Monday, July 11, 2005

ஒரிஸ்ஸாவின் தாது வளம்

பார்பில், ஜோடா, நோவாமண்டி... இவை ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள நகரங்களின் பெயர்கள். இந்த நகரங்களின் அடியில் சுமார் 1.5 பில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது உள்ளது. இது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப் பட்ட அளவு மதிப்பீடு. குத்து மதிப்பாக இந்த மாநிலத்தில் மொத்தமாக 3 பில்லியன் டன் அளவிற்கு இரும்புத் தாது கிடைக்கக் கூடும் கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.

ஒரிஸ்ஸா மாநில அரசு சமீபத்தில் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ (Posco) நிறுவனத்துடன் எ·குத் தொழிற்சாலை ஒன்றை தன் மாநிலத்தில் நிறுவ ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, போஸ்கோ நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் ஒரிஸ்ஸாவில் ஒரு எ·குத் தொழிற்சாலை ஒன்றை நிறுவப் போகிறது. இது இந்தியாவிற்கு இது வரை கிடைத்திருக்கும் அந்நிய முதலீடுகளிலேயே ஆகப் பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது.

ஒரிஸ்ஸா மாநிலம் இந்தியாவின் ஏழ்மை மிக்க மாநிலங்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

போஸ்கோ ஆண்டுக்கு 12 மில்லியன் டன் எ·கு உற்பத்தித் திறனுள்ள தொழிற்சாலையை படிப் படியாக இங்கே அமைக்கும் என்று தெரிகிறது.

போஸ்கோ ஏன் இந்தியாவில் முதலீடு செய்கிறது?
  1. ப்ரிக் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா வரப் போகும் பல ஆண்டுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர் நோக்கியிருக்கிறது. ஆகவே எ·கு தேவையும் அதிகரிக்கும்
  2. இந்தியா எ·குத் தொழிலில் அனுபவம் பெற்றது. இங்கு பணிக்கு வர பயிற்சி பெற்ற வல்லுனர்கள் எளிதில் கிடைப்பார்கள்
  3. இந்தியாவில் பணியாளர்களுக்கான சம்பளம் தென் கொரியாவை விடக் குறைவு
  4. ஒரிஸ்ஸாவின் தாது வளம். எ·கு செய்வதற்கான கனிம வளங்கள் (கரி, டோலமைட், சுண்ணாம்புக் கல்) அருகிலேயே கிடைக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கும் சவால்கள் இல்லாமல் இல்லை!
  • இந்தியாவில் சுரங்கங்களைத் தோண்டும் கொள்கைகள் சுரங்கத் தொழிலை தேவைக்கு அதிகமாக கட்டுப் படுத்துகின்றன. சுரங்கம் அமைக்க உரிமம் பெற ஒருவர் முதலில் கனிமம் மற்றும் தாது வளங்களை மண்ணைத் தோண்டாமல் தேட அனுமதி (Reconnaissance Permit) பெற வேண்டும். அடுத்த கட்டமாக வளங்களை சோதித்துப் பார்க்க உரிமம் (Prospecting License) பெற வேண்டும். இந்தக் கட்டத்தில் மண்ணுக்குள் துளையிட்டு தாது