இந்தியாவில் பல தொலைபேசி, அலைபேசி நிறுவனங்கள் தோன்றி விட்டன. புதியதாக தொலைபேசி, அலைபேசி இணைப்பு பெற விரும்பும் பயனர்களுக்கு விருப்பமான சேவை நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் அதிகாரம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. போட்டியிடும் சேவை நிறுவனங்களுடன் பேரம் பேசி தங்களுக்கு வசதிப்படும் கட்டணத் திட்டம், விருப்பப் படும் இலக்கம் முதலியவற்றை பெற்றுக் கொள்ளும் வகையில் பயனருக்குப் பலனளிக்கும் ஒரு சந்தை உருவாகியிருக்கிறது.
இந்தப் பயனர் சந்தை முழுமையாக உருவாகி விட்டதா என்று கேட்டால் இல்லையென்றுதான் கூற வேண்டும். ஏன்?
மேலே கூறப்பட்ட சேவை நுகருவதில் வேண்டியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதிகள் ஆரம்பப் பயனர்களுக்குத்தான் உள்ளன. முக்கியமான சில பயன்கள் இன்னும் பயனர்கள் கையில் இல்லை. சேவை நிறுவனங்கள் கொடுப்பதை பயனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்தான் நிலவுகிறது.
உதாரணத்திற்கு பயனருக்கு அளிக்கப் படும் தொலைபேசி இலக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் வெவ்வேறு சேவை நிறுவனங்கள் வெவ்வேறு தொலைபேசி இலக்கத் திட்டத்தை கடைப்பிடிக்கிறார்கள். பி. எஸ். என். எல் வழங்கும் இலக்கங்கள் எப்போதும் 2 என்ற எண்ணில் ஆரம்பிக்கின்றன. அதே போல் ஏர்டெல் நிறுவனத்தின் இலக்கங்கள் சென்னையில் 5 என்ற எண்ணில் ஆரம்பிக்கின்றன.
இதே கதை அலைபேசி இலக்கங்களுக்கும் பொருந்தும்.
ஒரு இலக்கத்தின் ஆரம்ப எண்ணைக் கொண்டு கூப்பிடுபவரின் அடையாளத்தை அறிந்து கொள்ள் முடிவதுடன், அவரது சேவை நிறுவனம் எது என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் பயனருக்குப் பிந்தைய தகவலால் பெரிய பயன் எதுவும் கிடையாது.
ஒருவர் தொலைபேசி அல்லது அலைபேசி சேவை பெற்ற உடன், தனது இலக்கத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பு. இந்நிலையில், கிடைக்கும் தொலை தொடர்புச் சேவைகளில் மகிழ்ச்சி அடையாத ஒரு பயனர், தனது சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் இன்று தனது தொலைபேசி இலக்கத்தையும் சேர்த்து மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி இலக்கம் மாறும் போது தனது உறவினர், நண்பர்கள் மற்றும் தன்னைத் தொடர்பு கொள்ளத் தேவையுள்ள அனைவரையும் அழைத்து தனது புதிய இலக்கத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். அந்த பயனர் ஒரு வியாபார நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் புழக்கத்தில் உள்ள இலக்கத்தை மாற்றுவது அந்த நிறுவனத்திற்கு வியாபாரக் கேடாக விளையும் ஆபத்துகள் சாத்தியம். புதிய இலக்கத்தை அனைவருக்கும் அறிவிக்க வேண்டிய நேரச் செலவும் பொருட்செலவும் வியாபாரத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பும்.
ஆகவே பெரும்பாலானோருக்கு தனது சேவை நிறுவனத்தை விருப்பப் பட்ட போது மாற்றிக் கொள்ள முடியாமல் இந்தியாவின் தற்போதைய இலக்கத் திட்டம் பெரிய தடையாக உள்ளது. சேவைச் சீர்கேடுகளை பல்லைக் கடித்துக் கொண்டு பயனர்கள் பொருத்துக் கொள்ள வேண்டிய நிலை நிலவுகிறது. தலைவிதியை நொந்து கொண்டு விருப்பமில்லாத ஒரு சேவை நிறுவனத்துடன் தங்கள் உறவைத் தொடரும் பயனர்கள் இந்தியாவில் அதிகம்.
போட்டி மட்டுப் படுத்தப் பட்டு, திறமையில்லாத நிறுவனங்கள், சேவை திருத்தங்கள் எதுவும் செய்யாமலே, சந்தையில் தொடர்ந்து நீடித்திருக்க தற்போதைய இலக்கத் திட்டம் வழி வகுக்கிறது.
இத்தகைய குறையுள்ள இலக்கத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டம் ஒன்று அயல் நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. அதன்படி தற்போது தொலைபேசி உள்ள சேவை வரம்பிற்குள் (service range or area) தங்களுக்குச் சேவை அளிக்கும் நிறுவனத்தை மாற்ற விழையும் பயனர்கள், தங்களுக்குக் கொடுக்கப் பட்ட இலக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்தச் சேவை வரம்புக் கட்டுப்பாடு கூட தொலைபேசிகளுக்கு மட்டும்தான் பொருந்தும். அலைபேசிகளுக்குப் பொருந்தாது. இந்த வசதிக்கு ஆங்கிலத்தில் number porting facility என்று பெயர். அதாவது பயனர் தனது தொலைபேசி இலக்கத்தை சேவை நிறுவனங்களுக்கிடையே தூக்கிச் செல்லும் வசதி.
TRAI இந்தியப் பயனர்களுக்கு தனது தொலைபேசி இலக்கத்தை சேவை நிறுவனங்களுக்கிடையே தூக்கிச் செல்லும் வசதியை அளிப்பது பற்றி யோசிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறது. மாற்று இலக்கத் திட்டம் அமலுக்கு வந்தால், திறமையில்லாத அல்லது பயனர்களைப் பற்றிக் கவலைப் படாத சேவை நிறுவனங்கள் சந்தையில் நிலைப்பது கடினம். ஆகவே அது கூடிய சீக்கிரம் வரவேண்டும்! மாற்றம் முதலில் அலைபேசிச் சேவைகளுக்கு வரக் கூடும்.
No comments:
Post a Comment