Tuesday, June 21, 2005

மெட்டி ஒலி சரோ பாத்திரம்...

அவ்வப்போது கடைக்கண்ணால் மெட்டி ஒலி பார்த்தவன் நான். இந்தத் தொடரில் இரண்டு பாத்திரங்கள் என் கருத்தைக் கவர்ந்தன. ஒன்று கோபியின் பாத்திரம். மற்றொன்று சரோ பாத்திரம்.

சரோ, தொடரின் முந்தைய நாட்களில், மிகச் சிரமமான, ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலைகளில் கூட காட்டிய பொறுமை வியக்க வைத்தது. அவரது கதாபாத்திரம் எப்போதுமே ஒரு உணர்ச்சி மிகுந்த ஆனால் அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு மௌனமாக அழுதே தீர்க்கும் பாத்திரமாகத்தான் காட்டப் பட்டது. சரோவின் அடிப்படைப் பண்புகள் அல்லது குணங்கள் மிக நல்லவை என்றும் அவர் அப்பா பெருமைப் படக் கூடிய வகையில் நடக்கும் ஒரு மகள் என்றும் தொடரின் கடைசி வரை சித்தரிக்கப் பட்டிருந்தது.

தந்தை இறந்த காட்சியில் சரோவின் சீற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதை அவர் வெளிப்ப்படுத்திய விதம் அவரது உயர்ந்த பாத்திரப் படைப்பை சிதைத்து விட்டது.

எவருக்குமே தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சொல்லொணா துயரத்தையும் துக்கத்தையும் அளிக்கக் கூடியது. அப்படிப் பட்ட துக்கம் தாக்கும் போது மனம் நடுநிலையில் வேலை செய்யாதுதான். அப்போதுதான் அடிப்படைப் பண்புகள்தாம் ஒருவரது வார்த்தைகளையும் செய்கைகளையும் கட்டுப் படுத்தும்.

ஒருவரது தந்தை இருந்த போதும் இறந்த போதும் அவரது பிள்ளைகள் செய்யும் காரியங்கள் அவரது பெயரைப் பாதிக்கும். ஆகவே ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவர் மேலுள்ள பாசத்தால் ஒரு நடத்தை, அவர் இல்லாத போது அடிப்படைப் பண்புகள் தலைதூக்கும் வேறொரு நடத்தை என்பது உயர்ந்த மனிதப் பண்புகள் உள்ள பெண் என்று சித்தரிக்கப் பட்ட ஒரு பாத்திரத்தை முழுமையாக சிதைக்கும் ஒரு செயல்.

தொடரில் இந்தக் கட்டத்திற்கு முன்னெல்லாம் சரோ என்ற பெண் மென்மையானவளாகவும், கனிவானவளாகவும், கொடுமைகளை சகித்துக் கொள்பவளாகவும், அப்பாவின் பேச்சுக்கு மிகுந்த மரியாதை உடையவளாகவும் சித்தரிக்கப் படுகிறார். ஒருவர் இறந்த பின் அவர் பேச்சுக்கு மரியாதை கொடுக்கப் படவேண்டியதில்லை என்றால் அவருடன் இருந்த அப்பா மகள் உறவிற்கு முதலிலிருந்தே மதிப்புக் கொடுக்கப் படவில்லை என்று அர்த்தம். இங்கேயும் பாத்திரச் சிதைவு வந்து விட்டது.

மரியாதை இல்லாமல் பெரியவர்களையும் கணவனையும் கொடிய வார்த்தைகளைக் கொட்டி திட்டித் தீர்த்த சரோ தனக்கும் அவர்களுக்கும் அடிப்படைக் குணத்தில் பெரிய வித்தியாசமில்லை என்று காட்டி விட்டார். பிறகு அவர் யார் மற்றவர்களை மன்னிக்க? பின்னர் கணவனை மட்டும் மன்னித்ததும், மாமியாரை கடைசி வரை வெளிப்படையாக எல்லோருக்கும் முன் வைத்து மன்னிக்க முடியாது என்று கூறியதும் அந்தப் பாத்திரத்தை சுயநலமுள்ளதாகவும், அரக்க குணமுள்ளதாகவும் சித்தரித்து விட்டது. பெருந்தன்மை என்ற குணம் அந்த கதாபாத்திரத்தில் இம்மியளவும் காட்டப் படவில்லை.

கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேவைப்பட்டது என்றாலும் இத்தனை அடிப்படை முரண்பாடுகள் கொஞ்சம் அதிகம்தான்.

சன் டீவி திரை விமரிசனம் பாணியில் சொல்லவேண்டுமென்றால் "சரோ....... ஒரு ஸாரோ (Sorrow)!"

நிறைய எதிர்கால மாமியார்கள் மெட்டி ஒலி சரோவைப் போல மருமகள் தேடுகிறார்களாம். திருமண வயதில் உள்ள இளைஞர்களே.. சிந்தித்துத் தலையைக் (அல்லது ஆண்களுக்குக் கால் கட்டு போடுவதால் காலைக்) கொடுங்கள்!!!

