சென்னையின் வளர்ச்சியை தகுந்த தொலைநோக்குடன் திட்டமிடாததன் விளைவுகள் அங்கங்கே அப்பட்டமாகத் தெரிகின்றன.
- வாகனங்கள் அதிகரித்து விட்ட நிலையில் அவற்றை சிரமமில்லாமல் வசதியாக நிறுத்தி விட்டுக் கடைக்குச் செல்ல முடியாத நிலை.
- தேவையான அளவில் பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் இல்லாத நிலை.
- பொதுக் கழிப்பறைகள் தேவையான அளவு இல்லாததால் நடைபாதைகளை பட்டப் பகலில் கழிப்பறையாக மக்கள் உபயோகிக்கும் கண் கொள்ளாக் காட்சி
- குடிநீர் ஆதாரங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் நிலை
- சாலை சந்திப்புக்களில் அதிகரித்து கொண்டு போகும் நெரிசல்
- மோட்டார் வாகனத்தில் சென்றால் கூட, தேவையான சாலைப் பரப்பு இல்லாததாலும், விரைவுப் பாதைகள் (express ways) இல்லாததாலும், மாட்டு வண்டியை விடக் கேவலமான வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை
- உயிருக்குப் போராடும் நோயாளிகள் அவசர மருத்துவ ஊர்திகளில் சென்றாலும் அவை நெரிசலில் சிக்கிக் கொண்டு சடுதியில் மருத்துவ மனைகளுக்குச் செல்ல முடியாமல் போவதால் ஏற்படும் உயிர் இழப்புக்கள்
அதே நேரத்தில் சென்னையில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தித் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல நவீன தொழிற்சாலைகள் கட்டப் பட்டு இயங்கத் தொடங்கி விட்டன. இன்னும் பல விரைவில் ஆரம்பிக்கப் பட உள்ளன. சிறுசேரி மற்றும் கேளம்பாக்கம் பகுதியில் மென்பொருள் சேவை நிறுவனங்களின் வளர்ச்சி வியக்கத் தகும் வகையில் அமைந்திருக்கிறது.
இதனால் வேலைவாய்ப்புகள் பெருகி நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் திறனும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்குத் தங்களை உயர்த்திக் கொள்ள விழையும் நோக்கும் அதிகரிக்கத்தான் போகின்றன. நுகர்வு அதிகரிக்கப் போகிறது
இத்தகைய தொழில் மையங்களின் அருகே சுய சார்புள்ள துணை நகரங்கள் அமைவது சென்னையின் நெரிசலைக் குறைக்க உதவும்.
ஆனால் மறைமலை நகர் போன்ற துணை நகரங்களின் இன்றைய நிலையைப் பார்த்தால், அவற்றின் கட்டமைப்பிலும் தொலைநோக்கின்மைதான் தெரிகிறது.
இன்றும் மறைமலை நகரில் வேலை செய்யும் பல அதிகாரிகள் சென்னையின் மத்தியப் பகுதிகளில் குடியிருக்கத்தான் விழைகிறார்கள். இந்தப் போக்கு சென்னையின் நெரிசல்கள் அதிகரிக்கிக்கவே வழி செய்கிறது.
இந்தப் போக்கு எதனால் வந்தது? மறைமலை நகரில் இன்றும் தரமுள்ள பள்ளிகள் இல்லை. சென்னையில் இருப்பது போல் சிறப்பான மருத்துவ வசதிகள் இல்லை. இன்னும் பல வசதிகள் அங்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அமையவில்லை.
ஆகவே வெறும் துணை நகரம் அமைப்பதால் மட்டும் சென்னையின் தொல்லைகள் தீர்ந்து விடப் போவதில்லை. பெரும்பாலான மக்கள் அத்தகைய துணைநகரங்களை நாடிச் சென்று அங்கே குடியேறும் வகையில் அவை அமைய வேண்டும்
2 comments:
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் செங்கல்பட்டில் இருந்திருக்கிறேன். எது வாங்குவதாக இருந்தாலும் சென்னைதான் வரவேண்டும். (மளிகை, காய்கறி தவிர).வார இறுதி கொண்டாட்டங்களுக்கும் சென்னைதான் வரவேண்டும். இது chicken-n-egg syndrome போல. நாங்கள் சென்னை சென்றதால் உள்ளூரில் வசதிகள் அமைய பொருளாதார தேவை இல்லை; வசதிகள் இல்லாத்தால் சென்னை செல்லவேண்டிய நிலை.:(
இந்தப் பிரச்சினையை இன்று மாநில அரசு இழுத்து மூடி விட்டது. துணை நகரம் அமையப் போவதில்லையாம். ஆக தொலைநோக்கின்மை தொடருகிறது. பெங்களூரை விட்டு பல நிறுவனங்கள் அந்நகரத்தின் கட்டமைப்புப் பிரச்சினைகளால் வெளியேறத் தொடங்கியிருப்பதைப் பார்த்தாவது நாமெல்லாம் கற்றுக் கொள்வோம் என்ற எனது எதிர்பார்ப்பில் மண்.
Post a Comment