Sunday, December 07, 2008

வால் - ஈ (ஆங்கிலத் திரைப்படம்)

குப்பை மற்றும் மாசு மிகுந்து போய் உயிர் வாழத் தகுதியற்ற உலகத்திலிருந்து அமெரிக்கர்கள் (கவனிக்கவும் - அமெரிக்கர்கள் மட்டும்) மாபெரும் விண்கலத்தில் கிளம்பி விடுகிறார்கள். 'வால்-ஈ' என்ற ரோபோக்களை உலகத்தை சுத்தப் படுத்த விட்டுச் செல்கிறார்கள். நிறைய 'வால்-ஈ' க்கள் வெயிலிலும் மழையிலும் புயலிலும் அடி பட்டு செயலிழந்து போகின்றன. ஒரு குட்டி வால்-ஈ (ஆண்) மட்டும் அதன் கரப்பான் பூச்சி நண்பனோடு தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறது.

700 வருடங்களுக்குப் பிறகு தாய்க்கலத்திலிருந்து 'ஈ-வா' என்ற (பெண்) ரோபோவை உலகில் உயிர்நிலை இருக்கிறதா. தாவரங்கள் ஏதாகினும் முளைத்து விட்டதா என்று பார்த்து வர அனுப்பி வைக்கிறார்கள். அது தேடியலைந்து கொண்டிருக்கும் போது 'வால்-ஈ' யை பார்க்கிறது. இருவரும் நண்பராகிறார்கள்.

வால்-ஈ  குப்பைகளில் இருந்து அவ்வப்போது பொறுக்கிச் சேர்த்த சாமான்களில் ஒரு சிறு தாவரத்தையும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறது. அதைப் பார்த்தவுடன் 'ஈ-வா' அதை வயிற்றுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு மந்திரித்து விட்ட மாதிரி மண் மேட்டின் மேல் போய் நின்று கொள்கிறது. செய்தி கிடைத்து, தாய்க்கலத்திலிருந்து அதைக் கூட்டி வர வாகனம் அனுப்புகிறார்கள்.

வால்-ஈ பதறிப் போய் 'ஈ-வா' வை தொடர்கிறேன் பேர்வழி என்று அந்த வாகனத்தின் வெளியே ஒட்டிக் கொண்டு, விண்வெளியில் சூரியனையும் கடந்து பயணித்து, தாய்க்கலத்திற்குப் போகிறது.

தாய்க்கலத்தின் கணினிதான் வில்லன். மனிதர்கள் திரும்ப உலகிற்குச் செல்லக் கூடாதென்று ஆணை வைத்துக் கொண்டு வில்லத்தனம் செய்கிறது. மனிதர்களெல்லாம் டிவி பார்த்து 'ஜேவ்' (சுஜாதா நினைவு வந்து விட்டதப்பா!) குடித்துக் கொண்டு அறிவிழந்து போய் கிடக்கிறார்கள் (அமெரிக்கர்களைத்தான் அப்படிக் காட்டினார்கள். தமிழனை அல்ல :) ). தாய்க் கப்பலின் தலைவர் மட்டும் ஆண்டவன் கிருபையால் சற்று மதியுடன் செயல் படுகிறார்.

பிறகு 'வால்-ஈ' யும் 'ஈ-வா' வும் எப்படி மனிதர்களை உலகிற்குத் திரும்பக் கொண்டு வர உதவுகின்றன என்பதுதான் கதை. 'ப்ர்ன் -ஈ' என்ற நகைச்சுவை ரோபோ பாத்திரத்தை அறிமுகம் மட்டும் செய்திருக்கிறார்கள். 'டிவிடி'யின் போனஸ் காட்சியில்தான் அதன் நகைச்சுவை காட்சியைக் காட்டியிருக்கிறார்கள்.

(Pixar) 'பிக்ஸார்' அவர்கள் (logo) 'லோகோ'விலேயே நம்மைச் சாய்த்து விட்டார்கள். படத்தில் விட்டு வைப்பார்களா? அருமையான முதல்தரமான 'அனிமேஷன்'. ஒலிப் பொறியாளரும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் 'வால்-ஈ'யின் பரம விசிறியாகி விட்டேன். 'வால்-ஈ 2' க்காக காத்திருக்கிறேன். கண்டிப்பாக வரும்.

1 comment:

வேளராசி said...

அற்புதமான படம்.ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளோடு குழந்தைகளாய் நாமும் ரசிக்கலாம்.

Blog Archive