ஜெட் ஒரு சிறந்த விமான சேவை நிறுவனம் என்பதில் துளியும் ஐயமில்லை.
- பல வருடங்களாக ஜெட் இந்திய பொது விமான சேவையில் சிறப்பாகப் பணி செய்துள்ளது
- விமான சேவையில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது
- ஆரம்பத்தில் விமானப் பயணத்தில் மதுபானங்கள் வழங்கி வாடிக்கையாளர்களைத் தம் பக்கம் திருப்பும் வியாபார தந்திரங்களைக் கடைப் பிடித்தாலும், துருதுருப்பான சேவை, நேரம் தவறாச் சேவை, இளமையான பணிக்குழு, கனிவான மற்றும் கருத்தான சேவை முதலியவற்றை, வியாபாரம் வேகமாக வளர்ந்த போதும் தொடர்ந்து அளித்த திறனால் வாடிக்கையாளர்களைத் தம் பக்கம் தக்க வைத்துக் கொண்ட நிறுவனம்
- வியாபாரத்தில் போட்டி என்றால் என்ன என்று மற்ற சேவைகளுக்குப் புரிய வைத்தது ஜெட்
- அடிக்கடி தன் சேவையை உபயோகிப்போருக்கு சலுகைத் திட்டங்களைக் கொண்டு வந்ததில் முன்னோடி
ஜெட் பங்கின் இன்றைய விலை (price) அந்நிறுவனத்தின் ஒரு பங்கு (stock) ஈட்டும் லாபத்தை (earnings) விட ஏறக்குறைய 65 மடங்கு (P/E Ratio) அதிகம் என்று "எகனாமிக் டைம்ஸ்" குறியீடுகள் பட்டியலிலிருந்து அறிகிறோம். பங்குகள் விலை நிர்ணயம் செய்வதில் இந்த விகிதக் குறியீடு மிக முக்கிய இடம் பெறுகிறது.
ஒரு பங்கு ஒரு வருடத்தில் ஈட்டும் லாபத்திற்கு மேல் 65 மடங்கு அதிகம் விலை கொடுத்து அந்தப் பங்கை மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், நிறுவனத்தின் வியாபாரத்திலும், எதிர் காலத்தில் லாபம் ஈட்டும் திறனிலும் வளர்ச்சி சிறப்பாகத் தொடரும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
உலகின் மற்ற நாடுகளிலுள்ள விமான சேவை நிறுவனங்களின் பங்கு விலைக்கும், ஒரு பங்கு ஒரு ஆண்டில் ஈட்டும் லாபத்திற்கும் உள்ள விகிதம் 10 முதல் 20 க்கு உள்ளாகவே இருக்கிறது.
வியாபார வளர்ச்சியில் ஜெட் நிறுவனம் எதிர் கொள்ளப் போகும் சவால்கள்:
- ஆரம்பக் காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே போட்டியிட்ட ஜெட்டுடன் போட்டியிட பல திறனுள்ள தனியார் நிறுவனங்கள் கிளம்பி விட்டன. பலத்த போட்டி நிலவுகிறது
- பன்னாட்டு விமான சேவையில் ஜெட்டுக்கு முன் அனுபவமும் சந்தையில் பெயரும் இல்லை. கை தேர்ந்த விமான சேவைகளுடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களைத் தம் பக்கம் திருப்ப வேண்டும்
- பன்னாட்டு விமான சேவை அளிக்க பெரிய, அதிகத் தூரம் பறக்கக் கூடிய விமானங்கள் தேவை. உலகப் பயணிகளை அவர்கள் மொழி பேசி, அவர்கள் கலாச்சாரத்தைப் புரிந்து, குறிப்பறிந்து சேவை செய்யும் திறனுள்ள பணியாளர்கள் தேவை. இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்ளச் செய்ய வேண்டிய முதலீடுகள் அதிகம்
- இந்திய விமான நிலையங்கள் விரிவு படுத்தப் படும் வேகம், பயணிகள் போக்குவரத்து வளரும் வேகத்தை விட மிகக் குறைவாக் இருக்கிறது. ஓடுதளங்களுக்கும், விமானம் நிறுத்தும் இடங்களுக்கும், பயணிகள் மற்றும் அவர்கள் உடமைகளைக் கையாளும் திறனுக்கும் பற்றாக்குறை வரும் போது அது ஜெட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஒரு தடையாக இருக்கும்
லாப வளர்ச்சியில் ஜெட் நிறுவனம் எதிர் கொள்ளப் போகும் சவால்கள்:
- போட்டி அதிகரித்திருப்பதாலும், பட்ஜெட் சேவைகள் வருகையாலும், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திட்டங்களாலும், விமான சேவைக்கான விலைகள் இறங்கு முகமாக அல்லது சம நிலையிலேயே கடந்த சில ஆண்டுகளாக உள்ளன. பண வீக்க விகிதத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் நிலமை கவலையளிக்கிறது
- விமான எரிபொருளுக்கான விலை ஏறுமுகமாக உள்ளது
- தகுதியுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை தேவைக்குக் கீழ் உள்ளதால், பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களை போட்டி நிறுவனத்திற்குச் செல்லாமல் தக்க வைத்துக் கொள்வதற்கும் செலவு அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கும்
இவற்றை வைத்துப் பார்த்தால் நீண்ட கால முதலீட்டிற்கு உகந்த நிறுவனங்களுக்கான எனது பட்டியலில் ஜெட் நிறுவனத்தை சேர்க்க என்னால் இயலவில்லை.
2 comments:
இந்த பதிவுக்கு நன்றி. பங்கு சந்தை பற்றிய உங்கள் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்க உதயகுமார்.
நன்றி ராஜா! கண்டிப்பாக முயற்சிக்கிறேன். ஆனால் நான் இந்தத் துறையில் விற்பன்னன் அல்லன். ஏதோ எனக்கு பட்டவற்றை அல்லது புரிந்தவற்றை இங்கு பதிவு செய்கிறேன். -உதயகுமார்
Post a Comment