கடந்த தமிழ்மணம் வாரத்தைப் பற்றி எனக்குத் தோன்றிய சில சிந்தனைகள்:
சக வலைப்பதிவு நண்பர்களிடம் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் பஞ்சமில்லை. அவற்றைத் தயங்காமல் அள்ளிக் கொடுக்கும் தமிழ்மணம் அன்பர்கள் பெருந்தன்மை மிக்கவர்கள்.
தொழில் நுட்பத்தைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் எத்தனை பேருக்கு சுவாரசியம் இருக்கப் போகிறது என்ற நினைப்பு வாட்டிக் கொண்டே இருந்தது. ஆனால் எனது ஆக்கங்களை மக்கள் படித்துப் பாராட்டிய போது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அப்படிப் பிடிக்காமல் 'போர்' அடித்ததாக உணர்ந்த நண்பர்களின் உணர்வை மதிக்கிறேன். ஆனால் எனக்கு வேறு எழுதத் தெரியாது. நண்பர்கள் வெளிப்படையாக மனதில் தோன்றியதைப் பகிர்ந்து கொண்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த நட்சத்திரமாக வரப் போகும் வலைப் பதிவர் வரும் வாரத்தை உங்களுக்கு இனியதாக சமைப்பார்!
கடந்த வாரத்தில் நான் எழுதிய வலைப்பதிவுகளில் ஜாக் கில்பி, மெட்டி ஒலி சரோ மற்றும் இந்தப் பதிவு ஆகிய மூன்று பதிவுகள் மட்டுமே இந்த வாரம் பதிவு செய்வதற்கு சற்று முன் எழுதப் பட்டவை. மற்றவை முந்தைய வாரங்களில் எழுதப் பட்டவை. இந்த வாரம் எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களில் இருந்த அறிவுரைச் செய்திகளை கொண்டு அவற்றைப் பதிக்கும் முன் தொகுக்க மட்டும் இந்த வாரம் நேரம் செலவழித்தேன்.

வலது பக்கத்தில் இருக்கும் வரைபடத்தில் ஆரஞ்சு வர்ணம் தீட்டப் பட்ட கண்டங்களில் உள்ள தமிழர்கள் எனது ஆக்கங்களைப் படித்திருக்கிறார்கள்.


குறிப்பாக எந்தெந்த நாடுகளில் உள்ள தமிழ்மணம் வாசகர்கள் என் வலைப்பதிவுப் பக்கத்திற்கு அதிகம் வருகை தந்தார்கள் என்பதை மேலுள்ள வரைபடம் தெரிவிக்கிறது.


இந்த வரைபடங்களிலுள்ள தகவல்களைத் திரட்ட உதவியது நெட்ஸ்டாட் பேசிக் என்ற இணையச் செயலி. அதை வடிவமைத்து இலவசமாக அளிக்கும் நிறுவனத்திற்கு நன்றி.
எனது கடந்த வாரத்தை மிகச் சுவாரசியமாக ஆக்கிய அனைவருக்கும் மறுபடியும் மறுபடியும் நன்றி.
தமிழ் இலக்கணத்தைத் திரும்பவும் படித்துக் கொண்டிருக்கிறேன். என் பதிவில் எழுத்துப் பிழைகளைகளையும் இலக்கணப் பிழைகளையும் குறைக்க மனதார முயற்சிப்பேன்; குறைந்த பட்சம் தமிழ்மணம் நட்சத்திர ஆக்கங்களை மட்டுமாவது தொடர்ந்து தினமும் படிப்பேன்; சக வலைப்பதிவர்களின் ஆக்கங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க முயற்சிகள் எடுத்துக் கொள்வேன்; என் கருத்துகளை தமிழ்மணத்தில் தயங்காமல் பகிர்ந்து கொள்வேன்; ஒரு பொறுப்புள்ள வலைப்பதிவனாக நடந்து கொள்வேன் என்ற உறுதிமொழிகளோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.

