Wednesday, June 15, 2005

வயிற்றுக்குள் வீங்கும் மாத்திரைகள்

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மாத்திரைகளை மிகச் சிறிய அளவிலேயே தயாரிக்கிறார்கள். விழுங்கும் போது தொண்டைக் குழிக்குள் இலகுவாகச் செல்ல வேண்டியிருக்கும் காரணத்தால் மாத்திரைகள் இப்படித் தயாரிக்கப் படுகின்றன. இதற்காக மாத்திரைகளுக்குள் மருந்து மிக அடர்த்தியாக அடைக்கப் படும்.

மாத்திரையின் சிறிய அளவு அது தொண்டைக்குள் இலகுவாக இறங்க உதவினாலும் அந்தச் சிறிய அளவு தேவையற்ற பக்க விளைவுகளை சில சமயம் ஏற்படுத்தும்.

ஒரு மாத்திரை கொண்டு செல்லும் மருந்துகள் இரைப்பையின் மூலம்தான் உடலுக்குள் இழுக்கப் பட வேண்டும். அப்படி இரைப்பை மருந்தை முழுவதுமாக உள்ளிட்டுக் கொள்ள மாத்திரை சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை இரைப்பைக்குள் இருக்க வேண்டும்.

ஆனால் மருந்தின் அடர்த்தி மிகுந்து அளவில் சிறியதாக இருக்கும் மாத்திரைகள் சில சமயம் இரைப்பையில் தங்காமல் சிறுகுடலுக்குள் சென்று விடும். அதனால் இரைப்பையால் மருந்துகளை சீராக உடலுக்குள் கிரகிக்க முடியாது. ஆண்டை பயாடிக் (anti-biotic) வகை மருந்துகள் குடலுக்குள் சென்றால் அவை இயற்கையாக அங்குள்ள நுண்ணுயிர்களையும் (normal bacteria) அழிக்குமாம். இதனால் வயிற்றுப் போக்கு, வாந்தியுடன் கூடிய மயக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படக் கூடும்.

டெபோமெட் (Depomed) என்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் இரைப்பைக்குள் சென்றவுடன் அளவில பெரியதாகும் தன்மையுடைய மாத்திரைகளைக் கண்டு பிடித்திருக்கிறது. இரைப்பையிலுள்ள திரவங்கள் இந்த மாத்திரையின் மேல் பட்டவுடன் அந்த மாத்திரையிலுள்ள புது வகை பாலிமர் உப்பத் தொடங்கும். மாத்திரை சிறுகுடலுக்குள் எளிதில் இறங்காத அளவிற்கு மாத்திரையின் அளவு சிறிது நேரத்தில் உப்பி விடும்.

ஆகவே மாத்திரை இரைப்பைக்குள் கரையும் நேரம் அதிகரித்து மாத்திரையிலுள்ள மருந்த்துகள் சீராக உடலில் கலக்க வழி செய்யப் படுகிறது.

முதலில் சர்க்கரை வியாதிக்கு நிவாரணமளிக்கும் மருந்தை இந்த புதிய தொழில்நுட்பத்துடன் டெபோமெட் வெளியிட இருக்கிறது.

மெதுவாகவும் சீராகவும் உடலில் கலக்கும் தன்மையுள்ள புதிய மாத்திரையால் இனி சர்க்கரை வியாதியால் அவதிப் படுபவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மற்றும் மூன்று முறை கூட மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிக்கப் படுவர். அவர்கள் டெபோமெடின் புதிய மாத்திரையை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

இந்த வகை மாத்திரைகளை அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 2005, ஜூன் மூன்றாம் தேதி அங்ககரித்து விட்டது. விரைவில் மாத்திரைகள் அமெரிக்கச் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Blog Archive