நிறைய தமிழ் மருமகள்கள் மற்றும் மருமகளாகப் போகும் இளம் பெண்கள் சரோ பாத்திரத்தை மெட்டி ஒலி முடியும் நாளில் வானொலியிலும், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பிலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்கள்.

தமிழ் சமுதாயம் இன்னும் உணர்ச்சி பூர்வமாகத்தான் சிந்திக்கிறது.

வம்புக்கு இழுத்து விட்டேன். வாருங்கள் அரிவாளுடன்!!!

6 comments:

வீ. எம் said...

நல்லதொரு அலசல் உதயகுமார், வித்தியாசமான பார்வை ! வாழ்த்துக்கள்

அப்புறம் 2 கதாபாத்திரம்னு( கோபி , சரோ) சொல்லிட்டு சரோ வை மட்டும் அலசிட்டு விட்டுடீங்க.. மறைமுகமா கோபியையும் அலசி இருக்கீங்க (திருமுருகன் என்கிற இயக்குனராக)
ஆனா கதாபாத்திரம் கோபியை விட்டுடீங்க !
நல்ல பதிவு

வீ எம்

NambikkaiRAMA said...

திருமுருகன் தங்கள் விமர்சனத்தை கவனிப்பார் ஆகுக!

ந. உதயகுமார் said...

நண்பர்கள் வீ.எம், ani, மூர்த்தி, positiverama,

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

//ஆனா கதாபாத்திரம் கோபியை விட்டுடீங்க !//

பதிவு சரோ பாத்திரம் பற்றியதாகையால் கோபியை வேறொரு பதிவில் வேண்டுமானால் அலசுவோம். என் பார்வையில் பட்ட வரை கோபியின் கதாபாத்திரத்தில் பெரிய முரண்பாடுகளைக் காண முடியவில்லை.

// தென்றல் புயலானால், சேதம் எப்படி இருக்கும் என்று சமீபத்தில் பார்த்ததை அதற்குள் மறந்து விட்டிர்களே?!. //

மறக்கவில்லை ani. அப்படிப் புயலான போது முன்னுக்குப் பின் முரணான பாத்திரப் படைப்பு இருந்தது என்றுதான் கூறுகிறேன்.

// ஆனால், உண்மை வாழ்வில், பெண்களே தேவையான போது, எதிர்ப்பு காட்டுங்கள்.//

பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத ஏழை அப்பாவிற்குப் பிறந்த மருமகள்கள் கொடுமை படுத்தும் மாமியார், கணவனுக்கு எதிராக சரோ செய்ததற்கு மேல் (இந்திய நாட்டில்) ஒன்றும் செய்ய முடியாது என்பது என் எண்ணம். மேலும், ஒரே நம்பிக்கை மற்றும் போக்கிடமான அப்பாவே போன பின் என்ன தைரியத்தில் அல்லது விவேகத்தில் சரோ அப்படிப் புயலானார், அதுவும் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு? அப்பாவுடைய சொத்து வரும் என்ற நம்பிக்கையிலா? அதற்குத்தான் பங்காளிகள் எக்கச்சக்கமாக இருக்கிறார்களே?

பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு கணவனை வழிக்குக் கொண்டுவர 'உன்னால் முடியும் தம்பி' சொல்லிக் கொடுத்த ஒரே எதிர்ப்பு ஆயுதம்தான் உள்ளது. அதுவும் சில கணவர்களிடம் மட்டும்தான் செல்லும். மாமியாரிடம் பிரயோசனப் படாது!

// இந்த பொம்பளைங்கதான் சமைக்காம டிவிய கட்டி அழறாங்கன்னா.. ஆண்களுமா அப்படி? //

நாம அந்தப் பொம்பளையைத்தான் கட்டிக்கிட்டு வாழறோம் இல்லையா? இதற்காக ஆளுக்கு ஒரு தனியறை, டீவி உள்ள வீடு வாங்கவா முடியும் மூர்த்தி சார்?

// திருமுருகன் தங்கள் விமர்சனத்தை கவனிப்பார் ஆகுக! //

வலைப்பதிவெல்லாம் படிக்கிறாரா என்ன?

- உதயகுமார்

Chandravathanaa said...

மெட்டிஒலியை நான் பார்க்கவில்லை. அதனால் எந்தக் கருத்தும் அது பற்றிக் கூற முடியவில்லை.
ஆனால் பெரும்பாலான இந்தியத் தொடர்களில் பெண்களை மிக மலிவாகச் சித்தரிக்கிறார்கள்.

பணத்துக்காக பெண் எது வேண்டுமானாலும் செய்வாள் என்பது போல,
சிண்டு முடிவதே பெண்ணின் வேலை என்பது போல,
பெண் என்றாலே அழுகுணி என்பது போல,
மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரு போதுமே ஒத்து வராது என்பது போல..
இன்னும் பலவாய் பெண்களின் குணங்களுக்கு என்றே சில முத்திரைகளைக் குத்தி வைத்து, அதன் படி பெண்பாத்திரங்களைச் சித்தரிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் பெரும் மாற்றம் கண்டிப்பாக ஏற்படுத்தப் பட வேண்டும்.