வளம் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். மூன்றாவது கட்டமாகத்தான் சுரங்கம் அமைக்கக் குத்தகை (Mining Lease) வழங்கப் படும். முதல் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்குச் செல்லவே கோப்புக்கள் அரசின் எழுபத்திச் சொச்ச மேஜைகளைக் கடந்து பயணம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது. இதற்கு ஆறு முதல் ஏழு ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது
  • ஒரிஸ்ஸாவில் கிடைக்கும் இரும்புத் தாதுவில் அதிக அளவில் இரும்பு உள்ளது. கூடவே அலுமினா (Alumina) என்ற பொருளும் உள்ளது. இந்த அலுமினாவைப் பிரிக்கத் தேவையான செய்முறையால் எ·கு உலையின் திறன் வெகுவாகக் குறையும் என்று தெரிகிறது. போஸ்கோ இந்தியத் தாதுவை ஏற்றுமதி செய்து விட்டு இங்கே உற்பத்தி செய்வதற்கான தாதுவை இறக்குமதி செய்து கொள்ளும் திட்டம் வைத்திருப்பதாக ஹிந்து நாளிதழ் தெரிவிக்கிறது (இந்த ஏரணம் (logic) சற்று உதைக்கிறது). ஆனால் நம் இடது சாரிக் கட்சிகள் போஸ்கோவின் இந்தத் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவிப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்றைய தேதியிலேயே ஒரிஸ்ஸாவின் தாது ஏற்றுமதி செய்யப் படுவது இங்கே குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விபரம்
  • தாது கிடைக்கக் கூடிய பல இடங்கள் ஒரிஸ்ஸாவின் வனப் பகுதிகளுக்குக் கீழே இருப்பதாகச் சொல்லப் படுகிறது. சுரங்கங்களை அமைக்கவும், தேவையான இயந்திரங்களைக் கொண்டு வரவும், தோண்டி எடுக்கப் படும் தாதுப் பொருளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும் வேண்டிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைக்கப் பட வேண்டும். வனப் பகுதிகளில் இவற்றை அமைக்க அந்த வனப் பகுதி அழிக்கப் பட வேண்டும். இதற்கு நாட்டின் இயற்கைப் பாதுகாவலர்களிடமிருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பப் போவது நிச்சயம்
  • தாது கிடைக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கும் பல இடங்களில் பழங்குடியினர் வாழ்கிறார்கள். இவர்களை இந்த இடங்களிலிருந்து கிளப்புவது ஒரு பெரிய சவாலாக இருக்கப் போகிறது
  • இந்தப் பகுதியில் ஊடுருவியுள்ள நக்ஸலைட்டுகள் சுரங்கம் வெட்டுவதற்கும் தொழில் வளர்ச்சிக்கும் மிகுந்த தடையாக உள்ளனர். 1993 ஆம் ஆண்டிலேயே உரிமம் வழங்கப் பட்ட உதகல் அலுமினா இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் திட்டம், இத்தகைய பிரச்சனைகளால், இன்னும் கிடப்பில் இருக்கிறது
போஸ்கோவின் திறமையைப் பொறுத்திருந்து பார்ப்போம் !!

