2003 - 2004 ஆம் ஆண்டு இந்தத் துறை ஏற்றுமதி செய்த மென்பொருள் (சேவைகள்) மதிப்பு சுமார் 9.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் சுமார் 60 சதவிகிதம் சாதனை டாடா, இன்போஸிஸ், சத்யம், ஹெச்.சி. எல், விப்ரோ போன்ற இருபது பெரிய நிறுவனங்களை மட்டுமே சேரும். இந்தியாவில் மேற்கூறிய நிதியாண்டில் சுமார் 3200 க்கும் சற்று அதிகமான நிறுவனங்கள் இருந்தன.
மேற்குறிப்பிட்ட இருபது நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற நிறுவனங்களின் சராசரி ஏற்றுமதியைக் கணக்கிட்டால் அது சுமார் 1.2 மில்லியன் டாலர் அளவிற்கும் குறைவாகவே இருக்கும் (அன்றைய அந்நியச் செலாவணிக் கணக்கில் சுமார் ஐந்து கோடி ரூபாய்கள்). இந்த நிறுவனங்கள் சுமார் பத்து பேரை வெளிநாட்டிலோ அல்ல்து சுமார் நாற்பது பேரை இந்தியாவிலோ பணியமர்த்தி சேவைகள் அளிப்பதன் மூலம் இத்தகைய ஏற்றுமதி இலக்கை சாதித்திருப்பார்கள் (அல்லது சாதித்திருக்க முடியும்).
ஆக இந்தத் துறையில் சுமார் இருபது பெரிய நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் மிகச் சிறிய நிறுவனங்களும் இயங்கி வருவது புரியும். ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் சிறிய நிறுவனங்களும் சுமார் ஏழு வருடங்களாக இயங்கி வந்திருக்கின்றன.
இந்த நிலையை, கையளவே பணக்காரர்களும் ஆயிரக்கணக்கில் ஏழைகளும் வாழும் ஒரு கற்பனைச் சமுதாயத்துடன் பிஸினஸ் வர்ல்ட் பத்திரிக்கை ஒப்பிடுகிறது. இத்தகைய சமுகத்தின் பொருளாதாரம் சற்று ஆரோக்கியமற்றதாகத்தான் இருக்கும்.
துறையிலுள்ள சில நிறுவனங்கள் மட்டுமே பங்குச் சந்தையில் பதிவு செய்யப் பட்டு சந்தை மதிப்பைப் (Market Value) பெறுகின்றன. சந்தை மதிப்பில் உயர்ந்தவை (Large Cap), மத்திய தட்டில் உள்ளவை (Mid cap), சிறிய சந்தை மதிப்புள்ளவை (Small Cap) என்று பங்குச் சந்தையில் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்களைத் தரம் பிரிக்க முடியும். முதல் கூறிய இருபது நிறுவனங்களில் சந்தை மதிப்பில் உயர்ந்தவை என்ற பட்டியலில் சுமார் நான்கு அல்லது ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டுமே அடங்கும்.
பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 2001 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு 50 முதல் 60 சதவிகிதம் வரை இருந்தது. இணையப் பொருளாதாரக் (Internet Bubble) குமிழி உடைந்ததன் பிற்பாடு இந்தப் பெரிய நிறுவனங்களே 30 முதல் 35 சதவிகிதம் வளர்ச்சி விகிததை எட்ட பெருமுயற்சியும் பணமும் செலவிட வேண்டியிருக்கிறது. இத்தகைய வளர்ச்சிக்கு இந்த நிறுவனங்கள் இன்றைய தேதியிலும் (தேவையான ஆயிரக்கணக்கான பொறியாளர்களை பணியமர்த்தி பயிற்றுவித்து அவர்களின் சேவைகளை ஏற்றுமதி செய்யும்) Linear வளர்ச்சி முறையையே இன்னும் கடைப்பிடிக்கின்றன. உற்பத்தித் திறனை (ஒரு பணியாளர் ஈட்டும் வருவாய்) உயர்த்தும் யோசனைகள் எதுவும் பெருமளவில் இன்னும் கண்ணுக்குப் படவில்லை. அங்கும் இங்கும் எப்போதோ தட்டுப் படுகின்றன. சந்தையில் இது நாள் வரை வியாபாரம் எளிதாகக் கிடைத்ததால், மூலச் சந்தையை பெருக்க இதுவரை பெரிய முதலீடுகள் எதுவும் பெரிதாகச் செய்யவில்லை. அதனால் வந்த வினை இது என்று சொல்லலாம். இன்னமும் இந்தப் பெரிய நிறுவனங்களில் கூட புதிய கண்டுபிடிப்புகளுக்குத் (Innovation) தேவையான முதலீடுகள் செய்யப் படுவதில்லை என்பது வருத்தமான உண்மை.
