Monday, June 20, 2005

திறமையே தங்கம் ...

ராமுவும் சோமுவும் தச்சுத் தொழில் பயின்றவர்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டின் அரசன் போருக்குத் தயாரானான். அவனது போர் வீரர்களுக்கு ரதங்கள் செய்து கொடுக்கத் தச்சர்கள் தேவைப் பட்டார்கள். ராமுவும் சோமுவும் ரதம் செய்யும் வேலையில் சேர்ந்தார்கள். ஒரு ரதம் செய்தால் ஒரு பொற்காசு சம்பளம்.

அரசனுக்கு பல ரதங்கள் சடுதியில் தேவைப்பட்டது. அதனால் மேற்பார்வை செய்த அரசு சேவகர்கள் தச்சர்களை விரட்டி வேலை வாங்கினார்கள். இது ராமுவுக்கும் சோமுவுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் தொழில் திறமைக்கு பணியிடத்தில் மதிப்பில்லை என்று இருவரும் யோசித்தார்கள்.

அடுத்த நாட்டு அரசன் ஒரு ரதம் செய்ய இரண்டு பொற்காசுகள் தருவதாக இடையில் செய்தி வந்தது. படும் அல்லலுக்கு அதிக காசாவது பார்க்கலாம் என்று கூறிய சோமு அடுத்த நாட்டிற்கு சோற்று மூட்டையுடன் பொடிநடையாகக் கிளம்பி விட்டான்.

ராமுவிற்கு அது சரியென்று தோன்றவில்லை. தச்சர்கள் செய்முறையை கவனித்தான். ரதத்தின் வெவ்வேறு பாகங்களைச் செய்வதில் வெவ்வேறு தச்சர்கள் திறமை பெற்றிருப்பதைக் கவனித்தான். ஒவ்வொருவரும் ஒரு ரதத்தை முழுதாகச் செய்யும் முறை நீக்கி, ஒவ்வொரு தச்சனையும் அவன் விரைந்து சிறப்பாகச் செய்யும் பாகங்களை மட்டும் செய்யச் சொல்லி, இறுதியில் பாகங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ரதம் செய்வதை துரிதப் படுத்தலாம் என்று தளபதிக்குச் சொல்லியனுப்பினான்.

அவன் சொன்னதை நடைமுறைப் படுத்திப் பார்த்த தளபதி, அந்தப் புதிய முறை சிறப்பாக இயங்கியதில் மகிழ்ந்து போனான். ராமுவை மாதத்திற்கு 10 பொற்காசுகள் சம்பளத்தில் தச்சர்களின் மேற்பார்வையாளனாக்கினான்.

இடையில் பக்கத்து நாட்டுக்குச் சென்ற சோமு ஒரு ரதத்திற்கு 2 பொற்காசுகள் என்ற சம்பளத்திற்கு ரதம் செய்து கொண்டிருந்தான். அங்கும் அதே மேற்பார்வையாளனின் விரட்டல், செக்குமாடு போன்ற வேலை. இன்னொரு அரசன் ரதத்திற்கு 3 பொற்காசுகள் தருவதாகச் செய்தி வர அங்கு ஒடி விட்டான்.

ராமுவின் தளபதி ரதங்களின் வேகம் போதாதென்று இடையில் ஒரு நாள் ராமுவிடம் கூறினான். ராமுவும் ரதங்களின் கட்டமைப்பை ஆராய்ந்து மாற்றி அவற்றின் எடையைக் குறைக்கும் வழிகளைக் கண்டறிந்து தளபதிக்குச் சொன்னான். தளபதி அவ்வாறு ரதங்களை அமைத்துப் பார்த்து வெற்றி கண்டான். அந்த மகிழ்ச்சியில் ராமுவை மாதத்திற்கு 100 பொற்காசுகள் கொடுத்து தன்னுடைய ஆலோசகனாக நியமித்துக் கொண்டான்.

திடீரென்று ரதங்கள் போருக்குப் பெரிதும் உதவுவதில்லை என்று பரவலாக எண்ணம் எழுந்தது. தளபதிகள் ரதங்களுக்கு கடைநிலை கொடுத்து வேறு போர்க்கருவிகளை அமைத்துக் கொள்ளத் தொடங்கினர்.

ரதம் மட்டுமே செய்யத் தெரிந்த சோமுவிற்கு வேலை எளிதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவனை புதிய போர்க்கருவிகள் செய்யப் பயிற்றுவிக்க வேண்டியிருந்தது. தனது வாழ்க்கைத் தரத்தையும், சமுதாயத்தில் பிடித்த இடத்தையும் விட்டுக் கொடுக்க முடியாததால், அவனும் 3 பொற்காசுகளுக்குக் குறைந்து வேலை செய்வதாயில்லை. சந்தையில் புதிய தச்சர்கள் குறைந்த சம்பளத்திற்குக் கிடைத்தனர். சோமு வேலையின்றி வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டான்.

