Tuesday, June 21, 2005

சர்வ வல்லமை பெற்று வரும் அலைபேசி

அலைபேசி (செல்·போன்) எனும் கருவி இன்றைய மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அசகாய சாத்தியங்களால் உள்ளங்கைக்குள் பல விந்தைகளை அடக்கித் தருகிறது. அலைபேசியின் வல்லமை வளர்ந்த கதையைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். (நான் மின்னணுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை மிகுந்த ஆவலுடன் தொடர்பவன். ஆகவே என் பதிவுகளில் அதன் தாக்கம் சற்று இருந்தே தீரும்.)

தொலைவிலுள்ள மற்றொரு தொலைபேசி உரிமையாளரிடம் குரல் வழித் தொடர்பு ஏற்படுத்திப் பேச முடிதல் தொலைபேசியின் ஒரு அதிமுக்கியப் பயன்.

தொலைபேசிகள் சுவரில் உள்ள தொடர்பு முனையுடன் மின்கம்பிகள் மூலம் இணைக்கப் படவேண்டியிருக்கும் கட்டாயமிருப்பதால் அவற்றை நான்கு சுவர்களுக்குள் மட்டுமே உபயோகிக்க முடிகிறது.

அலைபேசித் தொழில் நுட்பம் இந்த மின் இணைப்புத் தேவையை நீக்கியதோடல்லாமல் குறிப்பிட்ட எண்ணுள்ள ஒரு தொலைபேசி ஒரு குறிப்பிட்ட லாட்டிட்யுட் (lattitude) மற்றும் லாங்கிட்யுட் (longitude) சந்திப்பில் உள்ள ஒரு குறுகிய பரப்பில்தான் வேலை செய்ய வேண்டும்/ முடியும் என்ற கட்டாயத்தைத் தகர்த்தது.

தொலைபேசியை இந்தியா போன்ற நாடுகளில் ஒருவருக்கு மேல் பகிர்ந்து கொள்ளுவார்கள். (உதாரணம்: ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும், பக்கத்து வீட்டுக்காரர்கள், அவர்களைக் காண வரும் அவர்களின் நண்பர்கள்....) இந்தத் தொல்லைக்காகவே அனைவரும் தன் வீட்டில் இணைப்பு வாங்காமல் பக்கத்து வீட்டுக் காரன் தொலைபேசி வாங்கக் காத்திருந்தார்கள்.

கூப்பிடும் நபரை அடையாளம் காட்டும் வசதியுள்ளது அலைபேசி. இது தொலைபேசி பெயர் விவரக் கையேட்டுக்கான (telephone directory) தேவையை பெறுமளவு ஒழித்து விட்டது. அடிக்கடி தொடர்பு கொள்ளும் எண்களின் பெயர் விவரக் கையேட்டை அலைபேசிக்குள்ளேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இந்த வசதிளுடன் இடம் பெயர்ந்தவாறே பணிபுரியும் ஆற்றல் பெற்ற அலைபேசி ஒரு தனிப்பட்ட சொந்த உபயோகப் பொருளாக (சுலபமாகப் பகிர்ந்து கொள்ளத் தயங்கும் பொருளாக) மாறியது. அசந்தால் சுலபமாக சுட்டு விடக்கூடிய அதன் உள்ளங்கைக்குள் அடங்கி விடும் அளவும் அது பத்திரப் படுத்தப் படும் சொந்த உபயோகப் பொருளாக மாற வலுவான ஒரு காரணம்.

தொலபேசி இணைப்பு வேண்டுமென்றால் நாட்டில் பல பேரைக் 'கவனிக்க' வேண்டியிருந்தது. ஆனால் அலைபேசி சேவைகளை நிறுவிய தனியார் நிறுவனங்கள் நீங்கள் சாதாரணமாகத் தும்மினாலே "அலைபேசி வேண்டும் என்று கேட்ட மாதிரியிருந்ததே" என்று தங்கள் விற்பனையாளர்களை அலைபேசி வாங்கும் படி உங்களிடம் கெஞ்சிக் கூத்தாட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அலைபேசியானது குரல் வழித்தொடர்புன் கூடவே எழுத்து வழித்தொடர்பான குறுஞ்செய்தி (SMS) பரிமாற்ற வசதிகளையும் ஆரம்பம் முதலே அளித்து வருகிறது. அலைபேசிகளை குறுஞ்செய்தி சேவைகளுக்காக மட்டுமே ஒரு இருவழி பேஜர் (Pager) போல் உபயோகிப்போர் ஏராளம். இதனால் கட்டை விரலால் தட்டச்சும் திறமை அத்தியாவசியமாகத் தொடங்கியது.

மேற்கூறப் பட்ட விற்பனைப் போட்டியாலும், குறுஞ்சேவை வசதியாலும், உலகின் எந்த நகரத்திலும் அலைந்து கொண்டே தொலை பேசும் சாத்தியங்களாலும் அலைபேசியின் விற்பனை கிடுகிடுவென்று ஏறியது.

