவறை எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி. சிரமத்திற்கு மன்னிக்கவும். பதிவை இப்போது திருத்தி விட்டேன். -உதயகுமார்

அன்பு said...

திருப்பூரில் ப்ளாக்பெர்ரியின் பயன்பாடு குறித்து இந்தவார நாணயம் விகடனில் வந்துள்ள செய்தி:

உலகே கையில்!

பெரும்பாலும் ஏற்றுமதியை நம்பி இருப்பதால் வெளிநாட்டு கம்பெனிகளின் தேவையை உடனுக்கு உடன் அறிந்து கொண்டாக வேண்டிய அவசியம் இங்குள்ளவர்களுக்கு! எனவே, இங்கு பிராட் பேண்ட் வசதி முழுவேகத்தில் இருக்கிறது. படத்தில் இருக்கிற, பிளாக் பெர்ரி கம்ப்யூட்டர்களை சரளமாகப் பார்க்க முடிகிறது. இதன் மூலம் இ-மெயில் வசதியில் தன்னிறைவுடன் இருக்கிறார்கள்.

Blog Archive