உபசரிப்பதை ஒப்பந்தக்காரர்களுக்கு விட்டு விடும் தன்மை நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நகரஙகளில் வேலைப் பளு அதிகமுள்ளவர்கள் முகூர்த்த நேரத்திற்கு திருமணக் கூடங்களுக்கு வரமுடியாமல் போகும் போது, அவர்கள் மணமக்களை வாழ்த்தும் ஒரு வாய்ப்பளிக்கவே திருமண வரவேற்பு என்ற ஒரு நிகழ்ச்சி உருவாக்கப் பட்டது என்பது என் எண்ணம்.
உற்றார், சுற்றம், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ந்திருந்து மணமக்களை வாழ்த்தி, பிறகு சேர்ந்து விருந்துண்ணும் ஒரு நிகழ்ச்சி இது.
முன்னாளில் திருமண நாளன்று மாலையோ அல்லது அடுத்த விடுமுறை நாளிலோ நடத்தப் பட்ட இந்த வைபவம், இப்போதெல்லாம் திருமணத்திற்கு முதல் நாளே நடத்தப் படுகிறது.
முன்னாளில் சிறந்த வித்வான்கள் மற்றும் கலைக் குழுவின் நிகழ்ச்சிகளை வரவேற்பு வைபவத்தில் அமைத்திருப்பார்கள். வரவேற்பு வைபவத்திற்கு வருபவர்கள் அனுபவம் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும், அவர்கள் இந்த வைபவத்திற்கு நேரம் செலவிட மேலும் ஒரு ஊக்கியாகவும் இத்தகைய கலை நிகழ்ச்சிகள் அமைக்கப் படும்.
விருந்தோம்பலில் குறையில்லாமல் இருக்க மணமக்களின் பெற்றோர் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து அவர்களுக்கு "ஏன் இங்கு வந்தோம்" என்ற எண்ணம் ஏற்படாத வகையில் சிறந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வார்கள்.
இன்று பெற்றோருக்கு மணமக்களுடன் சேர்ந்து வீடியோ படம் எடுத்துக் கொள்வதிலேயே முழு நேரமும் கழிந்து விடுகிறது.
ஒப்பந்தப் பணியாளர்கள் விருந்தோம்பல்தான் சாப்பாட்டுக் கூடங்களில் நடக்கிறது. இவர்கள் சுற்றமா, நட்பா, தெருவில் போகும் எவனோ ஒருவனா என்று தெரியாமல் வந்தவர்களுக்கெல்லாம் இயந்திர கதியில் விருந்தோம்புகின்றனர்.
இசை நிகழ்ச்சி என்ற பெயரில் ஏதோ பெயர் தெரியாத குழுவினர் காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டிருக்க், வந்திருப்போர் இசைக்குழுவினரின் இரைச்சலையும் மீறிக்கொண்டு அரட்டை அடிப்பது கண்கொள்ளாக் காட்சி.
நேற்று சென்ற ஒரு வரவேற்பில், இசைக் குழுவினை காலிக் கூடத்திற்குக் கத்திக் கொண்டிருந்தனர். வந்திருந்தவர் அனைவரும் உணவுக் கூடத்தில் இருக்க, அங்கே இசை என்ற அந்தக் கூச்சல் சிறிதளவும் கேட்கவில்லை.
இந்த லட்சணத்தில், இப்படி ஒரு வரவேற்பை நடத்தாவிட்டால் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக காசை வீசியெறிந்து விட்டு வரவேற்பு என்று இன்றைய பெற்றோர்களால் நடத்தப் படும் கேலிக்கூத்துகள் நாட்டிற்குத் தேவையா?
நாம் சிந்திக்காமல் செம்மறியாடு போல் செயல் படுவதால் அடுத்த தலைமுறக்கு என்ன செய்தி சொல்லிக் கொண்டிருக்கிறோம்?
6 comments:
//இன்று பெற்றோருக்கு மணமக்களுடன் சேர்ந்து வீடியோ படம் எடுத்துக் கொள்வதிலேயே முழு நேரமும் கழிந்து விடுகிறது. //
நல்ல பதிவு!!!!
