வலைப்பதிவுகளின் சக்தியை அறிய இரண்டு சிறிய உதாரணங்களைப் பார்க்கலாம்.
உதாரணம் 1: அமெரிக்காவில் பூட்டு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. அதன் பூட்டுகள் உரியவரைத் தவிர மற்றவரால் எளிதில் திறக்க முடியாதவை என்று பெயர் பெற்றவை. ஒரு நாள் அந்த நிறுவனத்தின் பூட்டை எளிதில் திறக்கும் வழிமுறையை ஒரு வலைப்பதிவில் சாதாரண குடிமகன் ஒருவர் பதிவு செய்தார். அந்தப் பதிவில் இருந்த உண்மை அந்த வலைப்பதிவைப் படித்தவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்குப் பத்து என்ற எண்ணிக்கையிலிருந்து ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்காக்கியது. அந்த நிறுவனத்தின் விற்பனை வெகுவாகச் சரிந்தது. பங்குச் சந்தையில் அதன் மதிப்பும் சரிந்தது. ஒரு சாதாரண வலைப்பதிவுக்கு அத்தனை விரைவாக பல்லாயிரக்கணக்கான மக்களை வெகு விரைவில் செய்திகளை எடுத்துச் சொல்லும் சக்தி இருக்கிறது. மக்கள் வலைப்பதிவில் கூறப் படும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
உதாரணம் 2: தெற்காசியாவை சுனாமி தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திய போது சில இளைஞர்கள் SEA-EAT என்ற ஒரு வலைப் பதிவை தன்னார்வ முயற்சியில் அமைத்தார்கள். இது அதிவிரைவில் உலகெங்கும் உள்ள மக்கள் சுனாமி தாக்கிய இடங்களின் நடப்பு நிலையை அறிய உபயோகித்த மேடையாக மாறியது. தங்கள் சுற்றத்தாரின் படங்களைப் பிரசுரித்து அவர்கள் பற்றிய தகவல்களை வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு தகவல் மேடையாகவும் அது மாறியது. எல்லை கடந்து, பண்பாடுகளைக் கடந்து உலக மக்களை இணைக்கும் சக்தி வலைப் பதிவிற்கு உண்டு.
வலைப்பதிவுகள் கையெழுத்துப் பிரதிகளின் இன்றைய மின் வடிவம் என்று சிலர் கருத்துக் கூறியிருந்ததை சமீபத்தில் படித்தேன். வலைப்பதிவுகள் எட்டித் தொடும் தூரமும் அவற்றின் சக்தியும் கையெழுத்துப் பிரதிகளை விடப் பலமடங்கு அதிகம் என்பது என் சொந்த எண்ணம்.
வெளிநாடுகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் வலைப் பதிவுகளைப் பற்றி இந்தியாவில் இன்னும் பலருக்குத் தெரியவேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

உலகில் தமிழ் மக்கள் கோடிக்கணக்கில் இருந்தும் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னும் எனக்குத் தெரிந்த வரை நூற்றுக்கணக்கில்தான் இருக்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானோர் தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிறார்கள்.
நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் இன்று எட்டு கோடிக் கணினிகள்தான் இருக்கின்றன. (சென்ற வருடம் மட்டும் 35 லட்சம் புதிய கணினிகளை இந்தியர்கள் வாங்கினார்கள்) இந்த எட்டு கோடியில் சுமார் 1.5 கோடி கணினிகள் தமிழர்கள் கையில் இருக்கும் என்பது என் சொந்த அனுமானம். இவற்றிலும் பெரும் பங்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் பணியாளர்களுடையவை என்று என் அனுபவத்தை வைத்து அனுமானிக்கிறேன்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு வலைப் பதிவு செயலியைப் பற்றியும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும் போதித்துப் பயிற்சியும் கொடுத்தால் பற்றிக் கொள்ளும் என்று தோன்றுகிறது.
(வரைபடங்கள் சென்னையில் சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் கிடைத்த தகவல்களிலிருந்து தயாரிக்கப் பட்டவை)
7 comments:
தெளிவான ஆய்வை தந்துள்ளீர். வாழ்த்துக்கள்.
தெளிவான ஆய்வு
அன்பிள்ள சந்திரவதனா, positiverama,
நன்றி!
- உதயகுமார்.
நல்ல ஆய்வு
நன்றி பரணி!
நல்ல பதிவு உதயகுமார்
நன்றி தங்கமணி!
- உதயகுமார்
Post a Comment