காரணம், இன்னும் கூட சில பெண்கள் இப்படியான தொடர்களைப் பார்த்து விட்டு தாமும் அப்படியே இருந்து கொண்டு தம்மைச் சுற்றியுள்ள பெண்களையும் அந்தத் தொடர்களில் வரும் பெண்கள் போலவே (வாய் மூடி மௌனிகளாக.. சந்தேகப் பிராணிகளாக...)இருக்க வேண்டும் என்றோ அல்லது அப்படித்தான் இருக்கிறார்கள் என்றோ பார்க்கிறார்கள்.

ந. உதயகுமார் said...

உங்களது நல்ல கருத்துக்களுக்கு நன்றி சந்திரவதனா!

// பணத்துக்காக பெண் எது வேண்டுமானாலும் செய்வாள் என்பது போல, சிண்டு முடிவதே பெண்ணின் வேலை என்பது போல, பெண் என்றாலே அழுகுணி என்பது போல, //

எல்லாப் பெண்களும் இப்படி அல்ல என்பதை நான் ஆமோதிக்கிறேன். இயற்கையிலேயே இப்படி நடத்தை உள்ள பெண்கள் சிலர் இருக்கிறார்கள். (ஆண்களும்தான்!) ஆனால் இப்படி தன்னை மற்றவர் பேச்சை கேட்டு மாற்றிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். இத்தகைய பெண்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் முக்கால் வாசி நேரம் தனது எதிர்காலப் பாதுகாப்புக்காகவும், தனது கணவன் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைக் கூட்டுக் குடும்ப அமைப்புகளில் காத்துக் கொள்வதற்கும்தான் இருக்கும். இளம் வயதில் போதிய அனுபவமில்லாத பெண் இப்படிச் செய்ய ஆரம்பித்து பெயர் வாங்கி விட்ட பின்னர் ஒரு கட்டத்தில் தவறு என்று தெரிந்து திருந்த நினைத்தால் கூட சமூகமும் குடும்பமும் அதற்கு வாய்ப்புகள் தருவதில்லை. ஒரு முறை முத்திரை அடித்தால் அடித்ததுதான்.

// இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் பெரும் மாற்றம் கண்டிப்பாக ஏற்படுத்தப் பட வேண்டும் //

திருமுருகன் உட்பட தனியார் தொலைக்காட்சிக்குத் தொடர் எடுப்பவர்கள் சமூக சேவைக்காக எடுப்பதில்லை. அவரேதான் கடைசி நாள் பேட்டியில் சொன்னாரே. சிக்கல் இல்லாத பாத்திரப் படைப்புகளை வைத்து ஒரு தொடரை பல வருடங்களுக்கு ஓட்ட முடியாது அப்படி ஓட்டினாலும் மக்கள் பார்க்க வர மாட்டார்கள். பிறகு "ரா... ரா... ரா... ரா" என்ற பட்டுப் புடவை விளம்பர வருமானத்திற்கு யாரைத் தேடிப் போவது. நடிக நடிகையருக்கு சம்பளம் யார் கொடுப்பது?

பொதிகையில் இன்னும் தூர்தர்ஷன் தயாரித்த நாடகம் போடுகிறார்கள். இருபது வருடம் முன் ஏற்படுத்திய செட். தூய்மையான உணர்வுடைய கதாபாத்திரங்கள்... மென்மையான நகைச்சுவை.. நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்து ஒருவரும் பார்ப்பதில்லை. அறுபது வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள் வேண்டுமானால் nostalgic (இதற்குத் தமிழில் என்ன வார்த்தை?) ஆக பார்த்துக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.


- உதயகுமார்

ந. உதயகுமார் said...

Rama,

சிசுவதை, பெண்வதை, மிருகவதையிலெல்லாம் வதைக்கப் படுபவர்கள் அதை எதிர்க்க இயலாதவர்கள், அல்லது போதிய பலமோ, சுதந்திரமோ, அதிகாரமோ கையில் இல்லாதவர்கள். தொலைக்காட்சி வதை இந்த வகையைச் சேராது. ரிமோட் என்ற சாதனம் உங்கள் அதிகாரத்தில்தானே இயங்குகிறது.

ஆனால் பொழுது போக்கு என்றாலே தொலைக்காட்சி பார்ப்பதுதான் என்று மாறி வரும் சமூகத்தில் இரவு தூங்கப் போகும் வேளையில் அமைதியான எண்ணங்களுடன் மகிழ்ச்சியான சில காட்சிகளை குடும்பத்துடன் கண்டு களித்து விட்டுத் தூங்கலாம் என்று டீவியை திருகினால் அழுகையும், ஒலமும், ஆங்காரமும், அகங்காரமும், ரௌத்திரமும், பொறாமையும், ஏமாற்றமும், ஏமாற்றலும் வீட்டுக்குள் வந்து அனைவரின் நாட்களையும் 'இனிதே' முடித்து வைக்கின்றன.

நன்றி

- உதயகுமார்

Blog Archive