Saturday, June 25, 2005

ப்ளாஸ்மா திரை தொலைக்காட்சிப் பெட்டிகள்

சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியில் கண்ணாடியாலான திரை இருக்கும். அந்தத் திரையில் பிம்பங்களை அமைக்க ஒரு மின்னணு துப்பாக்கியை திரையின் பின்னால் பொருத்தியிருப்பார்கள். மின்காந்த அலைகளை உபயோகித்து மின்னணு துப்பாக்கியிலிருந்து வெளி வரும் கதிரை இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் அதிவேகமாக நகர்த்தி திரையில் பிம்பம் ஒளிருமாறு வடிவமைத்திருப்பார்கள். மின்னணு துப்பாக்கியின் நீளத்தினால் தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் சற்று கூம்பு போல நீண்டிருக்கும். இந்த வகை தொலைக்காட்சி சாதனங்களை கண்ணாடி பிம்பக் குழாய் (Picture Tube) கொண்ட தொலைக்காட்சி பெட்டிகள் என்று அழைக்கலாம்.

இதனுடன் ஒப்பிடுகையில் ப்ளாஸ்மா தொழில்நுட்பம் உள்ள புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகத் தட்டையானவை. தட்டையான திரைக்கும் பின்புறத்திலுள்ள மூடிக்கும் இடையே உள்ள தூரம் மூன்று முதல் நான்கு இன்ச்சுகளே இருக்கும். ப்ளாஸ்மா திரை தொழில்நுட்பம் படத்தை மிகத் துல்லியமாகக் காட்ட வல்லது.

என்னதான் துல்லியமாகப் படம் காட்டும் தொலைக்காட்சி வைத்திருந்தாலும் டிஜிட்டல் ஒளிபரப்பு முறை இருந்தால்தான் படம் துல்லியமாகத் தெரியும். நம்மூரில் செட் டாப் பெட்டி வைத்திருப்பவர்களுக்கு டிஜிட்டல் ஒளி பரப்பின் அருமை தெரியும். மேலைநாடுகளில் HDTV என்ற டிஜிட்டல் ஒளி பரப்பு முறை இப்போது பிரபலமடைந்து வருவதால் அங்கே மக்கள் ப்ளாஸ்மா தொலைக்காட்சிகள் வாங்குவது சரி.

அமெரிக்காவில் பலர் பிளாஸ்மா தொலைக்காட்சிகளை விரும்பி வாங்குகிறார்கள். சுமார் 2000 டாலர்களில் ஆரம்பித்து 20000 டாலர் வரை விதவிதமான திரை அளவுகளில் ப்ளாஸ்மா தொலைக்காட்சிகள் அமெரிக்கச் சந்தையில் கிடைக்கின்றன.

இந்தியாவிலும் சாம்ஸங், ·பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் ப்ளாஸ்மா தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இவற்றின் குறைந்த பட்ச விலையே அமெரிக்காவின் மிகக் குறைந்த விலையுள்ள ப்ளாஸ்மா தொலைக்காட்சியை விட இரண்டரை மடங்கு அதிகம்.

நம் நாட்டில் டி.வீ.டி தகடுகளிலிருந்து படம் காட்டும் சாதனம் வைத்திருப்பவர்கள் அல்லது செட் டாப் பெட்டி வைத்திருப்பவர்கள் மட்டுமே ப்ளாஸ்மா தொலைக்காட்சியின் முழுப் பலனைப் பெற முடியும். இப்போதைக்கு சென்னையில் கேபிள் சேவை அளிப்பவர்களால் மட்டுமே ஒளிபரப்பிற்காக செட் டாப் பெட்டிகள் உபயோகிக்கப் படுகின்றன.

பிம்பக் குழாய் கொண்ட தொலைக்காட்சிகள் துல்லியமாகப் படம் காட்டுவதில் ப்ளாஸ்மா தொலைக்காட்சிக்குப் பக்கம் வரமுடியாது என்றாலும் அவை மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவை உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவு ப்ளாஸ்மா தொலைக்காட்சிகள் உபயோகிக்கும் அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே.

டிஜிட்டல் ஒளிபரப்பு இல்லாத இந்தியாவில், கார் வாங்கும் விலையில் தொலைக்காட்சி வாங்கி, நான்கு பங்கு அதிக மின்சாரம் செலவழித்து, மணல் விழுந்தது போல படம் பார்ப்பது காசை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருப்போருக்கே சாத்தியம்.

No comments:

Blog Archive