2 comments:

சந்திப்பு said...

இந்திய செல்வத்தை சூறையாட வரும் “போ°கோ”

கே. செல்வப்பெருமாள்

இந்திய நாடு விடுதலை பெற்றவுடன் சுயேட்சையான தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. அனைத்து தொழில்களுக்கும் பிரதானமானது “இரும்பு”. சுதந்திர இந்தியாவில் இரும்பை உருக்குவதற்கான நவீன தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. இந்நிலையில் இந்திய அரசு அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட மேற்கத்திய நாடுகளை அணுகி தொழில்நுட்ப உதவி கேட்போது, “உங்களுக்கு இரும்பு தேவையென்றால், எங்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினர். இதன் பிறகு இந்திய தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் விளங்கியது சோசலிஸ சோவியத் யூனியனே; சோவியத் உதவியோடு சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்டது பிலாய் உருக்காலை. இது கடந்த கால அனுபவம்.
இன்று, ஏராளமான இயற்கை ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. தேவையான தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ள சூழ்நிலையில், உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்திய மாயவலையில் சிக்கியுள்ள நம்நாடு இயற்கை ஆதாரங்களையும், அறிவுச் செல்வத்தையும் அந்நியருக்கும், பன்னாட்டு ஏகபோகங்களுக்கும் தாரைவார்த்து வருகிறது. அந்நிய நேரடி முதலீடு என்பது புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவதாகவும், இந்திய தொழில் வளர்ச்சிக்கும் உதவிடக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், போ°கோ விஷயத்தில் நமது அடிப்படை ஆதாரமே கொள்ளை போகிறது.
கொள்ளையடிக்க வரும் போ°கோ
தென்கொரிய நிறுவனமான போ°கோ (போகாங் °டீல் கம்பெனி) பா.ஜ.க. - பிஜூ ஜனதா தள் தலைமையிலான ஒரிஸா மாநில அரசோடு கடந்த ஜூன் 22, 2005 அன்று ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. இந்திய நாட்டில் இதுவரை செய்துள்ள அந்நிய நேரடி முதலீட்டில் மிக அதிக அளவாக 12 பில்லியன் டாலர் அளவிற்கு (ரூ. 52,000 கோடி) போ°கோ முதலீடு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து ஒரிஸாவின் இயற்கை வளமான இரும்பு தாதுவை ஆண்டிற்கு 12 மில்லியன் டன் என்ற அடிப்படையில் சுரங்கங்களிலிருந்து சுரண்டிச் செல்வதுதான்.
இரும்பு உற்பத்தியில் உலகிலேயே 5வது இடத்தில் இருக்கின்ற போ°கோ, இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலக இரும்பு மார்க்கெட்டில் பெரும் பங்கு வகிக்க உள்ளது. கடந்த 12 மாதங்களில் இரும்பு விலை ராக்கெட் வேகத்தில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அத்துடன் உலகில் இரும்பிற்கான தேவையென்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனா போன்ற பெரிய நாடுகளில் கூட இரும்பு உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளது. எதிர்கால இந்தியாவில் அனைத்து துறைகளிலும் இரும்பின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் இயற்கை வழங்கியிருக்கிற இரும்புத் தாதுவை பயன்படுத்தி உலகில் சிறப்பான இடத்தை நம்மால் வகிக்க முடியும். இந்திய அளவில் தற்போது ஒரிஸாவில் மட்டும் 26.50 சதம் இரும்புத் தாது பூமிக்கடியில் குவிந்துள்ளது. போ°கோவுடனான ஒப்பந்தத்தின் மூலம் ஒரிஸாவின் மொத்த இயற்கை வளத்தையும் சூறையாடுவதற்கு அனுமதியளித்துள்ளது நவீன் பட்நாயக் தலைமையிலான ஒரிஸா அரசு.
கொள்ளை போகும் நிலமும் - வெளியேற்றப்படும் மக்களும்
ஒரிஸாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், பாரதீப்பில் போ°கோ நிறுவனம் அமையவுள்ளது. இந்நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. 2010ஆம் ஆண்டில் இதன் முதல் உற்பத்தி துவக்கப்பட்டு 3 மில்லியன் டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும். 2016ஆம் ஆண்டில் முழுமையான உற்பத்தி அளவான 12 மில்லியன் டன் என்ற அளவிற்கு உற்பத்தியை ஈட்டுவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போ°கோ ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனம் அமையவுள்ள இடம் மற்றும் அதைச் சார்ந்த நகர விரிவாக்கம் போன்ற பல்வேறு ஏற்பாடுகளுக்கு மட்டும் 6500 ஏக்கர் நிலத்தை ஒரிஸா மாநில அரசு தாரை வார்த்துள்ளது. இந்நிலங்களில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வந்த 4000த்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுவார்கள். பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ. 22 கோடி ஒதுக்குவதாக சொல்லப்படுகிறது. இது வெறும் சொற்பத்தொகையே என்பதோடு, அம்மக்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை, கலாச்சார கூறுகள் அழிக்கப்படுவதோடு எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். சொந்த மக்களுக்கு தரிசு நிலத்தையும், உபரி நிலத்தையும் வழங்க மறுப்பவர்கள் அந்நிய முதலாளிகளின் லாப வேட்டைக்கு தாராளமனதைக் காட்டுவது முதலாளித்துவத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோல் இந்நிறுவனத்தின் தண்ணீர் தேவைக்கு ஒரிஸாவில் ஓடும் மகாநதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்கான நீராதாரத்தை வழங்குவதற்கு ஒரிஸா மாநில அரசு உத்தரவாதம் செய்துள்ளதா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிறுவனத்தின் அடிப்படை தேவை நிலக்கரி; இம்மாபெரும் நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் அதை தேக்கி வைப்பதற்கான இடம் என பல நெருக்கடிகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்தோடு, இதுவரை நிலக்கரிச் சுரங்கங்களை எந்தவொரு அந்நிய நிறுவனத்திற்கும் தாரை வார்க்கப்படவில்லை. போ°கோ ஒப்பந்தத்தின் மூலம் நிலக்கரிச் சுரங்கங்களையும் கொள்ளையடிப்பதற்கு ஒரிஸா மாநில அரசும் - மத்திய அரசும் வழிவகுத்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்திற்கு தேவையான மின்சார விநியோகம் உட்பட பல விஷயங்களில் ஒரிஸா மாநில அரசு மிகத் தாராளமாக நடந்து கொண்டுள்ளது. அதே போல் இந்நிறுவனத்திற்கான நிர்வாக அலுவலகத்தை ஒரிஸாவின் தலைநகரில் அமைத்துக்கொள்வதற்கு கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள 25 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்துள்ளது.
இது தவிர நிறுவனம் அமையவுள்ள பகுதியை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற உத்திரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டால், போ°கோ எந்தவிதமான உள்ளூர் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட வேண்டிய நிலை இருக்காது. குறிப்பாக ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, நுழைவு வரி என அனைத்திற்கும் தடை ஏற்படும். தொழிற்சங்கம், தொழிலாளர் உரிமை போன்றவையெல்லாம் மூச்...
ஒரிஸாவிற்கு என்ன கிடைக்கும்
இந்நிறுவனத்தின் மூலம் நேரடியாக 13,000 பேரும், மறைமுகமாக 35,000 பேரும் வேலைவாய்ப்பை பெறுவர் என்று கதைக்கிறார்கள். எந்தெந்த அடிப்படையில் இது உத்திரவாதப் படுத்தப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினால் பெரும் மவுனமே நிலவுகிறது. அத்தோடு, இந்நிறுவனம் செயல்படும் காலத்தில் மாநில அரசிற்கு ரூ. 800 கோடியும், மத்திய அரசிற்கு வரி வருவாயாக ரூ. 89,000 கோடியும் கிடைக்கும். உண்மையில் ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான இரும்புத் தாதுவை கொள்ளையடிப்பதற்கு விட்டு, விட்டதோடு, ஒரிஸா மாநில அரசு அதன் அடிப்படை ஆதாரமான இரும்புத் தாது, நிலம், தண்ணீர், மின்சாரம், நிலக்கரி என்று தொடர் சங்கிலியாக கொள்ளையடிப்பதற்கு அனுமதித்து விட்டு மாநிலத்திற்கு நிதியாதாரம் பெருகும் என்று கூறுவது கேலிக்கூத்தானது.
எந்த ஒரு நாடும் அதன் அடிப்படை செல்வாதாரத்தை கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்காது. பா.ஜ.க. - பிஜூ ஜனதா தள் அரசு, மாநிலத்தின் அடிப்படை சொத்தான இரும்புத் தாதை போ°கோ ஏற்றுமதி செய்துக் கொள்வதற்கு அனுமதித்ததன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
