Sunday, May 15, 2005

சீன ஆடைகள் இறக்குமதி அளவில் மீண்டும் வரையரைகள்

பன்முக நூலிழை ஒப்பந்தம் (Multi Fibre Agreement) என்று ஒரு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஆரம்பம் வரை அமலிலிருந்தது. இது ஆடைகள் வர்த்தகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பங்கு வரையரைகளையும் அதன் மூலம் வர்த்தகத்தின் அளவிற்குத் தடையையும் உலகத்தின் வளர்ந்த நாடுகள் அமைக்கக் காரணமாயிருந்தது.

இந்த வகை அரசு குறுக்கீடுகளால்தான் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆடை உற்பத்தித் தொழில் வளர முடிந்தது என்று கூடச் சொல்லலாம்.

பன்முக நூலிழை ஒப்பந்தமானது ஸ்ரீலங்கா, கம்போடியா, தாய்லாந்து முதலிய நாடுகளும் அவர்களுக்கு அளிக்கப் பட்ட ஏற்றுமதிப் பங்கினால் தத்தம் நாடுகளில் ஆடை உற்பத்தித் தொழிலைப் பெருக்கிக் கொள்ள வகை செய்தது.

உலக நாடுகளிடையே தடைகளற்ற வர்த்தகத்தை (Free Trade) வளர்க்கும் முகமாக இந்தப் பன்முக நூலிழை ஒப்பந்தத்தை செயலற்றுப் போகச் செய்ய உலக நாடுகள் இசைந்தன. 2005 ஆம் ஆண்டில் ஆடைகள் வர்த்தகத்தை தடைகளற்றதாக ஆரம்பித்தன. ஏற்கெனவே வரையறுக்கப் பட்ட பங்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டன.

உற்பத்தித் திறமை மற்றும் குறைந்த விலையில் வர்த்தகம் செய்யக் கூடிய செயல்வன்மை சீனாவிற்கு அதிகம் இருந்ததால் தடைகளற்ற வர்த்தகச் சூழல் அதற்குத்தான் சாதகமாக அமையும் என்று உலகெங்கும் எதிர்பார்க்கப் பட்டது. சீனாவிற்கு அடுத்தபடியாகத்தான் இந்தியாவிற்க்கு இந்தச் சூழல் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப் பட்டது. முன் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு அவர்களுக்கான வர்த்தகப் பங்கு விலக்கப் பட்டு விட்டதால் சீனா மற்றும் இந்தியாவுடன் ஏற்கெனவேயிருந்த வர்த்தகப் பங்குக்குக் கூட போட்டியிடும் நிலை வந்தது.

எதிர்பார்த்த படியே சீனாவின் ஆடைகள் ஏற்றுமதி 2005 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் அதற்கு முந்தைய நிலையிலிருந்து இரண்டு முதல் மூன்று பங்கு (250 சதவிகிதம் முதல் 300 சதவிகிதம்) உயர்ந்தது. விலையைக் கூட இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்த விலையிலிருந்து ஏற்கெனவே 10 சதவிகிதம் உயர்த்தி விட்ட சீன வியாபாரத் திறனைப் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது. செயற்கை நூலிழைகளால் ஆன பெண்கள் உள்ளாடைகள், பருத்திச் சட்டைகள் மற்றும் கால் சட்டைகள், பின்னப் பட்ட ஆடைகள், காலுறைகள் முதலியவற்றை சீனா அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் கொட்டிக் குவிக்க ஆரம்பித்தது.

அமெரிக்காவிலுள்ள சில்லறை விற்பனையானர்கள் இதைப் பெரிதும் வரவேற்றனர். ஆனால் அந்த நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஆடைகள் தொழில் சுருங்கத் தொடங்கி அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்நாட்டுக் குடிமக்கள் வேலைகளை இழக்க ஆரம்பித்தனர். ஆடைகள் தொழில் செய்வோர் அமெரிக்க அரசிடம் முறையிட்டனர். இந்த முறையீடுகளின் பேரில் கடந்த சில வாரங்களாகவே தேவையான ஆய்வுகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்த புஷ் அரசு, நேற்று சீன ஆடை இறக்குமதிப் பங்கில் சில வகை ஆடைகளுக்கு மட்டும் இறக்குமதி உச்ச வரம்பை திரும்பவும் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் ஆடைத் தொழில்கள் செய்வோரிடமிருந்து வரவேற்பையும், சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அதிருப்தியையும் சம்பாதித்திருக்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டுபவை சில:

  • உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி அதன் உறுப்பினர்கள், தடையற்ற வர்த்தகச் சூழலில் தங்கள் நாட்டின் இறக்குமதிகள் கட்டுப்பாடில்லாமல் போனால், இறக்குமதிகளை மட்டுப் படுத்தலாம். இதன்படி நடப்பு ஆண்டில் ஒரு நாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகள் முந்தைய ஆண்டின் இறக்குமதி அளவிற்கு 7.5 சதவிகிதத்திற்கு மிகாமல் மட்டுப் படுத்தும் அதிகாரம் ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. சீனா இத்தகைய கட்டுப்பாடுகளை ஒத்துக் கொண்டுதான் உலக வர்த்தக அமைப்பிற்குள் வந்திருக்கிறது
  • என்னதான் தடையற்ற வர்த்தகத் திட்டமானாலும் மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப் படாத வரைதான் அவை தடையில்லாமல் வேலை செய்யும்
  • சீனாவின் பொருட்களுக்குக்கான சந்தை அமெரிக்காவில் இருந்ததால்தான் அதன் ஏற்றுமதி இந்த அளவு உயர்ந்தது. அந்தச் சந்தையை செயற்கையாகத் தடை செய்வதன் மூலம் மட்டும் அந்தச் சந்தையின் போக்கைத் திசை திருப்புவது கடினம். சீனா லாபத்தில் சிறிது இழந்தாலும் வேறு வழிகளில் இந்தச் சந்தையை அடைய முயற்சிப்பதை நிறுத்தப் போவதில்லை. அதிக லாபமீட்டும் குறிக்கோளில் குறைந்த விலை சீனப் பொருட்களை இறக்குமதி செய்து வந்த அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் இதற்கும் உதவத்தான் போகிறார்கள்
  • தண்ணீர் இயல்பாக பள்ளம் இருக்கும் இடம் நோக்கிப் பாயத் தலைப்படுவதைப் போலவே பணம் எப்போதும் அதிக உற்பத்தித் திறனை (குறைந்த விலையில் சம அல்லது அதிகத் தரமுள்ள பொருள் செய்யும் திறன்) நோக்கிப் பாயத் தலைப்படும். இந்தப் பாய்ச்சலை அரசு குறுக்கீடுகள் என்ற அணைகள் கட்டித் தடுக்கலாம். அணைகளின் தடுப்புத் திறனுக்கு எப்போதும் ஒரு மட்டு அல்லது எல்லை உண்டு
  • சீனாவிற்கு விதிக்கப் பட்ட இந்தப் பங்கு வரையரையினால் இந்தியாவிற்கு லாபம் என்று நாக்கை மட்டும் தட்டுபவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சப் போகிறது. உற்பத்தித் திறன்களை சீனா அளவிற்கு உயர்த்த முயலுவோர் வேண்டுமானால் சற்று பலன் பெறக்கூடும்

No comments:

Blog Archive