Thursday, June 23, 2005

அஞ்சலி - ஜாக் செயிண்ட் க்ளேர் கில்பி

கான்சாஸ் மாநிலத்தில் கிரேட் பெண்ட் (Great Bend) என்ற ஊரில் வாழ்ந்தவர் ஜாக் கில்பி. மின்னியல் பொறியாளராக உயர் பட்டம் முடித்தவர். நுண்ணிய மின்னணுவியல் (micro-electronics) இன்றைய அளவிற்கு வளர ஏறக்குறைய நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல் அடியை எடுத்து வைத்து உதவியவர் அவர்.

தனது 81 ஆம் வயதில் புற்று நோயுடன் சில நாட்கள் போராடிவிட்டு கடந்த 20 ஆம் தேதி இறந்து போனார்.

இவர் அந்தக் காலத்தில் மின்னணு பகுதிக்கடத்திகளை (semiconductor) செய்து வந்த டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் 1958 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் இன்று ஒரு உலகப் புகழ் பெற்ற நிறுவனம். இந்தியாவில் பெங்களுரில் கிளை அமைத்திருக்கிறார்கள். ஜாக்கிற்கு அவர்களுடைய இணைய தளத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் மின்னணு சாதனங்கள் தனித்தனி டிரான்ஸிஸ்டர்கள் கொண்டு செய்யப் பட்டன. இதனால் அவை வேலை செய்யும் போது அதிகம் சூடு ஏறக் கூடிய தன்மையைப் பெற்றிருந்தன. மின் சுற்றில் ஒவ்வொரு டிரான்ஸிஸ்டருக்கும் மூன்று இணைப்புகள் தேவையிருந்ததால் இந்த இணைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பழுது ஏற்பட்டால் கூட சாதனம் பழுதடைந்து விடும். (இணைப்புகளில் பழுது ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க இணைப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும் ஒரு சிறந்த வழி.) தனி டிரான்ஸிஸ்டர்களை உபயோகிக்கும் மின் சாதனங்கள் அளவில் பெரியதாகவும் இருந்தன. மின்சாரச் சிக்கனம் கிடைத்தாலும் மேலும் சிக்கனம் தேவையிருந்தது.

இந்த டிரான்ஸிஸ்டர் மின்சாதனங்களின் வடிவமைப்புச் செலவைக் குறைக்கும் வேலை ஜாக்கிற்கு கொடுக்கப் பட்டது. சிரத்தையாக ஆய்வுகள் செய்த ஜாக் ஒரே சிலிகான் பட்டையின் மேல் பல டிரான்ஸிஸ்டர்களைக் கொண்ட மின்சுற்றையே அமைத்து அதை வெற்றிகரமாக செப்டம்பர் 15, 1958 ஆம் நாளன்று இயக்கிக் காட்டினார். அவர் செய்த சில்லுக்குப் பெயர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று (Integrated Circuit). இதற்கு நான்கு முதல் எட்டு கால்கள் வரை உண்டு. பத்து டிரான்ஸிஸ்டர்களை கொண்ட ஒரு மின்சுற்றில் டிரான்ஸிஸ்டர்களுக்கு மட்டும் முப்பது இணைப்புக்கள் இருக்கும். அதுவே ஜாக்கின் சில்லுவில் 8 கால்கள் மட்டுமே. எவ்வளவு வசதி! மேற்கூறிய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஓரளவு தீர்வைத் தந்தது இந்த ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று.

ஜாக் அன்று செய்தது ஒரு சில ட்ரான்ஸிஸ்டர்களைக் கொண்ட சிறிய மின்சுற்று. இன்றைக்கு உங்கள் கணினிக்குள் இருக்கும் மத்திய Processor என்ற சில்லு (ஏறக்குறைய 1cm by 1cm பட்டையில்) மில்லியன் கணக்கில் டிரான்ஸிஸ்டர்களைக் கொண்ட மின்சுற்றை உள்ளடக்கியிருக்கிறது. இந்தச் சில்லுவின் கொள்ளுத் தாத்தா ஜாக் கண்டுபிடித்த சில்லுதான். கடந்த 45 ஆண்டுகளில் அளவில் குறுகி பயனில் பெருகிக் கொண்டே போன மின்னணுவியல் சாதனங்களுக்கு அடிகோலியது ஜாக் செயத மின்சுற்று.

