Saturday, July 02, 2005

பேசெல் II நியதிகள் (Basel II Norms)

ஒரு வங்கியின் இயக்கத்தில் பல ஆபத்துகள் (risks) உள்ளன. கடன்கள் அளிப்பதிலும் , சந்தை நிலவரஙகளில் எதிர்பாராமல் ஏற்படும் மாற்றங்களாலும், இயக்கத்தின் மூலமும் ஆபத்துகள் வரக் கூடும். உதாரணமாகச் சில கீழே குறிப்பிடப் பட்டுள்ளன.
  • கடன் அளிப்பதில் ஆபத்து: கடனைத் திருப்பிக் கட்ட முடியாதவருக்குக் அல்லது ஏமாற்ற நினைப்பவருக்குக் கடன் கொடுத்தால் கடன் கண்டிப்பாக மூழ்கி விடும் ஆபத்து உள்ளது. அரசுக்குக் கொடுக்கப் படும் கடன்கள் மிகப் பத்திரமானவையாகக் கருதப் படுவதால் அவை ஆபத்தில்லாதவை (risk free) யாகக் கருதப் படும்.
  • சந்தை தரும் ஆபத்து: சந்தையில் நாணய மதிப்பீடுகள் அல்லது அந்நியச் செலாவணி மதிப்பீடுகள் எதிர்பாராமல் மாறுவதால் வரக்கூடிய ஆபத்துகள் இவை.
  • இயக்கத்தில் வரும் ஆபத்து: வங்கிப்பணியாளர்கள் உபயோகிக்கும் கணினியின் கடவுச் சொல்லை திருடும் ஒருவர் அந்த வங்கிப் பயனர்களின் கணக்குகளை முறைகேடாக உபயோகிக்க முடியும். இது கவனமில்லாத வங்கி இயக்கத்தால் வரக் கூடும் ஆபத்துகளில் ஒன்று.

பேசெல் என்பது ச்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அழகிய நகரம். இங்கே வங்கித் துறை விற்பன்னர்கள் குழுமம் உள்ளது. இந்தக் குழுமம் வங்கிகளின் இயக்கத் திறனை மேம்படுத்தும் நியதிகளை அவ்வப்போது வெளியிடுவார்கள்.

அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பேசெல் I நியதிகள் வங்கிகளை கடன் அளிக்கும் ஆபத்துகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வழிமுறைகளை அறிவுறுத்தின. மற்ற இரண்டு வகை ஆபத்துகளையும் அவை அதிகம் கண்டு கொள்ளவில்லை.

இந்த நியதிகள் படி, இந்தியாவில் வர்த்தகக் கடன் அளிக்கும் வங்கிகள் தாம் அளிக்கும் ஒவ்வொரு வர்த்தகக் கடனுக்கும், அந்தக் கடனால் ஆபத்து வந்தால் தன்னை மீட்டுக் கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இதற்கு ஆதாரமாக ஒவ்வொரு நூறு ரூபாய் கடனுக்கும் 8 ரூபாய்களை வங்கியில் கட்டாய முதலாகப் (Capital adequacy) போட்டிருக்க வேண்டும். வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால் ஒரு கோடி மூலதனம் போட்டு ஆரம்பிக்கப் பட்ட ஒரு வங்கி, தனது பயனர்கள் வைப்புகளில் இருபது கோடி வரை பணம் இருந்த போதிலும், அது சுமார் 12.5 கோடி வரை மட்டுமே வர்த்தகக் கடன்கள் வழங்க முடியும். அதே சமயம் அரசின் கடன் பத்திரங்களை வாங்குவதற்கு (அதாவது அரசு அதன் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யக் கொடுக்கும் கடனுக்கு) இந்த முதலீட்டுத் தேவையிலிருந்து விலக்களிக்கப் பட்டது. அரசுக்குக் கொடுக்கும் கடன்கள் ஆபத்தற்றவையாகக் கருதப் பட்டன.

1999 முதல் 2003 வரை இந்திய வங்கிகள் வர்த்தகக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை வழங்காமல் அரசின் கடன் பத்திரங்களை வாங்கிக் குவித்தார்கள். அதனால் ஏற்படக் கூடிய சந்தை ஆபத்துகளைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

இதனால் அடிபட்டவர்கள் இந்தியச் சிறுதொழில் நிறுவனங்களும், விவசாயிகளும்தான். இது அவர்களின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் பாதித்தது. பெரிய நிறுவனங்கள் தங்கள் பாட்டைத் தாங்களே பார்த்துக் கொண்டன.

நல்ல வேளை, அதிர்ஷ்டம் நம் பக்கம் இருந்ததால் (சேவைத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியாலும், அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்களைக் குறைத்து விட்டதாலும்) இந்திய வங்கிகள் அழிவைத் தரும் சந்தை ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் தப்பி விட்டன அல்லது வேறு வழிகளில் அவற்றால் பெரிதும் பாதிக்கப் படவில்லை.

இது வரை கடைபிடித்த நியதிகளின் படி 30 வருடமாக பொறுப்புடன் வியாபாரம் செய்யும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற HLL போன்ற ஒரு நிறுவனத்திற்கும், கோயம்பேட்டில புதிதாக வியாபாரம் ஆரம்பிக்கும் முன்பின் தெரியாத வியாபாரிக்கும் கடன் கொடுக்க ஒரே நியதிதான் கடைப்பிடிக்கப் பட்டது. கடன் வாங்குபரின் கடனாளும் திறன் (அ) நிதியாளும் திறன் அந்தக் கடனிலுள்ள ஆபத்துகளை மதிப்பிட உபயோகிக்கப் படவில்லை.

