Friday, May 13, 2005

பெட்ரோல் விலை ...

தெற்காசியாவிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம்.

வரைபடத்தைப் பார்த்தால் இது ஏன் என்று விளங்கும்.


மூலப் பொருளான கச்சா எண்ணெயின் விலையைச் சமமாகக் கொண்டால் நாம் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் கொடுக்கும் விலையின் மிச்சப் பாகங்கள் முறையே -


  • சுத்திகரிப்புச் மற்றும் வினியோகச் செலவு,
  • சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் சில்லறை விற்பனைக்கான லாபம்,
  • இறக்குமதித் தீர்வைகள் மற்றும் மத்திய, மாநில வரிகள்
ஆகியவை.

இந்தியர்கள்தான் பெட்ரோல் உபயோகிக்க அதன் விலையில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக 63 சதவிகிதம் வரை அரசுக்கு வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் கொடுக்கிறார்கள்.


இது இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு முதல் காரணம்.

சுத்திகரிப்புச் செலவும் இந்தியாவில்தான் அதிகம். இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப் படும் போது சுத்திகரிப்பு மற்றும் வினியோகச் செலவின் மேல் மற்றச் சுமைகள் ஏற்றப் பட்டு விற்பனை விலை கணக்கிடப் படுகிறது. இதனால் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எண்ணெய் சுத்திகரிப்பதற்கான திறனை மேம்படுத்தி செலவைக் குறைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதுவே சில்லறை விற்பனையில் போட்டா போட்டி ஏற்பட்டு விலைகளை சந்தை தீர்மானிக்கும் நிலை வந்தால், விற்பனை விலை குறையும் போது லாபத்தைக் காப்பாற்ற சுத்திகரிப்பு நிறுவனங்கள் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத் திறன்களை மேம்படுத்த முயற்சிக்கும்.

தற்போது இந்தியாவில்தான் சுத்திகரிப்புச் செலவுகளும் அதிகம் ஆதலால் இது பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு இன்னொரு காரணம்.

எஸ்ஸார், ரிலையன்ஸ் மற்றும் எம். ஆர். பி. எல் போன்ற தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் சந்தையைப் பிடிக்கத் தீவிரமாகப் போட்டியிடுவதால் இந்தியன் ரயில்வே மற்றும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம். சமீபத்தில் டீசல் கொள்முதல் டெண்டர் ஒன்றை வெளியிட்ட இந்தியன் ரயில்வே நிறுவனம் பேரம் பேசி சந்தை விலையை விட டீசலுக்கு லிட்டருக்கு ரூ 1.04 வரை குறைத்து வாங்கும் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டிருக்கிறது.

இத்தகைய பயன் சாதாரண பயனர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் பெட்ரோல் விலைகளை அரசு கட்டுப் படுத்தாமல் சந்தையின் போக்கிற்கு விட்டால்தான் முடியும்.

எரிபோருள் எண்ணெய் விலைகளை அரசு கட்டுக்குள் வைத்திருப்பதால் ஏற்கெனவே அரசு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட (சுமார் ரூ 2400 கோடி) பொருள் இழப்பாம்!

2 comments:

Muthu said...

இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மண்ணெயின் விலை அதிகம் பெட்ரோலைவிட. இந்தியாவில் இப்படித் தலைகீழாய் இருப்பதற்குக் காரணம் இந்தியாவின் விலைவாசியமைப்பு கீழ்தட்டு மக்களின் பக்கம் சாய்ந்திருக்கும் ஒன்று.

ந. உதயகுமார் said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள் முத்து. 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயும், உலகில் ஒரு நாளைக்கு 1 டாலருக்கும் குறைவாக வருவாய் ஈட்டுவோரில் (சுமார் 110 கோடி பேர்) 42.8 கோடி இந்தியாவிலும் உள்ளனர். இந்த நிலையில் விலையமைப்பு இப்படி அமைந்ததில் வியப்பில்லை.
அதீத வரி வசுலித்தால் அது நுகர்வைக் குறைக்க உதவும் என்ற அரசின் எதிர்பார்ப்பும் இத்தகைய வரி விகிதத்திற்கும் விலைக்கும் காரணம் என்றும் சொல்லலாம். பின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவே இந்தியாவின் 109 பில்லியன் டாலர் இறக்குமதிச் செலவில் 30 சதவிகிதம் என்றால் அரசுக்குச் சற்று உதைப்பாக இருக்காதா?

சுத்திகரிப்பு நிறுவனங்கள் திறனைப் பெருக்கி செலவைக் குறைக்க வேண்டிய அவசரத் தேவை நேரத்தில் "மெட்டி ஒலி" பார்த்துக் கொண்டிருப்பதைச் சகித்துக் கொண்டு திறன் குறைந்த நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இந்தியர்கள் அழும் ரூபாய்களுக்கு தனியார் நிறுவனங்களின் போட்டி ஒரு நல்ல ஆரம்பச் சவால்.

இப்போதே அரசு விலையைக் கட்டுப் படுத்துவதால் விற்பனைப் பக்கத்திலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் கொள்முதல் பக்கத்திலிருந்தும் அழுத்தம் வரும் போது, இந்த அரசு நிறுவனங்கள் விலையை அரசு ஏற்றாமலிருப்பதை நஷ்டத்திற்கு நொண்டிச் சாக்காகக் கூறுகின்றனவே தவிர ஒன்றும் செலவைக் குறைக்கும் வழிகளில் செல்ல எத்தனிப்பதாகத் தெரியவில்லை. இவற்றை கூடிய விரைவில் தனியாருக்கு விற்று விட்டு, சந்தையை விலை நிர்ணயிக்கும் சாதனமாக அமைப்பதுதான் சிறந்தது என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது.

Blog Archive