போர் கருவி செய்முறைகளை ஆராய்ந்து அவற்றை வடிவமைத்துக் கட்டமைக்கும் திறமைகளை வளர்த்துக் கொண்ட ராமுவிற்கோ சம்பளம் உயர்ந்து கொண்டே போனது. அவனது திறமையை மெச்சி தளபதி தன் மகளையே அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.

  • சம்பளத்தைத் துரத்துவதை விட அது நம்மைத் துரத்துமாறு நம்மை அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது
  • சம்பளத்திற்கு வேலை செய்யும் போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல. இன்றைய வாழ்க்கைத் தேவைக்கும் எதிர்கால சேமிப்பிற்கும் தேவையான சம்பளம் கிடைத்தால் போதும். ஆனால் திறமைகளை புரிந்து மதிக்கும் மேலாளரிடம் பணி புரிவது முக்கியம்
  • ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கும் நிர்வாகத்திடம் பணிபுரிவது முக்கியம்
  • கைத் திறன்களை உபயோகிப்பது முக்கியம். செய்யும் தொழிலில் அக்கம் பக்கம் கூர்ந்து கவனித்து தாம் தொழில் செய்யும் துறையைக் குறித்த (domain) அறிவைத் தீட்டிக் கொள்வதும் முக்கியம். "அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா. ஆகாசப் பார்வை வேண்டாம்" என்று ஒரு திரைப்படப் பாடலே உண்டு.
ஆனால் இந்தக் கதைக்கு இணையான ஒரு நிலை இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கு பணியிலிருக்கும் பொறியாளர்களில் ராமுவிற்கு இணையானவர்களும், சோமுவிற்கு இணையானவர்களும் உண்டு.

முதல் வகைப் பொறியாளார்கள் எண்ணிக்கையில் குறைவே. இரண்டாவது வகையை சொல்லிக் குற்றமில்லை. வருடத்திற்கு சராசரி 30 சதவிகிதம் வளரும் இந்தத் துறையில் பணியாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. துறைக்குள் புதிதாகச் சேரும் திறமையுள்ள பொறியாளர்கள் எண்ணிக்கை தேவையான அளவில் இல்லை.

ஆகவே, கையில் இருக்கும் திறமைக்கு அதிகச் சம்பளம் கொடுப்பவர் யார் என்று பார்த்து நிறைய எண்ணிக்கையில் பொறியாளர்கள் பணித்தாவல் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை உலக அளவில் தனது போட்டியிடும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ராமுவிற்கு ஈடான பொறியாளர்கள் மிகத் தேவை. இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளில் அவர்களுக்குத் தேவை மிக அதிகமாக இருக்கப் போகிறது.

விழித்துக் கொள்ளாத சோமுவிற்கு ஈடான பொறியாளர்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கப் போகிறார்கள். படித்து விட்டு புதிதாக வேலைக்குச் சேரும் பொறியாளர்களுடன் வேலைக்குப் போட்டி போடப் போகிறார்கள்.

பத்து வருடம் வேலை பார்த்த ஒருவர் அவரது துறையில் பத்து வருட அனுபவம் உள்ள துறை வல்லுனராகவும் இருக்கலாம் அல்லது பத்து ஒரு வருட அனுபவம் உள்ள ஆரம்ப நிலை பணி செய்பவராகவும் இருக்கலாம். வயதை வைத்து வேலை உயர்வு கொடுக்க இந்தத் துறையில் அரசு நிறுவனங்கள் இல்லை. திறமைக்கே இங்கு மதிப்பு அதிகம் கிடைக்கப் போகிறது. அவரவர் தன்னைச் செலுத்திக் கொள்ளும் நேர்த்தியிலேயே அவர்கள் மதிப்பு அமையும். சோமுவிற்கு ஈடான பொறியாளர்கள் இரண்டாம் ரகமாகி விடும் ஆபத்து இருக்கிறது.

தகவல் தொழில் நுட்பத் துறையின் இன்றைய நிலையை இந்த வாரம் அடுத்து வரப் போகும் ஒரு பதிவில் காணலாம்.

பி.கு: இந்தப் பதிவிலுள்ள ராமு, சோமுவின் கதை வாழ்க்கையில் நான் சுயமாக சிந்தித்து தமிழில் எழுதிய முதல் கதை!

14 comments:

Anonymous said...

very realistic...expecting more

-Ramprasath K S

துளசி கோபால் said...

நல்ல பதிவு!!!!