மத்தியத் தட்டு நிறுவனங்கள் கூட 2001 ஆம் ஆண்டு வரை 50 முதல் 60 சதவிகித வளர்ச்சி விகிதத்தை எளிதில் சாதித்தன. ஆனால் அவைகளில் பல ஒன்று அல்லது இரண்டு நுகரும் நிறுவனங்களைக் (customer organisation) கொண்டே இந்த சாத்னையைச் செய்யத் தலைப்பட்டன. பெரிய நிறுவனங்களைப் போல் இந்தியாவிலிருந்து சேவை அளிக்கும் (offshore) திறனைப் பெருக்கிக் கொள்வதற்கு முதன்மையளிக்கத் தவறின. பொறியாளர்களை நுகர்வோர் அலுவலகங்களில் பணியமர்த்தி (on-site placement) சேவை அளிப்பதில் வருவாய் அதிகம் கிடைப்பதால் குருட்டுத் தனமாக அதையே செய்து வந்தன. தேவையான தொலைநோக்குடன் செயல் படவில்லை. இந்த முறையில் செலவும் அதிகம்.
குமிழி உடைந்தவுடன் நுகர்வோரின் போக்கு திடீரென மாறியது. இந்த மாற்றத்திற்கு நுகர்வோரின் தவிர்க்க முடியாத சிக்கன நடவடிக்கைகள் ஒரு காரணம். இந்தியா அமெரிக்காவிடையே ஒளியிழையாலான பெரும் அகலம் கொண்ட தகவல் பாட்டைகள் இந்த கால கட்டத்தில் அமைக்கப் பட்டு விட்டது மற்றோரு முக்கிய காரணம். தன் நுகரும் போக்கை மாற்றிய அந்நிய நிறுவனங்கள் தாங்கள் நுகரும் சேவைகளை குறைந்த செலவில் இந்தியாவில் இருந்து அளிக்கும் திறனுள்ள நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்கள். மத்திய தட்டு நிறுவனங்களிடமிருந்து வியாபாரம் தொலைந்து போய்க் கொண்டிருந்தது. வியாபாரத்தை இவ்வாறு தொலைத்துக் கொண்டிருக்கும் தனக்குச் சேவை வழங்கும் நிறுவனங்கள் நெடுநாள் உயிருடன் இருக்காது என்று அச்சப் பட்டு அவற்றிடம் இருந்து பெரிய நிறுவனங்களுக்கு திடீரென தாவி விட்ட நுகர்வோரும் உண்டு. ஆக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி, மத்திய தட்டு நிறுவனங்களின் வளர்ச்சியைச் சேதப் படுத்தி வந்ததென்றால் மிகையாகாது. இதற்கு மத்திய தட்டு நிறுவனங்களின் தொலைநோக்கின்மையே முக்கிய காரணம் என்பதும் மிகையற்ற கூற்று. அவை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளத் தவறி விட்டன.
சுமார் 160000 பணியாளர்கள் வேலை செய்யும் ஒரு துறை வருடத்திற்கு 30 சதவிகிதம் linear ஆக வளர அதற்கு வருடத்திற்கு 50000 புதிய பணியாளர்கள் தேவை. ஒவ்வொரு வருடமும் அனுபவமுள்ள பொறியாளர்கள் இத்தனை எண்ணிக்கையில் கிடைக்க மாட்டார்கள். துறையில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிறுவனங்கள் புதிதாக பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களைப் பணியமர்த்தி பயிற்றுவித்து வளர்ச்சியை சந்திக்க் முடியும். ஏனென்றால் அவர்களிடம் தேவையான அளவில் அனுபவமுள்ள பொறியாளர்கள் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு வரை இந்தியாவில பெரிய அளவில் வளராத அந்நியச் சேவை நிறுவனங்களான ஐ.பி.எம்., அக்ஸென்ச்சர் (Accenture), ஹெச். பி., போன்ற நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் தங்களது இந்திய அலுவலகங்களில் பொறியாளர்களைப் பணியமர்த்தின. இந்திய நிறுவனங்கள் தங்கள் நாட்டுச் சந்தையில் தங்களுடன் போட்டியிட்டு வியாபாரத்தை அள்ளிச் செல்வதை எதிர்த்து வியாபாரத்தைத் தங்களிடம் தக்க வைத்துக் கொள்ள செய்யப் படும் முயற்சி இது. இந்த நிறுவனங்கள் புதியதாக வளர்வதால் வளர்ச்சியைச் சந்திக்க முதலில் அவர்களுக்கு அனுபவமுள்ள பணியாளர்கள் மிகத் தேவை. அவர்கள் எங்கிருந்து கிடைப்பார்கள்? இந்திய நிறுவனங்களிடமிருந்துதான்.
