Friday, June 24, 2005

அர்ச்சனை

முரளி படுக்கையை விட்டு எழுந்த போது கடிகாரம் காலை ஏழு மணி காட்டியது. ஜன்னல் வழுயாக சுள்ளென்று காலை வெய்யில் முகத்தில் தாக்கியது. தலை பாரமாகத் தெரிந்தது. கண்களில் எரிச்சல். கூடவே தலை வலி. அலுவலகம் செல்லும் உடைகளிலேயே தூங்கி விட்டதை உணர்ந்தான்.

அப்போதுதான் முந்தைய நாள் இரவு சென்ற 'பார்ட்டி'யைப் பற்றி ஞாபகம் வந்தது. நேற்று கொஞ்சம் 'ஓவர்' தான். நண்பர்கள் கட்டாயப் படுத்திவிட்டார்கள்.

மைதிலிக்கு இது அறவே பிடிக்காது. ஆறு மாதம் முன்புதான் கல்யாணத்தன்று இரவே கண்டிப்பாகச் சொன்னாள் "இந்த குடிக்கற வேலையெல்லாம் வச்சுகிட்டிங்கன்னா.. அப்புறம் என்னைத் தொடவே கூடாது". கீழே இறங்கி ஹாலுக்குப் போனால் கண்டிப்பாக பத்ரகாளியாகத்தான் இருப்பாள். எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று முரளிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

கீழே வீடு வழக்கத்தை விட மிக அமைதியாகத் தெரிந்தது. கண்டிப்பாக விவகாரம்தான். முரளிக்கு சூடாக ஒரு காப்பி சாப்பிடத் தேவையாயிருந்தது.

மெதுவாக மாடிப் படிகளில் இறங்கி வந்தான். அப்பா ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். தலையைத் திருப்பி இவனை ஒரு பார்வை பார்த்து விட்டு சலனமில்லாமல் திரும்பவும் பேப்பர் படிக்க ஆரம்பித்து விட்டார்.

குளியலறையில் முரளிக்கு வேண்டிய துணிமணிகள், சோப்பு, துண்டு சமாசாரங்களெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. அவனது அலுவலகப் பெட்டி வழக்கமான இடத்தில் தயாராக இருந்தது. ஷ¥ மெருகேற்றப் பட்டு மின்னிக் கொண்டிருந்தது. சாப்பாட்டு டேபிள் மேல் சூடான காலைச் சிற்றுண்டி தயாராக இருந்த்து.

பல் தேய்த்து விட்டு சமையலறைக்குள் பயந்து கொண்டே எட்டிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. வீட்டுக்குள் ஒரு சுற்று நடந்து விட்டு வந்தான். மைதிலியைக் காணவில்லை. புயலுக்கு முன்னே இவ்வளவு அமைதியா?

மெதுவாக அப்பாவிடம் தயங்கிக் கொண்டே ஆரம்பித்தான். "அப்பா... மைதிலி...??"

"அவளா! கோவிலுக்குப் போயிருக்கிறாள்" பேப்பரிலிருந்து தலையைத் திருப்பாமலே கடுப்பாக பதில் சொன்னார்.

"அவள் காலையில் கோவிலுக்கெல்லாம் போக மாட்டாளே. இன்றைக்கு என்ன விசேஷம்?" என்றான் முரளி.

"எல்லாம் நீ நேற்று செய்த காரியம்தான்" என்று அப்பா இன்னும் கடுகடுத்தார். தலையைச் சொறிந்தான் முரளி.

அப்பா பிடித்துக் கொண்டார். "ஏண்டா. இது உனக்கே நல்லாயிருக்கா? கல்யாணமாகி இன்னும் ஆறு மாதம் ஆகலே. புதுப் பொண்டாட்டிய நடத்தற விதமா இது? ராத்திரி பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்து, ஹாலில் இருக்கும் பூ ஜாடியையெல்லாம் நிலை தெரியாமல் தட்டி உடைத்து, ஹாலெல்லாம் வாந்தியெடுத்து.... நிற்க முடியாமல் தள்ளாடி விழுந்து கொண்டு... இப்படியா அளவில்லாமல் குடிப்பாய்... என் பிள்ளையா நீ.. அசிங்கம்"

தலையைக் குனிந்து கொண்ட முரளிக்கு இன்னும் ஏன் மைதிலி இந்த நிலையில் கோவிலுக்குப் போயிருக்கிறாள் என்று புரியவில்லை.

அப்பா மேலும் தொடர்ந்தார் "கீழே விழப் போன உன்னைத் தாங்கிய மைதிலியிடம் என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா?"

முரளிக்கு என்னத்தை உளறித் தொலைத்தோம் என்று ஞாபகம் வரவில்லை. இன்னும் பரிதாபமாக அப்பாவைப் பார்த்தான்.

"ஆனாலும் கில்லாடிடா நீ. தெரிந்தே சொன்னாயா. தெரியாமல் சொன்னாயா... எனக்குத் தெரியவில்லை... மைதிலி உன்னைத் தாங்கிய போது... பெண்ணே என்னை நீ தொடாதே.. எனக்குக் கல்யாணமாகி விட்டது என்று சொல்லி அவளைத் தட்டி விட்டாய்... பாவம் முதலில் புரியாமல் திகைத்துப் போனாள் குழந்தை. பிறகு உன் பக்கத்திலேயே வெகுநேரம் உட்கார்ந்திருந்தாள்...