ந. உதயகுமார் said...

நண்பர்கள் ராம் பிரஸாத், துளசி கோபால். நீங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு நன்றி. - உதயகுமார்

contivity said...

அன்பின் உதய் (இப்படி அழைக்கலாமா?),

மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். ராமு சோமு போல பலர் நம்மிடையே இருக்கிறார்கள். உங்கள் எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ந. உதயகுமார் said...

நண்பர் contivity (ஆமாம், உங்களை எப்படி அழைப்பது?!) அவர்களே,

என்னை என் நண்பர்கள் அனைவரும்
'உதய்' என்றுதான் அழைக்கிறார்கள். நீங்களும் தாராளமாக அப்படி அழைக்கலாம். ஆங்கில மொழி தாய்மொழியாகிய நண்பர்களுக்கெல்லாம் நான் 'யூடே' (Uday) :) !

எல்லோருக்கும் (நான் உட்பட) இது ('உதய்') வசதியாக இருக்கிறது. என் தாயாருக்கு மட்டும் இன்னும் இந்த 'உதய்' சுருக்கம் பிடிக்கவில்லை. "என்னடா இது உதைக்கச் சொல்லிக் கூப்பிடற மாதிரி இருக்கு" என்பார். அவருக்கு மட்டும் இந்த வயதிலும் நான் 'பெரியவனே' தான்.

உங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்கும் நன்றி!

- உதயகுமார்

contivity said...

அன்பின் உதய்,

சுருக்கமாக வேண்டுமானால் conti என்று அழையுங்கள். ஏற்கனவே மாண்டீ ஒருவர் இருக்கிறார் இல்லையா?

:)))

பத்மா அர்விந்த் said...

நல்ல பதிவு. கதியும் கருத்தும் நன்றாக இருந்தது

Anonymous said...

ஆஹா! கலக்கலான பதிவு. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மட்டுமல்ல.. இன்ன பிற துறைக்கும் பொருந்தும் கதை..

தொடர்ந்து இது போல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

Vijayakumar said...

வாவ்!!! எளிதான நடையில் கனமான விசயத்தை எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில்... கலக்குங்கள். இந்த மாதிரி கேரியர் டெவலப்மெண்ட் பற்றி பதிவுகள்... ஏன் சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை. இந்த மாதிரி விசயங்களை நிறைய எழுதுங்கள் உதய் (இல்லை உதைய்)

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உதய், மிகவும் அருமையான பதிவு. எளிய நடையில் உண்மையொன்றைத் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள்.

இடையில் இருக்கும் நான்கு குத்துப்புள்ளிக் குறிப்புக்களோடு நிறுத்தி இருந்தீர்களானாலே போதும். சிறப்பாய் இருக்கும். (இது போன்ற கருத்துக்களைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தோன்றியதைக் கூறுகிறேன்).

ந. உதயகுமார் said...

அன்புள்ள விஜயகுமார், தேன் துளி, கோபி: உங்களுக்கு இந்தக் கதை அதைச் சார்ந்த கருத்துகளும் பிடித்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

// தொடர்ந்து இது போல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்//

// இந்த மாதிரி விசயங்களை நிறைய எழுதுங்கள் உதய்//

விவேக் பாணியில் "இன்னும் பல பதிவாஆஆஆஆ...?! இந்த ஒரு பதிவை எழுதவே இரண்டு வாரம் யோசிக்க வேண்டியிருந்ததே ஐயா....!! எஸ்கேப்.....!!" என்று சொல்லாமல் பின் வரும் வாரங்களில் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

- உதயகுமார்

ந. உதயகுமார் said...

அன்புள்ள செல்வராஜ், உங்கள் கருத்துகளை பெரிதும் வரவேற்கிறேன். தயங்காமல் கூறுங்கள். கற்றுக் கொள்வேன். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

நீங்கள் சுட்டிக் காட்டும் குத்துப் புள்ளிகளுக்குப் பின்னே உள்ள பாகத்தில் உள்ள கருத்துகளைத் தெளிவுடன் தெரிவிக்க வேண்டித்தான் முதல் பாகத்திலுள்ள கதையையே எழுதினேன்.

ஆம். பதிவு சற்று நீளமாகி விட்டது உண்மைதான். மற்ற படி பின் பாகத்தில் நிறை செய்யக் கூடிய திருத்தங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை மின்மடல் மூலம் (நேரமிருக்கும் பட்சத்தில்) எனக்கு அனுப்பினால் வசதியாக இருக்கும்.

- உதயகுமார்

Anonymous said...

WOW... very nice message.

--Pandi

ந. உதயகுமார் said...

Thanks for the compliments Pandi

Blog Archive