குறுஞ்செய்திகளையும் பெயர் விவரக் கையேட்டையும் படிக்க ஏற்படுத்தப் பட்ட திரை நாளடைவில் வண்ணத்திரையாகியது. எழுத்து வடிவம் மட்டுமே காட்டிய திரை நாளடைவில் படங்களையும் காட்டியது.

படம் காட்டக் கூடிய வண்ணத் திரையைத் தாங்கி ஒருவர் செல்லும் இடமெல்லாம் கூடவே கொண்டு செல்லும் கருவியில் புகைப்படம் பதிப்பிக்கக் கூடிய சாதனம் (காமிரா) அமைப்பது வேலைக்காகும் ஒரு வியாபார சாத்தியமாயிற்று. வீட்டுக்குள்ளே மட்டுமே இயக்கக் கூடிய தொலைபேசியில் புகைப்படம் பிடிக்கும் கருவி அமைத்தால் அதனால் கிடைக்கும் பயன்கள் குறைவு.

நிழற்படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த அலைபேசிகள் இன்று அசையும் ஊமைப் படங்கள் எடுக்கின்றன. இத்தகைய படங்கள் இன்று திக்கித் திக்கி ஓடுகின்றன என்றாலும் மூர்ஸ் விதியின் தாக்கத்தால் கணினிச் சில்லுகள், ஒளிப் பதிவு செய்யும் CCD, ஞாபகச் சில்லுகள் இன்னும் வேகம் பெற்று இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நாட்கள் தொலைவில் இல்லை.

புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் அமெரிக்க அலைபேசிகளில் இன்று தொலைக்காட்சி பார்க்க முடியும். சிங்கப்பூரில் கூட இது சாத்தியமாம். அலைபேசியிலும் துல்லியமான தரமான ஒலியை தரக் கூடிய தொழில் நுட்பம் புகுத்தப் பட்டு விட்டது. MP3 பாடும் வசதி அதற்குள் அமைக்கப் பட்டு விட்டது.

2G, 3G, 3.5G, 4G என்று உயர்ந்து கொண்டே செல்லும் செய்திப் பாட்டைகளின் அளவை உயர்த்தும் தொழில்நுட்பத்தால் அலைபேசியில் இன்று தொலைக்காட்சி பார்க்க முடிகிறது. GPRS தொழில் நுட்பத்தால் அலைபேசியை ஒரு இணைய உலாவியாக (Internet Browser) உபயோகிக்க முடிகிறது.

ப்ளூ டூத் (Bluetooth) என்ற தொழில்நுட்பம் மின்கம்பித் தொடர்பில்லாமல் ஒரு அலைபேசியில் பேச்சு மற்றும் இசை கேட்கவும், பேசவும் வசதி செய்து தருகிறது. அத்துடன் நில்லாமல், ப்ளூ டூத் தொழில்நுட்பம் அலைபேசியைக் கணினியுடன் மின் கம்பியில்லாமல் இணைத்து தகவல்கள் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிறது.

சமீபத்தில் அயல்நாட்டில் என் நண்பர் ஒருவர் அலைபேசிக்கொண்டே அவரது காரில் நுழைந்து அதைக் கிளப்பிய போது "உங்கள் உரையாடலை காரின் ஒலி அமைப்புக்கு மாற்றவா?" என்று ப்ளு டூத் தொழில் நுட்பம் அவரைக் கேட்டு அவர் ஆம் என்றதும் உரையாடலை காரின் ஒலி அமைப்புக்கு சுலபமாக மாற்றிக் கொடுத்து விட்டது.

இத்தனையும் உள்ளடக்கி நான்கு மணி நேரப் பேச்சுத் திறனைத் தரக் கூடிய மின்கலத்தையும் உள்ளடக்கிய அலைபேசியின் எடை இன்று 200 கிராமுக்கும் கீழே.

விலையுயர்ந்த அலைபேசிகள் இன்று ஒரு தனிநபர் கணினியின் (Personal Computer) சக்தியை உள்ளடக்கி வருகின்றன. இன்றைய தேதியில் இவை மிகுந்த எடையுள்ளவையாக இருந்தாலும் நாளடைவில் அவையும் எளிதில் சட்டைப் பையில் எடுத்துச் செல்லும் சாதனங்களாக மாறும்.

கூடிய விரைவில் எதிர்முனையிலுள்ளவரைப் பார்த்துக் கொண்டே பேசும் வசதி அலைபேசிக்கு வரும். அதற்கு வேண்டிய பல தொழில் நுட்பங்கள் அலைபேசிக்குள் ஏற்கெனவே அடக்கம்.

ஜப்பானில் அலைபேசியை கடன் அட்டைகளுக்கு (credit card) பதிலாகவும், ஒரு மின் பணப்பையாகவும் கூட உபயோகிக்கிறார்கள்.

