Thursday, May 12, 2005

நிதியாண்மைத் தகுதி (Credit Worthiness)

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்குகள் கையாளப் படும் விதத்தையும், அவர்கள் பெறும் கடன்களை அவர்கள் நிர்வாகிக்கும் முறைகளையும் கவனித்துப் பதிவு செய்து கொள்கிறார்கள்.

நிலுவையிலுள்ள கடன்கள் திருப்பிக் கட்டப் படும் விதத்தைக் கண்காணித்து தனி நபர் அளவில் கூட தகவல் சேர்த்து வைக்கும் நிறுவனங்கள் அங்கு உள்ளன.

ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ அவர்தம் நிதி மற்றும் கடன்களைக் கையாண்ட விதத்தைப் பற்றிய தகவல் சேர்க்கும் இந்த நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்தும், கடன் அட்டை (credit card) வழங்கும் நிறுவனங்களிடமிருந்தும், மற்றைய கடன் கொடுக்கும் அமைப்புகளிடமிருந்தும் சட்டப் படி வேண்டிய தகவல்களைத் திரட்டி, வகைப் படுத்தி, சேமித்து வைக்கின்றன.

அமெரிக்காவில் ஒருவருக்குக் கடன்கள் கொடுக்கு முன் அவரைப் பற்றிய தகவல்களை இத்தகைய நிறுவனத்திடம் கேட்டுப் பெற்று, அவருக்குத் தகுதியிருந்தால் மட்டுமே கடன்கள் வழங்கப் படும்.

இந்த நிறுவனத்திடம் ஒருவரைப் பற்றிய அவர் கடன்களைக் கையாண்ட விதம் பற்றிய போதுமான தகவல்கள் இல்லாவிட்டாலோ, அல்லது அவரது நிதியாண்மை முறையற்று இருந்தாலோ, வங்கிகள், வாகனம் மற்றும் வீட்டுக் கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் முதலியவை, அவர் கடன் கேட்டு விண்ணப்பித்தால், "நீங்க வேற இடம் பாருங்கய்யா!" என்று சொல்லி அனுப்பி விடும்.

வேலைக்குச் செல்லத் தயாராகும் இளைஞர்கள் மற்றும் ஒரு நாட்டிற்குப் புதிதாகக் குடியேறுபவர்கள் முதலில் அவர்கள் நிதியாண்மைத் திறனை நிருபித்தவுடன் மட்டுமே அவர்களால் சொந்தப் பொறுப்பில் கடன் பெறமுடியும்.

ஒருவர் அவர் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்கு வழங்கும் காசோலைகள் பணமில்லாமல் திரும்பினாலோ, பெற்ற கடனிற்குத் தவணை சரியான சமயத்தில் செலுத்தத் தவறினாலோ, கடன் அட்டையை உபயோகித்து வாங்கிய பொருட்களுக்குத் தவணை சரிவர செலுத்தத் தவறினாலோ, அவரது நிதியாண்மைத் தகுதி அம்பேலாகி விடும்.

இன்று இந்திய வங்கிகள் கடன்களை வழங்கி விட்டு அவற்றில் சிலவற்றை கடன் பெற்றவர் ஏமாற்றுவதால் அல்லது திவாலாகிப் போனதால் திரும்பப் பெற இயலாமல் (வச்சுட்டான்யா ஆப்பு! என்று) தவிக்கின்றன. ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களின் வைப்புகள் அதன் பொறுப்புக்கள் (liabilities) என்றும் அது கொடுத்திருக்கும் கடன்கள் அதன் சொத்துக்கள் (assets) என்றும் கூறுவர். ஆக வராக் கடன்கள் பயனளிக்கா சொத்துகள் (non performing assets) ஆகி விடுகின்றன. இதனைத் எப்பாடு பட்டாவது தவிர்க்க வங்கிகள் முனைவதால் இன்று இந்தியாவில் கடன் பெறுவதற்காக ஆகும் செலவுகள் அதிகம் (ஏதாவது ஒரு அசையாச் சொத்தை ஈடாகக் கேட்பார்கள், அல்லது ஒரு பொறுப்பானவரின் உத்தரவாதம் வேண்டும்).

இந்தியாவில் நிதியாண்மைத் தகுதி பற்றிய தகவல் வழங்கும் நிறுவனங்கள் இதுநாள் வரை கிடையாது. ஆனால் நேற்று இந்திய அரசு இத்தகைய நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக ஏதுவாகும் வரையில் (அவற்றைக் கட்டுப் படுத்தும்) சட்டம் ஒன்றை நிறுவியிருக்கிறது. ஆனால் சரியான நிதியாண்மைத் தகுதித் தகவல்களைப் பெற இந்தியா இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். ஏனென்றால்:
  • அமெரிக்காவில் ஒரு தனிநபரைச் சந்தேகமில்லாமல் அடையாளம் காண அங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவ (unique) சமூகப் பாதுகாப்பு எண் (social security number) வழங்கப் படுகிறது. இப்படி எதுவும் இது வரை இந்தியாவில் கிடையாது. பல பெயர்களில் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இங்கு ஏராளம்
  • அனைத்து வங்கிகளும் இன்னமும் கணினிமயமாக்கப் படவில்லை. மேலும் தகவல் பரிமாற்றத்தில் இணையத்தின் பயன்பாடு தேவையான அளவிற்கு இன்னும் பரவவில்லை
  • கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் தகவல்களைச் சடுதியில் பெறும் வகையில் தேவையான தொலை தொடர்புச் சேவைகள் இன்னும் அமைக்கப் படவில்லை
  • கடன் அட்டைப் பயனர்களுக்கு அந்நிய நாட்டில் உள்ள பாதுகாப்புகள் இன்னும் இந்தியாவில் வரவில்லை. ஒரு பயனர் அவரது கடன் அட்டையைத் தொலைத்து அதன் மூலம் வேறு ஒருவர் பொருள் வாங்கிவிட்டால் வங்கிகள் இன்னும் பயனரைத்தான் அதற்கான பணத்தைச் செலுத்த வலியுறுத்துகின்றன. இதற்கான காப்பீட்டு வசதிகள் இங்கு இல்லை
  • கடன் அட்டைகளை பொதுமக்களுக்கு அவர்களது இசைவைப் பெறாமலே அனுப்பும் சில சிறுமதி படைத்த வங்கிகள், ஏமாந்த சிலருக்கு அந்த அட்டைக்கான சந்தாத் தொகை நிலுவையிலிருப்பதாக மிரட்டி அவர்களை கடன் தவணை திரும்பச் செலுத்தத் தவறுவதாக விரட்டி வருகின்றன
இயற்றப் பட்ட சட்டம் நிதியாண்மைத் தகுதி பற்றிய தகவல் வழங்கும் நிறுவனங்களைக் கட்டுப் படுத்தும் சட்டமாகத்தான் இருக்கிறது. இந்த நிறுவனங்களால் கடன் பெற வேண்டிய செலவுகள் குறைந்து அந்தப் பயன் சாதாரண இந்தியனுக்குக் கூட கிடைக்க வழி செய்ய மேற்கூறிய பிரச்சினைகளுக்கு முதலில் பதில் கண்டு பிடிக்க வேண்டும்.

அதற்கு இன்னும் வெகுதூரம் செல்லத்தான் வேண்டும்!

No comments:

Blog Archive