இந்தியாவிலிருந்து மிக அதிகமான மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் நடப்பு ஆண்டில் ஐ.பி.எம், பெரோட் ஸிஸ்டம், காக்னைசண்ட் என்ற நிறுவனங்கள் நுழைந்து விட்டதாகத் தெரிகிறது.
இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் இன்று சந்திக்கும் சவால்கள்:
- உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் கடுமையான போட்டி
- பணியாளர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை
- துறைக்கு வேண்டிய பணியாளர்களை உருவாக்க நிறுவனங்கள் இணைந்து செயல் படாமல் கடுமையாகப் போட்டியிட்டுக் கொள்ளும் நிலை
- குறைந்த செலவில் நிலையான சேவை அளிக்கக் கூடிய சேவை நிறுவனங்களைத் தேடும் நுகர்வோர்
- விருப்பப் பட்ட பணியை விருப்பப் பட்ட போது தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியைப் பெற்ற இந்தத் துறையின் பணியாளர்கள்
- சந்தையைப் பெருக்க இந்திய நிறுவனங்கள் இதுவரை முயற்சி செய்யாத நிலை
- அதனால் உற்பத்தித் திறனை (ஒரு பணியாளர் ஈட்டும் வருவாய்) பெருக்க புதிய யோசனைகளுக்குப் பஞ்சம்
- திறமையைப் பெருக்கிக் கொள்ள முனையாமல் அதிக சம்பளத்திற்காக பணித்தாவல் செய்து கொண்டிருக்கும் ஏராளமான பணியாளர்கள்
- அப்படி பணித்தாவல் செய்வதிலிருந்து மீள நிறுவனங்கள் செய்ய வேண்டிய அதிகப்படியான பணியமர்த்தல் (Hiring) மற்றும் பயிற்சிச் (Training) செலவுகள்
- பணித்தாவல் செய்து கொண்டிருக்கும் பணியாளர்களால் நுகர்வோர் தேடும் திறமைகளையும், போட்டியிடும் திறனையும் இழந்து தவிக்கும் நிறுவனங்கள்
சவால்கள் மிகுந்த துறையாக இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை இன்று மாறி விட்டது. எதிர்பாராமல் மாறிய தருணங்களில் இந்த சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளத் தேவையான பயிற்சி, துறையிலுள்ள மேலாளர்களுக்கு (Managers) முன்கூட்டியே அளிக்கப் படவில்லை. அதனால் அவர்கள் பணி செய்தவாறே சவால்களைச் சமாளிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். இது நுகர்வோர் மனநிறைவைப் பாதித்த வண்ணம் இருக்கிறது.
நாஸ்காம் (Nasscom) அமைப்பு உலகளாவிய மென்பொருள் சேவைகளின் நுகர்வின் மொத்த மதிப்பு 2008 ஆம் ஆண்டு 94 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. தற்போது துறை இருக்கும் நிலையில் கூட அந்த 94 பில்லியனில் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள வியாபாரம் இந்தியாவிற்கு வரும் என்று தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகிறது.
இந்தத் துறையின் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் சாதிக்கும் திறமையுடவர்கள். சாதிப்பார்கள்.
5 comments:
அருமையான பதிவுக்கு நன்றி சாரே!
நல்ல நல்ல பதிவாக போடுகிறீர்கள்.
நன்றி
உதயகுமார்,
அருமையான பதிவு. 2008 ஆம் ஆண்டுவாக்கில் 48 பில்லியன் மென்பொருள் துறையில் மட்டுமேவா?. ஆச்சரியமாய் இருக்கிறது. இந்தத்தொகை இந்திய மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் அளவைப்போல் ஒன்றரை மடங்கு. உங்கள் கட்டுரை எதிர்கால வளமான இந்தியாவைப் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது.
மேம்போக்காக இல்லாமல் ஆழமாக அலசி எழுதப்பட்ட பதிவு. மிகவும் நன்றாக இருக்கிறது.
அன்புள்ள positiverama, பரணி, முத்து, செல்வராஜ்,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
// 48 பில்லியன் மென்பொருள் துறையில் மட்டுமேவா?.//
இந்தத் துறை வளர்ந்த கதையை அடுத்த சில வாரங்களில் இன்னொரு பதிவில் எழுத ஆசை.
- உதயகுமார்
Post a Comment