அமெரிக்காவின் 911 அவசர எண் சேவை அளிப்போர் கூப்பிட்ட அலைபேசி இருக்கும் இடத்தை துல்லியமாக அறிய வேண்டிய தேவை இருப்பதால் அலைபேசிக்குள் GPS (Global Position System) தொழில் நுட்பமும் கூடிய விரைவில் வரும். அப்படி வரும் போது, திக்குத் தெரியாத தேசத்தில், அலைபேசியிலுள்ள வரைபடத்தை உபயோகித்து ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் யாரையும் வழி கேட்காமல் செல்ல முடியும்.

ஒரு சாதாரண தொலைபேசிக்கு இணையாக அதைவிட இலகுவாக இடம் பெயர்ந்து கொண்டே பேசும் வசதிகளை அளிக்க உருவாக்கப் பட்ட ஒரு சாதனம் பத்தே வருட இடைவெளியில் எங்கோ போய்விட்டது.

மூர்ஸ் விதியின் இயக்கற்திற்க்கு ஒரு அசைக்கமுடியாத எடுத்துக்காட்டு அலைபேசி.

அட! இதுவரை பொறுமையாக வந்து விட்டீர்களே. அப்போ இந்தப் பதிவையும் படியுங்கள் - அலைபேசியும் கலாசாரமும்.

6 comments:

கறுப்பி said...

அண்ணே! ஏதாவது கொஞ்சம் காமெடியா, ஷோட்டா எழுதுங்க படிக்கிறன். தொழில்நுட்ப நீண்ட பத்தியெல்லாம் படிக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. கோவிச்சுக்காதேங்கோ.(*_*)

ந. உதயகுமார் said...

அன்புள்ள கறுப்பி,

அப்படிப் போடுங்க அருவாள... நாலு வார்த்தை சொன்னாலும் 'நச்'சென்று மனதில் பட்டதை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி! இது மாதிரி கிடைக்கும் பின்னூட்டம் (Feedback) தங்கம் போன்றது.. என்று சொல்வார்கள். சுலபமாகக் கிடைக்காது. கிடைப்பதைத் தங்கமாக கருதி அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதைப் பெரிதும் நம்புபவன் நான். ஆகவே கோபமெல்லாம வராது தங்கச்சி!

இந்தப் பதிவை எழுதி விட்டு திரும்பப் படித்த போது எனக்கே தொழில் நுட்பம் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிந்தது. அதைச் சரி செய்ய அங்கங்கே இடைச் செருகலாக யதார்த்தத்தைச் சேர்க்கப் போக அனுமார் வால் மாதிரி பதிவு நீண்டு விட்டது.

எழுதுபவருக்கும், மேடையில் பேசுபவருக்கும் சபையில் (audience) பெரும்பாலானோரை ஈர்க்கும் படி கருத்துக்களை வெளிப்படுத்துவது மிகவும் வேண்டிய திறமை. உங்களை என் பதிவு ஈர்க்கவில்லை என்பது எழுதக் கிளம்பியிருக்கும் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் சவால். சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

இந்த வாரத்திலேயே இனி வரப் போகும் பதிவுகளின் நீளத்தில் அதிகக் கவனம் செலுத்துவேன்.

தொழில் நுட்பம், பொருளாதாரம், நாட்டு நடப்புகள் என்று பதிவு போடக் கிளம்பியிருக்கும் நான் அவற்றை பற்றிய கருத்துகளை இன்னும் உணர்வுடன் சொல்வதில் இன்னமும் கற்றுக் குட்டிதான். ஆனால் இதைத் தவிர மற்ற சப்ஜெக்ட் எனக்குக் கொஞ்சம் Out of Syllabus ஆயிற்றே.

- உதயகுமார்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உதய், இந்தப் பதிவு நீளமென்றாலும் நுட்பியலில் ஆர்வம் இருப்பதால் முழுதும் படித்தேன். சுருக்கமாய் எழுதுவதும் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று தான். எனக்கும் கூட இந்தச் சிக்கல் இருக்கிறது. என் வீட்டிலேயே இது பற்றிக் கிண்டலாகக் கருத்துக்கள் எழுவதுண்டு. பயிற்சி மூலம் கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி ஊக்கத்துடன் தொடருங்கள்.

ந. உதயகுமார் said...

நன்றி செல்வராஜ்!

எண்ணச்சிதறல்கள் said...

பயனுள்ள பதிவு. நன்றி.

Anonymous said...

பயனுள்ள கருத்துகள். குறிப்பாக நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன் தரும் பொருள்களைப் பற்றிய அறிவை நாம் பெற்றிருந்தோமானால்
சிறப்பு. அவ்வகையில் தங்களின் படைப்பு மனதிற்கு மட்டுமல்லாமல் அறிவிற்கும் விருந்தாக அமைந்தது.
நன்றி.

Blog Archive