அலைபேசித் தொழில் நுட்பத்தால் நம் நாட்டில் பெரும் கலாசாரப் புரட்சியே நடக்கிறது.
- இளம்பெண்கள் கழுத்தில் தங்கம் தொங்குவதை விட அதிகம் அலைபேசிகள்தான் கழுத்துக்கு அணியாகத் தொங்குகின்றன. அணிந்திருப்பவரின் செல்வச் செழிப்பை தொங்கும் அலைபேசியின் மாடலைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்
- தனக்குத் தானே பேசிக்கொண்டு ஓட்டுவதைப் போல் தோற்றமளிக்கும் வாகன ஓட்டிகளை ஒத்துக்கொள்கிறோம். உண்மையிலேயே ஒருவர் தனக்குத் தானே பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிக் கொண்டு போனால் இனிமேல் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை
- கழுத்தை 60 டிகிரி கோணத்திற்கும் மேல் சாய்த்து காதுக்கும் கழுத்துக்கும் இடையே அலைபேசியைப் பொருத்திப் பேசியபடியே இரு கைகளாலும் வாகனம் ஓட்டுவது அல்லது மற்ற தலைபோகும் காரியங்கள் செய்வது இள வயதினருக்கு வேண்டிய முக்கியத் திறமைகளில் ஒன்றாகிவிட்டது. இதை வைத்து தொலைக்காட்சி விளம்பரங்கள் பல வந்து விட்டன
- நிச்சயம் செய்த பெண்ணுக்குப் நிச்சயம் முடிந்தவுடன் பையன்கள் இப்போது தவறாமல் வாங்கித் தரும் முதல் பரிசுப் பொருள் அலைபேசியும், சிம் (SIM) பட்டையும்தான். கல்யாணமான பல மாதங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிபடுகிறது!! இதில் பிந்தைய விஷயம் மட்டும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் மாறுவதில்லை!!!
- அலுவலகத்தில் நாளெல்லாம் "மன்மத ராசா..." சங்கீதமும் "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு..." சங்கீதமும் ஒலிப்பது இயல்பு நிலை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் உண்டு நம் வேலையுண்டு என்று தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்
- திரையரங்கிற்கு காசு கொடுத்துச் சீட்டு வாங்கிப் படம் பார்க்கப் போகும் போது, திரைப்பட வசனத்தை விட அண்டை இருக்கைக்காரரின் அலைபேசி விவாதம் நகைச்சுவை மிக்கதாகவோ அல்லது கருத்தைக் கவருவதாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம்
- சில மேலதிகாரிகள் கீழே வேலை செய்பவர்களுடன் பேசவேண்டுமென்றால் 'missed call' தான் கொடுப்பார்கள். கீழதிகாரிகள் புரிந்து கொண்டு மரியாதையுடன் மேலதிகாரியைக் கூப்பிட்டுப் பேச வேண்டும்
- தப்பித் தவறி அலைபேசியில் பேசும் போது எதிர் முனையில் இருப்பவரை "என்ன செய்து கொண்டிருக்கிறாய்" அல்லது "எங்கே இருக்கிறாய்" என்று கேட்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடாதீர்கள். நான் பல மூடிய கழிப்பறைகள் அலைபேசியில் பேசக் கேட்டிருக்கிறேன்
- அலைபேசி வைத்திருப்பவர்களுக்கு ஆங்கிலப்புலமை மட்டும் போதாது bcos குறுஞ்செய்திச் சேவைக்கு இப்போது nglsh தான் பெரிதும் பயன்படுத்தப் படுக்கிறது LoL :-)
- முன்பின் தெரியாத, ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிந்த பதினாறு முதல் இருபத்தி இரண்டு வயதுள்ள பெண் நம்மை நோக்கிச் சிரித்துப் பேசி தலையை ஆட்டிக்கொண்டு வந்தால் காதில் அலைபேசி ஒலிப்பானைத் தேட வேண்டும். கீழ்பாக்கத்துக்கு அனுப்ப நினைக்கக் கூடாது! கண்டிப்பாக வேறெந்த நினைப்பும் கூடாது!!
3 comments:
படித்தேன். புன்னகத்தேன்.
நன்றி! உங்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி சுவையான கருத்துக்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும். -உதயகுமார்
Hilarious :) Especially the ringtones.... they can really get on your nerves.
Post a Comment