இப்பெல்லாம் கல்யாணம்( தாலி கட்டுறது) நடக்கரதுக்கு மொத நாளே, பையனையும் பொண்ணையும்
ஒண்ணா உக்காரவச்சு, மாலை மாத்தி வரவேற்பு நிகழ்ச்சி நடந்துடுது!!!!
மாப்பிள்ளை வரவேற்பு முடிஞ்சு, அன்னைக்குச் சாயந்திரம் கல்யாண மண்டபம் ச்சும்மாக் கிடக்கேன்னுட்டு
இப்படி நடத்திடறாங்களாம்!
என்னாத்தைச் சொல்ல்?
/////ஒப்பந்தப் பணியாளர்கள் விருந்தோம்பல்தான் சாப்பாட்டுக் கூடங்களில் நடக்கிறது. இவர்கள் சுற்றமா, நட்பா, தெருவில் போகும் எவனோ ஒருவனா என்று தெரியாமல் வந்தவர்களுக்கெல்லாம் இயந்திர கதியில் விருந்தோம்புகின்றனர்.///
சரியா சொன்னீங்க ..
இப்படி தான் எனக்கு தெரிஞ்ச ஒரு கல்யாணதுல.. ஒரு 50 பேர் வந்து சாப்பிட்டு போனாங்க..
ஒப்பந்த பனியாளர் நல்லா கவனிச்சாங்க, அப்புறம் தான் தெரிஞ்சது அந்த கும்பல் பக்கத்து ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டியவங்கனு... !! :)
/////ஒரே காரணத்திற்காக காசை வீசியெறிந்து விட்டு வரவேற்பு என்று இன்றைய பெற்றோர்களால் நடத்தப் படும் கேலிக்கூத்துகள் நாட்டிற்குத் தேவையா?////
சிலர் , ஏன் பலர் கடன் வாங்கி காசை வீசுறது தான் கொடுமை !!
///வந்திருந்தவர் அனைவரும் உணவுக் கூடத்தில் இருக்க,///
அது சரி, நீங்க எங்க இருந்தீங்க?? :)
நல்ல பதிவு... !!
வீ .எம்
நல்லாச் சொன்னீங்க போங்க.
// வீடியோ படம் எடுத்துக் கொள்வதிலேயே முழு நேரமும் கழிந்து விடுகிறது. //
இந்த அர்த்தமில்லாத வீடியோ மோகத்தைப் பற்றியும் இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
- சாப்பிடுவதை வீடியோ படம் பிடிக்கும் தர்மசங்கடத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் கட்டாயம்
- மணமக்களுக்கு பரிச்சயம் இல்லாத பெற்றோரின் நண்பர்கள் மணமக்களை வாழ்த்த வரிசையில் நின்று அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது, யார் எவர் என்று (அறிமுகப் படுத்த ஆளில்லாததால்) தெரியாமல், எவனோ வந்தான் கையைக் கொடுத்தான் என்று கடமைக்கு அவர்களுடன் வீடியோ போஸ் கொடுக்கும் மணமக்கள். வழிந்து கொண்டே பக்கத்தில் நிற்கும் வந்தவர்கள்...
இதில் வீடியோவிற்கு போஸ் கொடுக்கும் விஷயத்திலிருந்து விருப்பமில்லாவிட்டால் கூட தப்பிக்க முடியாது.
//சிலர் , ஏன் பலர் கடன் வாங்கி காசை வீசுறது தான் கொடுமை !!//
இப்போதெல்லாம் அழைப்பிதழ்களில் நூதனங்கள் பல வந்திருக்கின்றன. ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் அழைப்பிதழ்கள் சந்தையில் கிடைக்கின்றன.
வரும் விருந்தினருக்கு இடம், விலாசம், தேதி, நேரம், மணமக்கள் பெயர்களை சடுதியில் நினைவுறுத்தவே அழைப்பிதழ்.