ஜாக்கை அவர் செய்த சேவைக்காக விருதுகள் தந்து கௌரவப் படுத்தியது அமெரிக்க அரசு. ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று கண்டுபிடித்ததில் அவரது பங்கைப் பாராட்டி 2000 ஆம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

அவரது கண்டுபிடிப்புக்களாக அறுபது அமெரிக்கக் காப்புரிமைகளத் (patents) தன் பெயரின் கீழ் ஜாக் பெற்றிருந்தார்.

நான் பணி புரியும் கணினி மென்பொருள் துறையின் ஆரம்பத்திற்கும், வளர்ச்சிக்கும், அதனால் எனக்குக் கிடைத்த வேலை வாய்ப்புக்கும், நான் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும், திறமைகளுக்கும், அவை எனக்குக் தந்திருக்கும் வாழ்விற்கும், இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தப் பதிவின் சாத்தியத்திற்கும் ஜாக் என்ற மனிதனின் சிந்தனை முதல் படி.

சாதனை மனிதன் ஜாக்கின் வாழ்வும் சிந்தனையும் மனிதர்கள் வாழ்க்கைக்கு ஒரு முன்னோடியான எடுத்துக்காட்டு. அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உதய், நல்ல பதிவு.

Badri Seshadri said...

ஜாக் கில்பியும் ராபர்ட் நாய்ஸும் தனித்தனியாக இண்டெக்ரேடட் சர்க்யூட்டைக் கண்டுபிடித்தார்கள் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஏன் கில்பிக்கு மட்டும் நோபல் பரிசு கொடுத்தனர்?

ந. உதயகுமார் said...

// ஆனால் ஏன் கில்பிக்கு மட்டும் நோபல் பரிசு கொடுத்தனர்?//

ராபர்ட் நாய்ஸ் (Robert Noyce) நான் பதிவில் சொல்லியிருந்த மூர்ஸ் விதியை உலகுக்குச் சொன்ன ஜெ·ப்ரி மூர் (Geoffrey Moore) என்பவருடன் இணைந்து ·பேர்சைல்ட் (Fairchild) நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மின்சுற்று செய்ய முனைந்து கொண்டிருந்தார்கள். அவர்களை அந்த concept ஐ யோசித்த போது, அதற்குப் பல மாதங்கள் முன்னமே ஜாக் அந்த concept ஐ யோசித்து விட்டார் என்று அவர்களுக்குத் தெரியாது.

முதல் முதலில் ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றை தயாரித்து வெற்றிகரமாக உலகிற்கு இயக்கிக் காட்டியவர் ஜாக்.

பின் ராபர்ட் ஒரு படி மேலே போய், சிலிகான் பட்டையிலேயே இணைப்புகளை உருவாக்கும் ப்ளேனார் முறையைக் கண்டு பிடித்தார்.

ஜாக்கிற்கு நோபல் பரிசு அளிக்கப் பட்ட போது ராபர்ட் உயிருடன் இல்லை. தனது 62 ஆம் வயதிலேயே காலமாகி விட்டார்.

இதெல்லாம் காரணங்களாக இருக்கலாம்.

மேலும் சில சுவையான தகவல்கள்:

இன்றைக்கு சக்கைப் போடு போடும் இன்டெல் நிறுவனத்தை நிறுவியவர்கள் ராபர்ட்டும், ஜெ·ப்ரியும்தான்.

1952 ஆம் ஆண்டு வாக்கில் ப்ரிட்டனின் தற்காப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த ஜெ·ப்ரி டம்மர் என்ற மனிதர்தான் ஒருங்கிணைந்த மின்சுற்று என்ற தத்துவத்தைப் பற்றி முதலில் பேசியிருக்கிறார். அவரால் அதை வெற்றிகறமாக செயல் படுத்திக் காட்ட முடியவில்லை.

- உதயகுமார்

Blog Archive