8 comments:
அன்பின் உதய்
உங்கள் வலைப்பதிவுகள் சுவாரசியமாக இருந்தன..
//தொழில் நுட்பத்தைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் எத்தனை பேருக்கு சுவாரசியம் இருக்கப் போகிறது//
நிச்சயம் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது..
நன்றி..
உதயகுமார்,
நல்லதொரு வாரமாகச் சென்றது.
நான் உங்களின் தொழில்நுட்ப பதிவுகளை விரும்பிப் படிக்கிறேன். நிறையப் பேருக்கு சுவாரசியமாக இருக்கிறது. என்ன ஒன்று பலர் என்னைப்போல பின்னூட்டம் இடுவதில்லை. அதைப்பற்றியெல்லாம் நினைக்காமல், நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
-மதி
உதய், சுவாரசியமான அலசல்களோடு முடித்திருப்பது நன்றாக இருக்கிறது. தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள். உங்களின் தொழில்நுட்பப் பதிவுகள் தமிழ்வலைப்பதிவுகளுக்கு ஒரு வித்தியாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. எப்போதாவது நானும் சில நுட்பியற் பதிவுகளை இடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
உங்கள் பதிவுகளை விரும்பிப் படித்தேன், நன்றி.
//ஆனால் எனக்கு வேறு எழுதத் தெரியாது. //
இத்தகைய நினைப்புகளால் உங்களுக்கு நீங்களே ஒரு எல்லையை வரைந்து கொள்கிறீர்களா என்றும் யோசியுங்கள். துறைசார் வல்லமை, தொழிலனுபவங்கள் இவையனைத்தையும் கடந்து, நாமெல்லோரும்் அடிப்படையாக சராசரி மனிதர்கள்தானே? உலக நடப்புகள், வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த கருத்துக்கள், விருப்பு வெறுப்புகளையெல்லாம் குறித்து எழுதலாமே?
பின்னூட்டங்களைப் பற்றி கவலை கொள்ளாது தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருங்கள்!
இராதாகிருஷ்ணன்.
Conti, மதி கந்தசாமி: மிக்க நன்றி! நான் கற்றுக் கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதில் மிக்க மகிழ்ச்சி!
// எப்போதாவது நானும் சில நுட்பியற் பதிவுகளை இடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. //
செல்வராஜ்: கண்டிப்பாகச் செய்யுங்கள். வாழ்த்துகள் பல!
// தொழில்நுட்பப் பதிவுகள் தமிழ்வலைப்பதிவுகளுக்கு ஒரு வித்தியாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறது //
கண்டிப்பாக எழுதுவேன் என்ற உறுதிமொழியுடன்தான் விடைபெற்றிருக்கிறேன். என்னாலான சிறந்த முயற்சிகளைத் தொடர்ந்து செய்ய ஆவல்.
// இத்தகைய நினைப்புகளால் உங்களுக்கு நீங்களே ஒரு எல்லையை வரைந்து கொள்கிறீர்களா என்றும் யோசியுங்கள். //
நல்ல தூண்டுதல்! நன்றி!!
// பின்னூட்டங்களைப் பற்றி கவலை கொள்ளாது //
அதாவது 'பின்னூட்டங்கள் எதுவும் கிடைக்காத பொழுதும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் எழுது' என்று சொல்கிறீர்கள். தமிழ் எழுதுவதில் இப்போதெல்லாம் மிகுந்த ஆர்வம் வந்திருக்கிறது. ஆகவே பதிவுகள் தொடரும் இராதாகிருஷ்ணன்.
-உதயகுமார்
உதயகுமார்,
நேரப்பற்றாக்குறை காரணமாக என்னால் முழுதாக வாசிக்க முடியவில்லை. நல்ல முன்னேற்பாட்டோடு செய்திருப்பதாகத் தெரிகிறது. நன்றியும், வாழ்த்துக்களும்.
அன்புடன்,
-காசி
அன்புள்ள காசி !
// நேரப்பற்றாக்குறை காரணமாக என்னால் முழுதாக வாசிக்க முடியவில்லை. //
தமிழ்நாட்டிற்குச் சமீபத்தில் திரும்பி விட்டீர்கள் என்று பதிவுகள் மூலம் அறிந்தேன். வருக! இனிதான வாழ்க்கைப் பயணம் இங்கும் தொடர வாழ்த்துக்கள்.
// முன்னேற்பாட்டோடு செய்திருப்பதாகத் தெரிகிறது //
இடமாற்றம் அளித்திருக்கும் சவால்களுக்கும், அலுவல்களுக்கும், குவிந்திருக்கும் மின்னஞ்சல்களுக்கும் நடுவிலும் அசராமல் தமிழ் பதிவுகளைப் படிக்கும் உங்களைப் பார்த்து வியப்பாக இருக்கிறது காசி!
வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி!
- உதயகுமார்
Post a Comment