காலையில் உற்சாகமாகத்தான் உனக்கு வேண்டியதை அவசரமாகச் செய்து வைத்து விட்டு கோவிலுக்கு அர்ச்சனை செய்யப் போயிருக்கிறாள் குழந்தை. அவளிடம் போய் இப்படி. கருமம்.. கருமம" என்று கொட்டிவிட்டு பேப்பருக்குத் திரும்பி விட்டார் அப்பா.

அர்ச்சனை திசை மாறிப் போனதன் காரணம் இப்போது புரிந்த முரளிக்கு மைதிலி தொலைவில் தெருவில் வந்து கொண்டிருந்தது கண்ணுக்குத் தெரிந்தது. குளியலறைக்குள் அவசரமாக ஓடி விட்டான்.

(பி.கு: இந்தக் குட்டிக் கதையின் கரு என் சொந்தமில்லை. மின்னஞ்சலில் வந்த ஒரு சிரிப்புத் துணுக்கை அடிப்படையாகக் கொண்டது. பாத்திரங்களும் அவர்களின் உணர்வுகளும் தமிழ் படுத்தப் பட்டிருக்கின்றன)

4 comments:

Muthu said...

உதயகுமார்,
இது எனக்கு பிடித்த ஒரு நகைச்சுவை. ஆனால் இதை நகைச்சுவை என்றும் சொல்வதற்கில்லை. நண்பர் ஒருவர் இதே ஆங்கில மின்னஞ்சலை இன்னும் நன்றாய்த் தமிழ்ப்படுத்தியிருந்தார்.
இங்கே பாருங்களேன்.

ந. உதயகுமார் said...

அன்புள்ள முத்து,

// ஆனால் இதை நகைச்சுவை என்றும் சொல்வதற்கில்லை.//

முத்துப் போன்ற சிந்தனை! வாழ்க!!

// நண்பர் ஒருவர் இதே ஆங்கில மின்னஞ்சலை இன்னும் நன்றாய்த் தமிழ்ப்படுத்தியிருந்தார்.
இங்கே பாருங்களேன். //

நண்பர் நகைச்சுவைத் துணுக்கை சில மாற்றங்களுடன் தமிழ்ப் படுத்தியிருக்கிறார். நன்றாகச் செய்திருக்கிறார்.

நான் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு பாத்திரங்களின் உணர்வுகளையும் செய்கைகளையும் முழுமையாகத் தமிழ்ப் படுத்த முயன்றிருக்கிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

- உதயகுமார்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

என்னவோ நகைச்சுவை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டீர்களானால் சரிதான். ஆனால் எனக்கென்னவோ இது கொஞ்சம் இடருகிறது. 'மாது' விதயத்தில் ஒழுக்கமாக இருத்தலே போதும் - மது விதயத்தில் ஆள் எப்படி இருந்தாலும் சரி தான் என்கிற தவறான கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது.

ந. உதயகுமார் said...

// 'மாது' விதயத்தில் ஒழுக்கமாக இருத்தலே போதும் - மது விதயத்தில் ஆள் எப்படி இருந்தாலும் சரி தான் //

அப்படி இந்தக் கதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. நீங்கள் சொன்னது போல் சில விஷயங்களை படிப்பவர் கற்பனைகளுக்கே விட்டு விடுகிறது.

- நான் இந்தக் கதையில் பார்க்கும் மனிதப் பண்புகள் மற்றும் மனிதத் தொடர்புகளை கையாளும் திறமைகள்:

- மைதிலி தன் கணவனின் குறையால் பாதிக்கப் பட்டாலும் அதனை ஒதுக்கி விட்டு அவன் நிறைகளை சீர் தூக்கிப் பார்க்கும் முதிர்வு

- மனிதன்(ள்!) இடறுவது சகஜம். அப்படி இடறும் போது அவனை வசைபாடாமல், ஒதுக்கி வைக்காமல், அன்பினால் கட்டிப் போட நினைத்த மைதிலியின் பண்பு

- அவளது சந்தோஷத்தை மறைத்து வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகக் காட்டும் பெருந்தன்மை.

- முரளிக்கு மனைவியின் மேலுள்ள அன்பும், விசுவாசமும், அவள் கருத்துக்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையும்.

- இளம்பெண் மைதிலி தன் ஆணவத்தை (ego) மட்டுப் படுத்தியதால் கணவனிடம் எழ வாய்ப்புள்ள 'இவளென்ன சொல்வது. நானென்ன கேட்பது' என்ற ஆணவத்தை மட்டுப் படுத்திய திறமை.

- முரளிக்கு எதிர்காலத்தில் இத்தகைய தவறு செய்யக் கூடிய தருணங்களில் அவன் தவறான பாதைக்கும் போகாமல் செய்ய இந்த நிகழ்வு ஏற்படுத்தப் போகும் இயற்கைத் தடைகள் (natural barriers)

- உதயகுமார்

Blog Archive