இதற்கு ஒரு அழைப்பிதழுக்கு 50 ரூபாய் செலவழிப்பதில் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் அப்படிச் செய்வதில்தான் பெருமையும் மதிப்பும் என்று நம்புபவர்களும்; இப்படிச் செய்தால்தான் நம்மையும் மதிப்பார்கள் என்று செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
உதயகுமார்,
அப்படியெல்லாம் சொல்லமுடியாது. வீடியோவும் முக்கியம்தான். அது ஒரு வாழ்நாள் முழுக்க ஞாபகத்துக்காக செய்வது.
கவனிக்க வில்லை கவனிக்கவில்லை என்று அடிச்சுக்கிறீங்களே, ஏன் நீங்க அவங்க குடும்பத்துக்கு உதவியாக எல்லோரையும் கூப்பிட்டு உபசரிச்சிருக்கூடாது. நீங்க இது ல பெஸ்ஸிமிஸ்டிக்கா நடந்துகிட்டீங்க அல்லது யோசிக்கிறீங்க. :-(
நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் கார்த்திக் ராமாஸ் அவர்களே. வரவேற்கிறேன். நண்பர், உறவினர் வைபவங்களுக்குச் செல்லும் போது அனைவரும் முற்போக்கு மனப்பான்மையுடன் தம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். இதில் துளியும் நமக்கு எதிர்ப்பில்லை. இதை முடிந்த வரை செய்யும் மனப்பான்மை உள்ளவன் நான்.
// அப்படியெல்லாம் சொல்லமுடியாது. வீடியோவும் முக்கியம்தான். அது ஒரு வாழ்நாள் முழுக்க ஞாபகத்துக்காக செய்வது.//
வீடியோ முக்கியமா இல்லையா என்பதல்ல கருத்து. வீடியோ தேவைதான். ஆனால் வந்திருப்பவனை அறிமுகப் படுத்துவது முக்கியமில்லை, அவனை கவனிப்பது முக்கியமில்லை, பெருமையாக வீடியோவின் முன் நிற்பதுதான் முக்கியம் என்ற போக்குதான் இங்கு ஆட்சேபிக்கப் படுகிறது.
எத்தனை திருமணங்களில் வீடியோக்காரனின், புகைப்படக்காரனின் பின்னழகை மட்டும் திருமணம் நடந்த நேரம் முழுவதும் தரிசித்து அவன் மேல் ஆசிர்வாதத்தைத் தெளித்து விட்டு வந்திருக்கிறீர்கள். யோசித்துப் பாருங்கள். பெண் வீட்டுக்காக எடுப்பவன், மாப்பிள்ளை வீட்டுக்காக் எடுப்பவன், தன்னார்வ மிக்க உறவினர்கள் என்று ஒரு அரணையே அமைத்து படம் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதற்குத் தீர்வாக அரங்கமெங்கும் திரை அமைத்து அதில் வீடியோ காட்டுவார்கள். அதைப் பார்க்க ஏன் அரங்கத்திற்குச் செல்ல வேண்டும். வீட்டிலேயே வாங்கிப் பார்த்துக் கொள்ளலாமே...
//அவங்க குடும்பத்துக்கு உதவியாக எல்லோரையும் கூப்பிட்டு உபசரிச்சிருக்கூடாது//
அதற்கு வருபவர் அனைவரும் பரஸ்பரம் பெற்றோருக்கும் நமக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமக்கும் மணமக்களின் பெற்றோருக்கும் நெருக்கம் அதிகம் வேண்டும். அந்த நெருக்கத்தின் அளவு வருபவர் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நமக்கும் ஒப்பந்தக் காரனுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அதிகப் பிரசங்கி என்ற பெயரும் கிடைக்கும். ஏதாவது தவறாகிப் போனால் நன்றாய் நடந்திருக்க வேண்டிய்தை நாம் புகுந்து கெடுத்தோம் என்ற குற்ற உணர்ச்சிதான் மிஞ்சும்.
Post a Comment