Wednesday, June 22, 2005

பதிப்பித்தலில் ஒரு மௌனப் புரட்சி - 1

திருக்குறள், பைபிள், தொலைபேசி கையேடு, பத்திரிகை, கதைப் புத்தகம், பாடப் புத்தகம், துண்டுப் பிரசுரம், விளம்பரம், அகராதி, திரைப்படம், ஒலிப்பேழைகள்: இவையனைத்தும் பதிப்பித்தலின் (publishing) உதாரணங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைப் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப் பட்டவை.

பதிப்பித்தலின் முதற் குறிக்கோள் தகவல் மற்றும் எண்ணப் பறிமாற்றம். இந்தப் பறிமாற்றத்தால் மனிதனின் எண்ணம் வளர்கிறது. சமூகத்தில் கருத்து ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் ஏற்படுகின்றன. அவற்றிலிருந்து மனிதன் மேலும் கற்றுக் கொள்கிறான்.

ஒரு சமூகம், தலைமுறைகள் கடந்து தகவல்கள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொண்ட போது பண்பாடு மேம்பட்டு வளர்ந்தது. அரைகுறைத் தகவல் பறிமாற்றங்களால் குழப்பங்களும், மூட நம்பிக்கைகளும் கூடவே வளர்ந்தன. சமூக நல்லிணக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் பதிப்பித்தல் மிக முக்கியம்.

சிற்பங்கள், கல்வெட்டுகள், ஒலைச் சுவடி, காகிதத்தில் எழுத்து, அச்சடித்தல், ஒலி மற்றும் ஒளி நாடாக்கள் என்று பதிப்புத் தொழில் பல தொழில் நுட்பங்களைக் கடந்து வந்து விட்டது.

பல ஆயிரம் மக்களைச் சென்றடையும் பதிப்புக்களைச் செய்ய திறமை, கடின உழைப்புடன், முன்னெல்லாம் ஏராளமான பொருள்வளமும், வியாபார தந்திரமும் மிகத் தேவை. பதிப்பு செய்பவர்களுக்கு சில கடமைகளும் உண்டு. மொழி இலக்கணம் காத்தல், சரியான மற்றும் உண்மையான தகவல்களை மட்டும் அளித்தல், உண்மைக்குப் புறம்பான தகவல்களை இனம் கண்டு அறிவித்தல், கருத்துக் கூறும் போது நடு நிலை வகித்தல் போன்றவை அவைகளில் சில.

செல்வம் மற்றும் செல்வாக்கை கையில் கொண்ட அரசியல்வாதிகள், மதவாதிகள், சுயநலம் மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரிகள் மற்றும் பெரும் வியாபாரக் கழகங்களின் நிர்வாகிகள் முதலியோருக்கு இந்தப் பதிப்பித்தலின் அதிசக்தியைப் பற்றி நன்றாகவே தெரியும். அதைக் கையில் எடுத்துக் கொண்டு சாதாரண மக்களின் (அல்லது பணியாளர்களின்) சிந்தனைகளை தேவையற்ற திசைகளில் செலுத்துவது, அல்லது தமக்கு வேண்டிய திசையில் ஒருங்கிணைப்பது போன்ற காரியங்கள் இன்றும் நடக்கும் ஒன்று.

நான் படித்த காலத்தில் சொல்வன்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட கல்லூரி நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதிப்பிக்க வேண்டிய செல்வம் இல்லாத போது கையெழுத்துப் பத்திரிகைகள் எழுதி பிரதிகள் போடுவார்கள். இவை சென்றடையக் கூடிய மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

இன்று மனிதன் மணலையும் (சிலிகான் சில்லுவையும்), ஒளியையும் தகவல் பதிப்பிக்க, பறிமாற உபயோகிக்கிறான். இணைய தளத்தின் அடைப்படையில் மணலிலிருந்து கிடைக்கும் சிலிகான், செப்பு உலோகம் முதலிய பொருட்கள்தான் ஒளி மற்றும் மின்சாரத்தின் உதவியுடன் வேலை செய்கின்றன. பதிப்பித்தலுக்காகும் பொருட்செலவை இன்றைய தொழில் நுட்பம் வெகுவாகக் குறைத்து விட்டது.

இணையத் தொழில் நுட்பம் மூலம் பதிப்பித்தலில் இன்று ஒரு மௌனப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் வலைப்பதிவுகள் (blogs) என்னும் ஒரு பயன்மிக்க செயலி (killer application). என்னைப் போல அட்சர குச்சிகளுக்குக் கூட பதிப்பிக்கும் திறனைக் கொடுத்திருக்கிறது. இது வரை என் சிந்தனைகளைப் பொறுமையாகப் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் கனிவான கவனத்தை நாடு கடந்து, கடல் கடந்து எனக்குக் கிடைக்கச் செய்திருக்கிறது. எழுத்து, ஒலி, ஒளி ஆகிய மூன்று வடிவங்களிலும் பதிவு செய்ய அனுமதிக்கும் விந்தை அமைப்பு இது. கூடிய சீக்கிரம் உங்கள் அலைபேசியிலிருந்தும் வலைப்பதிவு படிக்கலாம், எழுதலாம்.

வலைப் பதிவுகளால் (மற்றும் மின்னஞ்சல் மூலம்) இன்று நிறுவனப் பணியாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சக பணியாளர்களுடம் நொடியில் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் மேலை நாடுகளில் நிர்வாகிகள் ஒருதலைப் பட்சமாக பணியாளர்களின் எண்ணங்களைத் அரைகுறைத் தகவல்களைக் கூறி திசை திருப்புவது கடினமாக்கப் பட்டிருக்கிறது.

வலைப் பதிவுகளின் சக்தியைப் பற்றியும், அவை இந்தியாவிற்குள் எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கின்றன என்பது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

4 comments:

குழலி / Kuzhali said...

நல்லப்பதிவு

ந. உதயகுமார் said...

நன்றி குழலி!

- உதயகுமார்

contivity said...

அன்பின் உதய்,

//உங்கள் கனிவான கவனத்தை நாடு கடந்து, கடல் கடந்து எனக்குக் கிடைக்கச் செய்திருக்கிறது. //

மிகவும் பணிவாக தன்னடக்கத்தின் சிகரமாக எழுதி இருக்கிறீர்கள். இவ்வளவு formality தேவையா? தயவு செய்து இதை குறை கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம்..

ந. உதயகுமார் said...

அன்புள்ள conti,

நான் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளவில்லை.

// இவ்வளவு formality தேவையா? //

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் பதிவுகளை பல்வேறு வயதினரும், பல பல முக்கியப் பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கிப் படிக்கிறார்கள் என்று தோன்றிய எண்ணத்தால் இப்படி எழுதினேன். தேவையா இல்லையா என்று கேட்டால் 'தேவை' என்று எனக்குப் பட்டதால்தானே அப்படி எழுதினேன் என்று பதில் வருகிறது.

இன்னும் informal ஆக எழுதும் படி நீங்கள் பின்னூட்டம் கூறியிருக்கிறீர்கள். கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

- உதயகுமார்

Blog Archive