Tuesday, June 07, 2005

தொழில் கல்வி மேம்பாட்டில் தொலைநோக்கு..

தமிழகத்தில் தொழில் கல்வியில் சேரும் தகுதியை நிர்ணயிக்கும் பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப் பட்டிருக்கிறது. இதைப் பலர் வரவேற்றிருக்கிறார்கள். சி.பி.எஸ்.ஈ முறையில் படிக்கும் மாணவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள்

தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தொழில் கல்விக் கூடங்களில் சேர்க்கப் பட வேண்டும். அதனால் இந்த நடவடிக்கை என அரசு விளக்கம் கூறியிருக்கிறது.

தொழில் கல்வி (பொறியியல் கல்வி) படிக்க முக்கியத் தகுதி, புத்தகத்தில் இருப்பதை படித்து ஒப்பிப்பதல்ல. இன்றைய மெட்ரிகுலேஷன் கல்வி மற்றும் தேர்வு முறை மாணவர்களிடம் இந்தத் திறமையைத்தான் வளர்க்கிறது. சுயமாகச் சிந்திக்கும் திறமையை அல்ல. இது பொதுவாக நிலவும் ஒரு கருத்து.

இந்தியாவில் தொழில் கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் மூன்று வகைப் படும்:
  • மாணவர்களுக்கு அடிப்படைக் கொள்கைகள், சிந்திக்கும் திறன், செயல் திறன் முதலியவற்றைப் போற்றுவிக்கும் கல்லூரிகள்
  • பழங்காலத்தில் நல்ல முறையில் இயங்கிப் பெயர் பெற்று அந்த பெயரை வைத்து நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கும் கல்லூரிகள்
  • கல்வியைக் கடைச் சரக்காக்கி லாபம் பார்க்கும் நோக்கத்தில் மட்டுமே நடத்தப் படும் கல்லூரிகள்.
இதில் முதல் வகைக் கல்லூரிகளில் படிப்பவர்களில் 90 சதவிகிதம் மாணவர்கள் இந்தியாவில் தங்குவதில்லை என்பது உண்மை. இந்த வகைக் கல்லூரிகளுக்கு உலக அளவில் இன்றும் பெருமளவில் அங்கீகாரம் இருப்பதும் உண்மை. ஆக, நாம் தொழில் கல்வி பயிற்றுவிக்கத் தெரியாதவர்கள் அல்ல.

ஒரு மாணவன் தொழில் வல்லுனராக மாற அத்தகைய கல்வியில் முதலில் மன ஈடுபாடு (aptitude), அடிப்படைக் கருத்துக்களைப் ஆழ்ந்து புரிந்து கொள்ளும் மூளைத் திறன், அக் கருந்துகளை உலகத்தின் தினசரிப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் உபயோகிக்கத் தெரிந்து கொள்ளுதல், மற்றும் யோசனையில் உள்ள திட்டங்களை செய்லாக்கும் திறன் ஆகிய திறன்கள் முக்கியம்.

இத்தகைய தொழில் வல்லுனர்களை நாட்டில் உருவாக்க அரசு செய்ய வேண்டிய காரியங்கள் பல. அவற்றில் என் அறிவுக்குப் பட்ட சில:
  • புதிய தொழில் நுட்பங்களில் ஆய்வுகள் நடத்த உலகத் தரமுள்ள ஆய்வுச் சாலைகள் அமைத்து, திறமையுள்ள மாணவர்களுக்கு அந்த ஆய்வுச் சாலைகளில் பயிற்சியும், ஆய்வுகளில் பங்கும் அளித்தல்
  • நாட்டில் உலக நாடுகளுக்கு ஈடாக பொருள் ஈட்டக் கூடிய வேலை வாய்ப்புகள் தரும் தொழில்கள் வளர வகை செய்தல்
  • சிறந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும், கல்விக்கூடங்களையும் தனிப்படுத்தி நாட்டின் முன்னுதாரணங்களாகக் காட்டும் வழிமுறைகளிள் முதலீடு செய்தல்
  • உலக அளவில் தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்தியா போட்டியிடும் அளவிற்கு தேவையான தொழில்நுட்ப இறக்குமதிகளை அனுமதித்தல்
    தொழில் கல்வியில் மன ஈடுபாடும், வேண்டிய திறமைகளும் உள்ள மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்குக் குறைந்த செலவில் சிறந்த தொழில் கல்வி கிடைக்க ஆவன் செய்தல்
இதையெல்லாம் விட்டு விட்டு உருத் தட்டி மதிப்பெண் பெறும் திறமையை அங்கீகரிக்கும் புதிய அரசுத் திட்டத்தில் தொழில் கல்வியை மேம்படுத்தும் தெளிவு மிக்க தொலைநோக்குப் பார்வை புலப்படவில்லை.

No comments:

Blog Archive