Saturday, October 04, 2008

குடியிருக்க ஒரு குச்சு வீடு

"எனக்கு குடியிருக்க ஒரு குச்சு வீடு மட்டும் கட்டித் தாருங்கள். வேறு எதுவும் வேண்டாம்" என்று என் தாயார் அடிக்கடி என் தந்தையிடம் சொல்வார். இது ஒவ்வொரு மனிதனின் சராசரிக் கனவு.


இந்தக் கனவைத் தவறாக உபயோகிக்கத் தங்களால் இயலும் என்று இப்போது அமெரிக்காவின் நிதித் துறைப் புலிகள் நிருபித்து விட்டார்கள். பலன்? ஏறக்குறைய 1 ட்ரில்லியன் டாலர் (4, 500,000 கோடி இந்திய ரூபாய்) அளவில் நட்டம். பல அமெரிக்கக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டன. வங்கிகள் வராக் கடன் கணக்குப் பார்த்துக் கொண்டு, அத்தியாவசியத் தேவையான காரியங்களுக்கு கடன் கொடுக்க வக்கில்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. இது பல வருடங்களாக
வளர்க்கப் பட்ட ஒரு சோப்புக் குமிழி. இன்றுதான் உடைந்திருக்கிறது.


ஒரு மனிதனின் எதிர் கால வருமானத்தைக் கருத்தில் கொண்டு அவனுக்குக் கடன் கொடுக்கும் பழக்கம் உலகின் எல்லா மூலைகளிலும் நடக்கும் தினசரி நடப்பு. இதில் பல ஆபத்து இருக்கிறது.
  • இன்று இருக்கும் மனிதன் நாளை இருப்பான் என்பது உத்தரவாதமில்லை.
  • இன்று திடமான உடல் மற்றும் மூளைத்திறனுடன் வேலை செய்து சம்பாதிக்கும் மனிதன் நாளை நோயில் படுக்க மாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை.
  • மிக யோக்கியமாக நடந்து கடன் கேட்பவன் நாளை அயோக்கியத்தனமாக யோசிக்க மாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை.
பின் ஏன் வங்கிகள் கடன் கொடுக்கின்றன?
  • நாட்டில் பல உத்தமர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  • மனிதன் பொருள் சேர்த்துத்தான் சொத்து வாங்க வேண்டுமென்றால் கைக்குக் வாய்க்கும் போதுமாக (சிறு சேமிப்பு மட்டும் செய்யக் கூடிய வகையில்) சம்பாதிக்கும் பலர் கனவுடனே செத்துப் போவார்கள்.
  • பலருடைய சிறு சேமிப்பு, வங்கிகளில் தூங்குவதை விட நன்மக்கள் சிலருக்கு சொத்து சேர்க்க உபயோகப் பட்டால் நாட்டில் பொருளாதாரம் வளர்ந்து வேலை வாய்ப்புகள் பெருகி நாணயம் சக்தி கூடும்.
ஆக, கடன் கொடுக்கும் முன்னர் கடன் வாங்குபவனைப் பற்றித் தீர ஆராய்ந்து தகுதியுள்ளவனுக்குக் கொடுக்கும் வரை கடன் கொடுப்பது ஆகப் பலன் தரும் ஒரு பொருளாதார முற்போக்குச் செயல். மேலும், சொத்து வாங்கக் கடன் கொடுத்தால் சொத்தை அடகில் எடுத்துக் கொண்டுதான் எந்த வங்கியும் கடன் கொடுக்கும். கடன் முழுகிப் போனால் சொத்தை விற்று பணத்தை மீட்க முடியும்.


அமெரிக்காவில் இங்கேதான் பேராசையால் கோட்டை விட்டார்கள். எனக்குத் தெரிந்து சிலிக்கான் வேலி (Silicon Valley) பணத்தில் புழங்க ஆரம்பித்த போது கை மேல் காசு பார்த்த பலர் தங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள வீடு வாங்கினார்கள். வீடுகளுக்கான தேவை அதிகரித்து வீடு மற்றும் மனை விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன. இன்று வங்கி கடன் கொடுத்து அடகில் எடுக்கும் வீட்டின் மதிப்பு அடுத்த மாதம் பல மடங்கு உயர்ந்தது. இந்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் வங்கிகளுக்குத் தைரியமும் பேராசையும் ஒரே நேரத்தில் வந்தது. அடகை விற்றுப் பணத்தை மீட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் தகுதியில்லாதவற்கும் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். சோப்புக் குமிழியைப் பெரிதாக ஊதினர்.

