Thursday, May 19, 2005

அகா டீஜ்

இது வ்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிக்கும் பெயர். தென்னிந்தியாவில் இதே நாளில் 'அக்ஷய திருதயை'.

'அகா டீஜ்' அன்று ஒவ்வொரு வருடமும் மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாகாணங்களில் ஆயிரக் கணக்கில் குழந்தைத் திருமணங்கள் இக்காலத்திலும் நடத்தி வைக்கப் படுகின்றனவாம்.

மத்தியப் பிரதேசத்தில் இதை எதிர்த்துக் கேள்வி கேட்ட குழந்தைகள் நலப் பணி செய்யும் சகுந்தலா வெர்மா என்ற பெண்மணியை வீடு புகுந்து ஒரு கத்தியால் அவர் கையைத் துண்டிக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச முதல்வர், குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க முடியவில்லை என்று இயலாமையைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டில் மக்கள் தங்கம் வாங்கினால் அது தானே குட்டி போடும் என்று நம்பும் இந்த நாளில் வட இந்தியாவில் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆக அக்ஷய திருதயை நாடெங்கும் 'சின்னப் பிள்ளைத் தனமாக' நடக்கும் தினம் போல் தெரிகிறது.

1929 ம் ஆண்டிலிருந்தே குழந்தைகள் திருமண கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்தும் இந்தச் சட்டம் இன்னும் எழுந்து நிற்காமல் தவழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் பொக்கை வாய் சட்டத்திற்குத் திருத்தமாக "குழந்தைகள் திருமணத் தடுப்பு மசோதா" ஒன்று ராஜ்ய சபையில் 2004 டிசம்பரில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மசோதாவிற்கு முன்னால் நான்கு பால் பற்கள் முளைத்திருப்பதாக கேள்வி. இது சட்டமானால், நீதிமன்றங்கள் குழந்தைத் திருமணத்திற்குத் தடை விதிக்க முடியும் (ஆனால் சம்பந்தப் பட்ட குழந்தையின் புகாரின் பேரில் மட்டும்!);

இந்தியாவிற்கு "வளர்ந்த நாடு" என்ற அங்கீகாரம் இல்லை என்று இங்கே யாரோ அங்கலாய்த்தார்களே ஐயா?!!

(அக்ஷய திருதயை பற்றிய ஒரு வலைப் பதிவு விவாதம் பார்த்தேன். சுட்டியை மறந்து விட்டேன். தெரிந்தவர்கள் கொடுத்தால் இந்தப் பதிவிலிருந்து சுட்டி அமைக்க ஏதுவாகும்!)

No comments:

Blog Archive