Friday, June 24, 2005

புகை பிடிக்கும் காட்சிகளுக்குத் தடை

முன்கூட்டியே ஒரு தற்காப்புச் செய்தி: இதை எழுதிய நான் புகை பிடிக்கும் பழக்கமுள்ளவன் அல்லன்.

அக்டோபர் 2. காந்தி பிறந்த நாள்.

2005, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரைகளில் புகை பிடிக்கும் காட்சிகளைத் தடை செய்யப் போகிறார்களாம். புகை பிடிக்கும் பழக்கத்தால் மனிதனுக்கு உயிர்க்கொல்லி வியாதி வரும் என்று மருத்துவம் உறுதியாகக் கூறுவதால் இந்தியக் குடிமகனை புகையிலை அரக்கனிடமிருந்து காக்கவே அரசிடமிருந்து இந்த நடவடிக்கை.

இந்த தடை அமலுக்கு வரும் போது சிகரெட் பிடிக்கும் வில்லன் அல்லது சிகரெட்டை வைத்து மானரிஸம் செய்யும் கதாநாயகனைச் சித்தரிக்கும் பெரும்பாலான பழைய படங்களைத் திரையிட முடியாது போகும்.

தடை அமலுக்கு வரும் முன்னரே அண்ணன் ரஜினி, அவரது சந்திரமுகியை, இந்தத் தடைக்கு ஆதரவாக ஒரு முன்னுதாரணமாகவே படமாக்கினார் என்று கேள்வி.

சென்னையில் நான் பார்த்த வரையில் இளைஞர்களிடையே புகை பிடிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. புகை பிடிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கையில் ஆயிரத்திற்கு ஐம்பது பேருக்கும் குறைவாகத்தான் இருப்பார்கள் என்பது என் சொந்தக் கணிப்பு. இந்திய நகரங்களில் இளைஞிகள் புகைபிடிப்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சந்தேகம் இருப்பவர்கள் ஸ்பென்ஸர் ப்ளாசாவிற்கு வாரக் கடைசியில் போய்ப் பாருங்கள். பணியிடங்களில் இருந்து வரும் சமூகச் சீர்கேட்டுப் பங்களிப்புக்களில் தகவல் தொழில் நுட்பத் துறையின் உபதுறையான BPO துறையின் பணித் தன்மையிலிருந்து வரும் பங்களிப்பு இது.

இனிமேல் புகைபிடித்ததால் நோய்வாய்ப்பட்ட இளைஞி கதாபாத்திரத்தை சித்தரிக்க இயக்குனர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு வேளை ஒரு புத்தம் புது மலரின் மேல் புகை பட்டுப் பட்டு அது சுருங்கி வாடிப் போவதைக் காட்டி அதற்கு அடுத்த காட்சியில் மருத்துவமனையில் லொக்... லொக்... என்று இருமியபடி படுத்திருக்கும் இளைஞியைக் காண்பிப்பார்களோ?! தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். கவலையில்லை. இயக்குனருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம்.

காந்தி அஹிம்சையைப் பற்றிக் கூடச் சொன்னார். ஆனால் இன்று சண்டைக் காட்சி என்ற பெயரில் காட்டப் படும் ரத்த விளாறுகள் ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு மன வியாதியை உண்டாக்குகிறதே? அதனால் அடுத்த வருடம் காந்தி பிறந்த நாளில் சண்டைக் காட்சிகளை கண்டிப்பாகத் தடை செய்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

பெண்ணை வியாபாரப் பொருளாக்கி, பெண்மையை வக்கிரமாக, விரசமாகச் சித்தரிக்கும் காட்சிகள் இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு வக்கிரம் என்ற வியாதியை உண்டாக்குவதால் அதற்கு அடுத்த வருடம் பெண்களையே திரையில் காட்டக் கூடாது என்று கண்டிப்பாக வரத்தான் போகிறது... பார்த்துக் கொண்டேயிருங்கள்.

அதெல்லாம் சரி! இந்தியாவில தயாரிக்கப் படாத பிறமொழிப் படங்களை... குறிப்பாக ஆங்கிலப் படங்களை இனிமேல் எப்படி இங்கே திரையிடப் போகிறார்கள். இப்போதெல்லாம் ஹாலிவுட்டில் இந்தியாவை மிகப் பெரும் சந்தையாகக் கருதி பெரிய பட்ஜெட் படமெல்லாம் ஒரே நாளில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியிட ஆரம்பித்திருக்கிறார்களே!!

2 comments:

NambikkaiRAMA said...

சாரே! வெறும் காட்சிக்கு தடைவிதிக்காம சிகரெட் விற்பனைக்கே தடை விதிச்சா நம்ம அரசாங்கம் நிறைவேறும்னு சொல்லலாம். ஆனா! பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டா எப்படி? உங்க கருத்தை சொல்லுங்கோ?

ந. உதயகுமார் said...