சில காலத்திற்கு முன் வெளியிடப் பட்டிருக்கும் பேசெல் II நியதிகள் படி ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூன்று வகை ஆபத்துக்களையும் சந்திக்கும் வகையில் வங்கியின் மூலதனக் கட்டமைப்புத் தேவைகள் (capital adequecy) குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அதனுடன் தன் கடனாளும் திறமையை உறுதி செய்து விட்ட பயனர்களுக்குக் கடன்கள் வழங்குவது எளிதாக்கப் பட்டிருக்கிறது.

1990 களில் 15 சதவிகிதமாக இருந்த இந்திய வங்கிகளின் இயங்காக் கடன்கள் (non performing assets), பேசெல் I நியதிகளைக் கடைப்பிடித்ததாலும், அதிர்ஷ்டவசமாகவும், இன்று 3 சதவிகிதத்திற்கும் கீழாகக் குறைந்து விட்டன. பேசெல் II நம் வங்கிகளின் இயக்கத் திறனை மேலும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

6 comments:

era.murukan said...

அன்புள்ள உதய்,

பேசல் பரிந்துரைகளில் இயக்கம் தொடர்பான ஆபத்து (operational risk) குறித்தவை புதியவை. ஆபத்து நிகழ்வையும் அதனால் வரும் இழப்பையும் (loss generating events and expected loss value) ஊகித்து, அந்த அளவுக்கு மூலதன நிதி ஒதுக்கி வைக்க (capital apportioning) வழிவகை செய்யும் மென்பபொருள் உருவாக்குவது சிக்கலானது. நம் நாட்டில் சில மென்பொருள் நிறுவனங்கள் இதில் வெற்றி கண்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமே.

ந. உதயகுமார் said...

அன்புள்ள முருகன்,

தெரியும். பதிவில் பேசெலிலேயே குறியாக இருந்த எனக்கு இதைக் குறிப்பிடத் தோன்றவில்லை.நான் குறிப்பிட விட்டு விட்ட அந்த முக்கியமான செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

- உதயகுமார்

மாயவரத்தான் said...

பேஸல் நகருக்கு சென்றிருந்த போது 'தமிழ் சங்கம்' என்ற பெயரில் ஈழத்தமிழர் ஒருவர் நடத்தும் கடையும், இன்னும் நிறைய தமிழர்கள் (கும்பகோணத்தமிழர்கள்) இருப்பதும் தான் பார்த்தது நியாபகத்துக்கு வருகிறது.

இந்த மாதிரியான பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்கும் ஆருயிர் அண்ணனுக்கு எல்லாரும் 'ஓ' போடலாம்.

(அது சரி.. உங்க லேட்டஸ்ட் சேது சமுத்திர பதிவுலே பின்னூட்டம் போட முடியலை.. என்னன்னு கவனிங்க!)

அன்பு said...

பதிவுக்கும், தகவல்களுக்கும் நன்றி. வலைப்பதிவுகளில் மிக்வும் வித்தியாசமானது உங்கள் பதிவு. பரபரப்புக்காக அல்லாமல் யாருக்காவது பயன்படும்வகையில் இருப்பதை மட்டுமே பதிந்து வருகின்றீர்கள். அதற்கு மீண்டும் பாராட்டும், நன்றியும்.

தொடருங்கள்...

ந. உதயகுமார் said...

// எல்லாரும் 'ஓ' போடலாம் //

நன்றி மாயவரத்தான் அவர்களே ;-)

// சேது சமுத்திர பதிவுலே பின்னூட்டம் போட முடியலை.. //

இப்போது முயற்சித்துப் பார்த்து விட்டு பிரச்சனை இருந்தால் கூறவும்.

- உதயகுமார்

ந. உதயகுமார் said...

அன்புள்ள அன்பு !

// பரபரப்புக்காக அல்லாமல் யாருக்காவது பயன்படும்வகையில் இருப்பதை மட்டுமே பதிந்து வருகின்றீர்கள். //

பதிவின் தலைப்பிலேயே (கற்றதும் சிந்தித்ததும்) எளிய நோக்கம் இருக்கிறது அன்பு! வலைப் பதிவுகளை ஒரு திறந்த குறிப்பேடு என்றும் சொல்கிறார்கள். கற்றுக் கொண்டதை எழுதி சேமித்து வைக்க ஒரு சிறந்த வழி வலைப் பதிவு. பின்னொரு காலத்தில் செய்தியோடைகள் மூலம் வகைப்படுத்தலாம் என்று ஒரு திட்டம் மனதில் இருக்கிறது. மற்றவர்களுக்கு அந்தத் தகவல்கள் உதவுவதில் மகிழ்ச்சி, மேலும் தெரிந்தவர்கள் படித்து பின்னூட்டங்கள் மூலம் தவறுகளைத் திருத்தும் போது நாம் அதிகம் கற்றுக் கொள்வோம் என்ற சுயநலமும் கூட.

// தொடருங்கள்... //

கண்டிப்பாகச் செய்கிறேன் அன்பு. ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!

- உதயகுமார்

Blog Archive