Thursday, June 16, 2005

செயற்கை கருத்தரிப்பில் புதிய முறை

PGD - Preimplantation Genetic Diagnosis - அதாவது கருப்பைக்குள் பொருத்தும் முன் கருவின் ஆரோக்கியத்தை பரிசோதித்தறியும் புதிய முறை.

In Vitro என்றால் "பரிசோதனைச் சாலையில்" (in the lab) என்று பொருள். செயற்கைக் கருத்தரிப்பு (In Vitro Fertilization or IVF) செய்யும் போது முதலில் ஹார்மோன்கள் மூலம் ஒரு பெண்ணின் சூல் பையைத் (Ovary) தூண்டி அதிலிருந்து சுமார் 12 முட்டைகளை விடுவித்து, அவற்றைக் கருப்பைக்கு வெளியே எடுக்கிறார்கள். ஒவ்வொரு முட்டையிலும் தலா ஒரே ஒரு விந்தணுவைச் செலுத்தி அந்த முட்டைகளை கருப்பைக்கு வெளியே கருத்தரிக்க வைக்கிறார்கள்.

சூலுற்ற முட்டைகளில் உள்ள திசுள் இரண்டு இரண்டாகப் பிரிந்து பெருக ஆரம்பிக்கும் என்பது நாம் அறிந்ததே. மூன்று நாட்கள் இப்படி வளர விடப்படும் கருவில் ஆறு முதல் எட்டு திசுள்கள் இருக்கும்.

இத்தகைய ஆறு முதல் எட்டு திசுள்கள் உள்ள நிலையை அடைந்த சினை முட்டையிலிருந்து நுண்ணிய உறிஞ்சும் குழாய் (suction pipette) மூலம் ஒன்று அல்லது இரண்டு ப்ளாஸ்டோமியர் (blastomere) எனப்படும் திசுள்களை வெளியே எடுக்கிறார்கள்.

PGD முறையில் இந்தத் திசுள்களில் மரபுச் செய்தி கோளாறுகள் அல்லது க்ரோமோஸோம் எண்ணிக்கைத் தவறுகள் இல்லாமல் இருக்கிறதா என்று பரிசோதித்து அறிந்து கொண்ட பின்னரே கருக்களை பெண்ணின் கருப்பைக்குள் பொருத்துகிறார்கள்.

சினைமுட்டையில் இரண்டு முதல் நான்கு திசுள்கள் இருக்கும் நிலையில் அவற்றில் இருந்து திசுள்களை எடுத்தால் சினைமுட்டை மேலும் வளருவதில்லை. எட்டு திசுள்களுக்கு மேலுள்ள முட்டையில் திசுள்களின் அடர்த்தி அதிகரித்து விடுவதால் ஒன்று அல்லது இரண்டு திசுள்களை மட்டும் பிரித்து எடுப்பது கடினம்.

திசுள்களில் க்ரோமோஸோம்கள் ஜோடிகளாக இல்லாமல் எண்ணிக்கை பிசகி இருந்தால் டவுன் ஸிண்ட்ரோம் (down syndrome), கருக் கலைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஆயிரத்தில் ஆறு குழந்தைகள் டவுன் ஸிண்ட்ரோமுடன் பிறக்கிறார்கள். 60% கருக்கலைவுகள் க்ரோமோஸோம் சிக்கல்களால் ஏற்படுகின்றன. PGD முறையில் க்ரோமோஸோம் எண்ணிக்கை சரியாக உள்ள கருக்களை கண்டறிந்து கருப்பைக்குள் பொருத்துவதன் மூலம் இத்தகைய குறைபாடுகள் இல்லாமல் ஆரோக்கியமாகக் குழந்தை பிறக்க வழி செய்யப் படுகிறது.

மரபு வழி வரும் க்ரோமோஸோம் கோளாறுகளால் கருத்தரித்திருக்கும் ஆண் மற்றும் பெண் கருக்களில் ஏதோ ஒரு பாலைச் சேர்ந்த கருக்கள் மட்டுமே பாதிக்கப் பட்டிருக்கும். க்ரோமோஸோம் கோளாறுகளால் X ஸிண்ட்ரோம், ஹெமோ·பிலியா, ரெட் (rett) ஸிண்ட்ரோம் போன்ற கோளாறுகளுடன் ஆயிரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். PGD முறையில் ஆரோக்கியமற்ற ஆண் அல்லது பெண் கருக்களை கண்டறிந்து ஒதுக்கி விட்டு ஆரோக்கியமான கருக்களை மட்டும் கருப்பைக்குள் பொருத்துவது சாத்தியம்.

எதிர்காலத்தில் PGD முறையில் உன்னதம் அதிகரிக்கும் போது, பிறந்த பின் புற்றுநோயால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியங்களைத் தாங்கிய கருக்களை கண்டறிந்து ஒதுக்கி விடும் விந்தைகள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

பிறக்கப் போகும் குழந்தையின் பாலை முன்கூட்டியே கண்டறிந்து தேர்ந்தெடுக்கக் கூறிய சாத்தியம் கொண்ட PGD முறைக்கு எதிர்ப்புகள் பலமாகக் கிளம்பிய வண்ணம் உள்ளன. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் சட்டம் அனுமதித்திருக்கும் இந்த முறை ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்விட்ஸர்லாந்து முதலிய நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கிறது.

உலகில் ஏற்கெனவே சுமார் ஆயிரம் குழந்தைகள் PGD முறையில் பிறந்து விட்டனர். PGD முறைக்காகும் செலவு IVF செலவிற்கு மேல் சுமார் 3000 முதல் 5000 டாலர்கள் மட்டுமே!

2 comments:

மாயவரத்தான் said...

சார்... நீங்க ஏதோ தவறான முகவரிக்கு வந்து பதிவு போடுறீங்க போல..! இது 'தமிழ்மணம்' சார்..!!! சோடா பாட்டில், ஜாதி சண்டை, தனி மனித தாக்குதலுக்கான ஒரே இடம்!!

மாயவரத்தான் said...

ஐயோ...தமிழ்மணம்னு பொதுவா சொல்லித் தொலச்சிட்டேனா..?! ஊருலே செட்டில் ஆகிட்ட காசி அண்ணாத்தே... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. கோச்சுக்காதீங்க!

Blog Archive