அன்புள்ள பாஸிடிவ் ராமா,

// வெறும் காட்சிக்கு தடைவிதிக்காம சிகரெட் விற்பனைக்கே தடை விதிச்சா //

அரசு இவ்வளவு நாள் வாளாவிருந்து விட்டு இப்போது இப்படிச் சொல்லவில்லை.

- சிகரெட்டின் மீது வரிச்சுமையை எக்கச் சக்கமாக ஏற்றினார்கள். அதனால் சிகரெட் விலை உயர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை யோசிக்கச் செய்யும் என்று நினைத்தார்கள்.

- சிகரெட் பெட்டிகளின் மேல் "புகையிலைப் பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு" என்று பெரிய எழுத்தில் அச்சடிக்கச் சொல்லி தயாரிப்பவர்களைக் கட்டாயப் படுத்தினார்கள்

- பத்திரிக்கைகளிலும், விளம்பரங்களிலும், திரையரங்குகளிலும் சிகரெட் விளம்பரத்திற்குத் தடை விதித்தார்கள்.

இப்போது வரப் போகும் தடைக்கு அரசு சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?

பத்திரிக்கை, டிவி, திரையரங்குகளில் விளம்பரம் செய்ய இயலாத சிகரெட் தயாரிப்பாளர்கள் இப்போதெல்லாம் நடிகர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் எக்கச் சக்க பணம் கொடுத்து பிரபலமான கதாநாயகர்கள் திரையில் தங்களுடைய நிறுவனத்தின் சிகரெட்டை உபயோகிக்குமாறு காட்சியமைக்கச் சொல்லுகிறார்களாம்.

இது குறிப்பாக சிறுவர்களை மிகவும் பாதித்து அவர்களை புகைபிடிக்கும் பழக்கத்தை நோக்கித் தள்ளுகிறதாம்.

திரையில் அமிதாப் பச்சன் தோன்றி குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சொன்ன பிறகு இந்தியாவில் போலியோ தடுப்புத் திட்டத்திற்கு தாய்மார்களின் அமோக ஆதரவு கிடைத்தது. அரசின் பார்வையில் திரையில் பிரபலங்களின் செய்திகள் சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் சமூக அழிவைத் தரும் செய்திகளை திரையில் தருவதைத் தடை செய்வது சரி.

புகையிலைத் தொழில் இன்றைய மதிப்பில் 30000 முதல் 35000 கோடி வியாபாரம் செய்யும் ஒரு தொழில். இந்தத் தொழிலில் விவசாயிகள் முதல், பெட்டிககடை விற்பனை செய்பவர்கள வரை பல்லாயிரக் கணக்கானவர்கள் வயிறு பிழைக்கிறார்கள். அவர்களுக்கு மாற்றுத் தொழில் ஒன்றை அமைத்துக் கொடுக்காமல் புகையிலைத் தொழிலை ஒழிக்க முடியாது.

திரையில் புகை பிடிப்பதைத் தடை செய்த அரசு, புகையிலை மெல்லும் ஆயாவை ஏன் தடை செய்யவில்லை?

குதிரையை தண்ணீர் வரை வழி நடத்திச் செல்லலாம். குடிப்பதும் குடிக்காததும் அதன் விருப்பம். எத்தனைதான் முயன்றாலும் குதிரையை நீங்கள் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. அதே போலத்தான் வயதானவனுக்கு சிகரெட் குடிக்காதே என்று அறிவுரை சொல்லலாம். குடிக்காமல் இருப்பதோ அல்லது தொடர்ந்து குடிப்பதோ அவரவர் விருப்பம். உள்நாட்டு விற்பனையை ஒழித்தால் குருவிகள் சிங்கப்பூர் அல்லது துபாயிலிருந்து கடத்தி வந்து விற்று கறுப்புச் சந்தை சக்கைப் போடு போடும். தேவையா?

அயல் நாட்டில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. எந்த கடையில் சிகரெட் கேட்டாலும் வயதை உறுதி செய்து கொள்ள அடையாள அட்டை கேட்பார்கள். இங்கேயும் அந்த்ச் சட்டம் இருக்கிறது.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே இந்தியாவில் ஒரு சிறுவன் கடையில் போய் சிகரெட் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். என் தாத்தாவிற்காக நான் வாங்கப் போய் என் அப்பாவிடம் கடைக்காரர் போட்டுக் கொடுத்து விட்டார்.

இன்று? எந்தக் கடைக்காரராவது அப்படிச் செய்தால் அவரைப் 'பிழைக்கத் தெரியாதவர்' என்று அவர் மனைவியே முத்திரை குத்தி விடும் அபாயம் உள்ள சமூகம். சட்டங்களை லஞ்சம் பெறும் வாய்ப்புகளாகப் பார்க்கும் அரசு இயந்திரங்கள்.

இதையெல்லாம் சரி செய்ய அரசால் முடியாது. சமூகத்தில் விழிப்புணர்வு வர வேண்டும். அதைக் கொண்டு வரத் திணறிக் கொண்டிருக்கும் அரசு தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

- உதயகுமார்

Blog Archive