போ°கோவின் கொள்ளைக்கு கதவைத் திறந்து விட்டதன் மூலம் எதிர் காலத்தில் நமது கையிருப்பில் உள்ள இரும்புத் தாதுவின் அளவு குறைந்து, இரும்பிற்காக போ°கோவின் கையை நாம் எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும். இது தும்பை விட்டு, விட்டு வாலைப் பிடிப்பதுபோல் இருக்கும்.
பிரேசிலும் - இந்தியாவும்
போ°கோ ஒரிஸாவை தேர்வு செய்வதற்கு முன் பிரேசிலை நம்பி இருந்தது. ஆனால் பிரேசில் அரசு இரும்புத் தாதுவை சர்வதேச மார்க்கெட் விலைக்கே விற்கப்படும் என்று உறுதியாகக் கூறி விட்டதால், இளித்தவாயர்கள் உள்ள இந்தியாவை நோக்கி ஓடி வந்தது. அத்துடன் மேலும் ஒரு காரணம் உள்ளது. உலகிலேயே இரும்புத் தாதுவில் “அலுமினா” என்ற தாது அதிக அளவில் இருப்பது இந்தியாவில் மட்டுமே. இதன் மூலம் சர்வதேச அளவில் சிறந்த அளவிலான இரும்பை தயாரிக்கலாம் என்ற காரணம் உள்ளடங்கியிருக்கிறது.
ஒரிஸா அரசிற்கும் போ°கோவிற்கும் நடைபெற்றுள்ள ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு வரவில்லை. மறைமுகமாக வேறு எந்தெந்த விஷயத்தில் போ°கோவிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்திய நாட்டிலேயே மிகப் பெரிய அந்நிய முதலீட்டிற்கான திட்டமாக இருப்பதால், இது குறித்த அனைத்து அம்சங்களையும் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டாமா? அப்படியொரு ஏற்பாடு இதுவரை நடைபெறவில்லை.
ஒரிஸா அரசின் இச்செயலை உள்நாட்டு பெரு முதலாளிகளும் எதிர்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டாடா °டீல், நிர்வாக அதிகாரி முத்துராமன் போ°கோ உடன்பாடு குறித்து, “இது தேச நலனிற்கு முற்றிலும் எதிரானது ” என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் இரும்புத் தாது ஏற்றுமதியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்கவில்லை என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
போ°கோ உடன்பாட்டின் மூலம் உள்நாட்டு முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாட்டை, வளர்ந்து வரும் அதிருப்தியை வெளிப்படையாக காண முடிகிறது.
பா.ஜ.க.வின் தேசப்பற்றை! என்ரான் ஒப்பந்தத்தில் கண்ட மக்கள், போ°கோவிடம் சரணடைந்ததன் மூலம், தேசத்தின் செல்வாதாரத்தை விற்பதில் உள்ள விசுவாசத்தை மக்கள் விரைவில் உணர்ந்துக் கொள்வார்கள்.
வளர்ந்து வரும் எதிர்ப்பும் மாற்றுத் திட்டமும்
• போ°கோவின் மாபெரும் கொள்ளைக்கு இரும்புத் தாது முதல் நிலம், நீர், நிலக்கரி, மின்சாரம் மற்றும், துறைமுகம், இரயில்வே என்ற தொடர் கொள்ளைக்கு அனுமதிக்காமல், தற்போது உள்ள சர்வதேச நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட சமச்சீரான ஒப்பந்தத்தின் மூலம் கூட்டு நிறுவனமாக செயல்படுத்த வேண்டும்.
• இரும்புத் தாது உட்பட எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இரும்புத் தாதை மதிப்புக்கூட்டுப் பொருளாக உற்பத்தி செய்த பின்தான், ஏற்றுமதி செய்ய வேண்டும். அதுவும் சர்வதேச மார்க்கெட் விலையைக் கொண்டதாக இருக்கவேண்டும்.
• இடம் பெயரும் மக்கள் பகுதியினருக்கு உத்திரவாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.
போன்ற அடிப்படை கோரிக்கைகளோடு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி, இந்திய கம்யூனி°ட் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் என்று பல தரப்பினர் எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஒரிஸா மாநில அரசு போ°கோ விஷயத்தில் மக்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருக்குமானால் என்ரானுக்கும், உப்பு நிறுவனமான கார்கில் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட கதியே போ°கோவிற்கும் என்பதில் ஐயமில்லை.
தகவல்கள் : பிஸின° லைன், பிரண்ட் லைன், பீப்பிள்° டெமாக்ரசி.
ளூளூளூ

சந்திப்பு said...

Dear Sir, This also useful to others. So, I publish it.
K. Selvaperumal

Blog Archive