Sunday, December 07, 2008

அமெரிக்காவில் கார் தயாரிப்பு துறைக்கு ஆபத்து ?

ஜி.எம், ஃபோர்ட், க்ரைஸ்லர் இவை மூன்றும் டெட்ராய்ட் நகரின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள். பொருளாதாரச் சரிவினால் பாதிக்கப் பட்டு திவாலாகும் நிலையில் இருக்கிறோம்.. எங்களுக்கும் வங்கிகளுக்குக் கொடுத்தது போல நிவாரணம் தேவை.. என்று மூன்று நிறுவனங்களின் தலைவர்களும் அமெரிக்க அரசிடம் சில வாரங்களாகவே கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிறுவனங்கள் திவாலானால் சுமார் 30 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே, சமீபத்திய பொருளாதாரச் சரிவினால், பார்க்கக் கூடிய ஒவ்வொரு 14 பேரில் ஒருவருக்கு வேலை இருக்காது என்ற நிலை அமெரிக்காவில் ஏற்பட்டு விட்டது. கார் நிறுவனங்கள் திவாலானால் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னமும் படு மோசமாகும். பொருளாதாரம் இன்னமும் ஆழமாகச் சரியும்.

ஆனால் அமெரிக்கர்களில் ஒரு பகுதியினர், இந்தத் தலைவர்கள் மேல் அதீதக் கோபம் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணமாக அவர்கள் சொல்லுபவை:
  • 30 பில்லியன் டாலர் நிவாரணத்தை வாங்கிக் கொண்டு இன்னமும் பல தொழிலாளிகளை வேலையை விட்டுத் தூக்கப் போவதைப் பற்றித்தான் இந்தத் தலைவர்கள் பேசுகிறார்கள். ஆக இந்த நிவாரணம் தொழிலாளிகளின் நன்மைக்குப் போய்ச் சேரப் போவதில்லை
  • இந்தத் தலைவர்களின் பொறுப்பற்ற தனம் அவர்கள் நடவடிக்கைகளில் தெரிகிறது. இன்னமும் ஆடம்பரமாக உடுத்திக் கொண்டு தனி விமானத்தில் பறந்து திரியும் அவர்கள் தத்தம் நிறுவனங்களின் இன்றைய நிதி நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவில்லை
  • வரிப்பணத்தில் கிடைக்கும் நிவாரணத்தை வைத்துக் கொண்டு இன்னமும் எரிபொருள் சிக்கனம் இல்லாத கார்களை தயாரிக்க அவர்களை அனுமதிக்கக் கூடாது
  • திறமையில்லாமல் நிறுவனத்தை நடத்தி திவாலாக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்ட இவர்களை மாற்றாமல் நிவாரணம் கொடுப்பது முட்டாள்தனம்
என்ற வாதங்கள் பலமாக எழுகின்றன.

இந்த நிறுவன ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்லுகிறாகள் தெரியுமா?

  • இந்தத் தொழில்கள் திவாலானால் அமெரிக்காவில் கார் தயாரிப்பது என்பதே இல்லாமல் போகும்
  • சிரம காலங்களில் எங்களை துப்பாக்கி, பீரங்கிகள் மற்றும் விமான இஞ்ஜின்கள் தயாரிக்கவும் பணித்தார்கள். இப்போது நாங்கள் போய்விட்டால் அமெரிக்காவிற்கு இந்த அத்தியாவசியச் சேவைகளை யார் செய்து கொடுப்பார்கள்?
  • பல குடும்பங்களில் பணிக்குச் செல்லக் கூடிய அனைவரும் கார் தொழிலில்தான் இருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை போனால் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கக் கூட வக்கில்லாமல் அனைவரும் நடுத்தெருவுக்கு வர வேண்டியதுதான்
  • திடீரென்று எங்களைச் சோம்பேறிகள் போலச் சித்தரிக்கிறார்கள். ஒரு மணி நேரம் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தால் எங்கள் சிரமம் புரியும்
  • சந்தர்ப்பம் கிடைத்ததென்று எங்கள் தலைவர்களை மிகவும் கேவலமாக காங்கிரஸ் நடத்துகிறது. அவர்களை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். எங்கள் நிறுவனங்களில் பணி செய்வதை நாங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறோம்
என்றெல்லாம் பொருமித் தள்ளியிருக்கிறார்கள்.

எது எப்படியோ. கார் கண்டுபிடித்து, தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் கார் கனவை ஊட்டி வளர்த்த அமெரிக்காவிற்கு இந்த நிலை சற்றுப் பரிதாபம்தான்.

1 comment:

Viji said...

Hi Uday,

Good thoughts.

I do agree with you that it is sad the American auto industry is on the verge of collapse.

Do you think it is a failiure of a larger economic system?

Blog Archive