கடனில் ஆபத்து அதிகமானாலும் இந்த வங்கிகளின் அடகுகளை இரண்டாம் சந்தையில் வாங்கிக் கொள்ள அமெரிக்க அரசு சார்பு நிறுவனங்களான ஃப்ரெட்டி மாக் மற்றும் ஃபேனி மே முன் வந்தன. அரசு சார்ந்த நிறுவனங்களே ஆபத்துடன் விளையாட ஆரம்பித்தன.

ஆபத்து என்று எச்சரித்தவர்களைத் திட்டித் தள்ளினார்கள். விபரம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். முதலாளித்துவம் புரியவில்லை என்று முகத்திலடித்தார்கள். இந்தப் பொறுப்பற்ற செய்கையால் வங்கிகளுக்குக் கடன் கொடுக்க மேலும் பணம் கிடைத்தது.



கடைசியில் ஒரு ட்ரில்லியன் டாலர் குமிழ், எதிர்பார்த்தவாறே உடைந்து போய் விட்டது. இதில் சுவாரசியமான விபரம் என்னவென்றால் இந்தக் குமிழில் பெரிதும் நிதி முதலீடு செய்திருப்போர், எண்ணை வளத்தை விற்றுக் காசாக்கியிருக்கும் அரேபியர்களும், அமெரிக்காவிற்கு சகாய விலை உற்பத்திக் கூடமாக விளங்கிய சீனர்களும்தான்.



அமெரிக்க வரிப்பணத்திலிருந்து இந்த உடைசலை நேர் செய்யப் போகிறார்கள். எந்த வகையில் செலவு செய்தால் பணம் எதிர் பார்த்த நிறைவைத் தரும் என்ற சொற்போர்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.


இன்றைய சண்டே இண்டியனில் அரிந்தம் செளத்திரி தலைப்புப் பத்தி எழுதியிருக்கிறார். மகிழ்ச்சியான முதலாளித்துவம் என்பது ஒரு சமுதாயத்தின் 80 விழுக்காடு பொருளாதாரத்தைத் தம்மிடம் வைத்திருக்கும் 20 விழுக்காடு மனிதர்களின் பொருளாதார மேம்பாட்டைப் பற்றி யோசிப்பதல்ல, 20 விழுக்காகு நிதி ஆதாரத்துடன் வாழும் 80 விழுக்காடு மனிதர்களின் வாழ்வை மேம்படுத்துவதே. அதனால் நாடும் நாணயமும் வெகுவாக உயரும். சோப்புக் குமிழி ஊதிப் பணம் பண்ணும் சிலர் பேராசையால் சமூகம் சீரழிவது குறையும் என்பது அவர் கருத்து. எனக்குப் பிடித்திருந்தது.

4 comments:

சிவா சின்னப்பொடி said...

சிவா சின்னப்பொடி

ந. உதயகுமார் said...

வெறும் பெயர் மட்டும் போட்டு பின்னூட்டம் போட்டிருக்கிறார் சிவா சின்னப்பொடி. ஏதாவது உள்ளர்த்தம் இருக்கிறதா தெரியவில்லை. -உதயகுமார்

Mahesh said...

அடடா... இதுமாதிரி சுலபமா யாராவது தமிழ்ல பிரச்சனைய விளக்க மாட்டங்களான்னு சுத்திகிட்டிருந்தேன். சார்... இது மாதிரி எளிமையா பெரிய பிரச்ச்னைகளை விளக்குங்க.... நன்றி.

ந. உதயகுமார் said...

நன்றி! மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவது - நான் இந்தத் துறையில் விற்பன்னன் அல்ல. உங்களைப் போல அடிப்படைகளைத் தேடும் ஒரு ஆர்வலன். அவ்வளவே!

எனது கருத்து வெளிப்பாட்டில் தவறுகள் இருக்கலாம். ஆகவே நான் சொல்வதையெல்லாம் அப்படியே சரியென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். -உதயகுமார்

Blog Archive