Saturday, May 14, 2005

இந்தியாவில் வால் மார்ட் ?

இந்தியாவின் 100 கோடிக்கும் சற்று அதிகமான மக்கள் தொகையை மக்கள் வருவாய் ஈட்டும் திறனை கொண்டு பிரிவுகளாகப் பிரித்தால், அதில் சுமார் 20 கோடி மக்கள் சகல வசதிகளுடன் வாழும் பணக்காரர்கள். இவர்களில் பெரும் பணக்காரர்களும் அடங்குவர். மீதமுள்ளவர்களில் சுமார் 25 கோடி மக்கள் மிக வறுமையில் வாழ்பவர்கள், இன்னும் 12 முதல் 15 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 45 அல்லது அதற்க்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள். மிச்சம் பேர் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர்.

வறுமையின் வாட்டம் நகரங்களிலும் கிராமங்களிலும் கண்ணில் பட்டாலும் அது இந்தியாவின் கிராமங்களில்தான் அதிகம் என்று சொல்லலாம்.

ஹிந்துஸ்தான் லீவர், ஐ. டி. சி போன்ற வழங்கும் சங்கிலிகளில் (Supply Chain) விரைவில் நகரும் நுகர்பொருட்கள் (FMCG) தயாரிக்கும் நிறுவனங்கள் பொருளாதாரக் கீழ்த்தட்டில் வாடும் மக்கள் வாழும் சந்தையை அணுகும் முறையில் நூதனம் காட்டுகிறார்கள். கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் வாழும் மக்களிடம் பொருள் விற்க, அவர்களில் ஒருவரையே தங்கள் பிரதிநிதியாக நியமித்து, அவர்களுக்குத் தங்கள் பொருட்கள் மேல் (அல்லது விளைபொருட்களை அவர்களிடமிருந்து சரியான விலை கொடுத்து வாங்கும் வகையில்) நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களுக்கும் பொருள் விற்பனை அல்லது கொள்முதல் செய்யும் வேலைவாய்ப்புகள் வழங்குவதன் மூலம் அந்தப் பகுதிகளில் பொருள் வளம் பெருக் வழி செய்து இந்தச் சந்தையை வளர்க்கிறார்கள். இவர்கள் தங்கள் திட்டத்திற்கு முறையே சக்தி மற்றும் ஈ-சௌபல் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

சிற்றூர்கள் மற்றும் சிறு நகரங்களில் கறந்த பாலைப் பால்காரர் வீடு வீடாகச் சென்று கொடுத்துவிட்டு மாசக் கடைசியில் பாலை இனாமாகக் கொடுத்து வழங்கிய தண்ணீருக்கு மட்டும் கறாராகப் பணம் வசுலித்துக் கொள்வது நாம் அனைவரும் இன்றும் பார்க்கக் கூடிய ஒன்றே. அதே போல சென்னை போன்ற பெரு நகரங்களிலும் கூட இன்றும் தெருமுனைப் பலசரக்கு மற்றும் மருந்துக் கடைகள் சேவை வழங்குகின்றன. சமையல் செய்து கொண்டிருக்கும் போதே புளி தீர்ந்து போய் தொலைபேசியில் கூப்பிட்டால் ஐந்து நிமிடத்தில் ஐந்து ரூபாய் புளியுடன் கடைப் பையன் வாசலில் நிற்கும் வசதி இங்கு உண்டு. கொடுக்கும் பொருட்களை கணக்கில் வைத்துக் கொள்ளும் கடைக்காரர்கள் மாதம் முதல் தேதி சம்பளம் வந்தவுடன் அவர்கள் பாக்கியை வசூலித்துக் கொள்ளும் வசதி. பரஸ்பர நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் பெருமளவில் இரு தரப்புகளிலும் தரம் காக்கப் படும்.

நாம் பார்க்க வேண்டிய அடுத்த காட்சி சென்னை ரங்கநாதன் தெருவும், அங்கே நடக்கும் வியாபாரமும், புழங்கும் பணமும். இந்தியாவில் ஊருக்கு ஊர் ரங்கநாதன் தெருவுக்கு இணையான தெருக்கள் உண்டு. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நண்பனாக தங்கள் வியாபாரக் கொள்கைகளை அமைத்துக் கொண்டு அவர்கள் நன்மதிப்பைப் பெற்ற கடைகள் உண்டு.

இந்தக் கலாச்சாரமெல்லாம் வால் மார்ட்டுக்குத் தெரிய நியாயமில்லை.

வால் மார்ட் ஒரே இடத்தில் குண்டூசி முதல் பலசரக்கு, உணவுப் பொருட்கள், துணிமணிகள், இசை, புத்தகங்கள், நகைகள், தொலைக்காட்சி, குளிர் பதனப்பெட்டி முதலியவற்றை ஒரே கூரையின் கீழ் வாங்கக் கூடிய மிகப் பெரிய சந்தைக் கடைகளை நாடு முழுவதும் நிறுவி இயக்கும் நிறுவனம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில் நுட்பத் திறனாலும், வழங்கும் சங்கிலிகளில் பொருட்களைக் கையாளும் திறனை அதிகரிப்பதாலும் "தினமும் குறைந்த விலை" யில் பொருட்களை மக்களுக்கு விற்க உத்தரவாதம் வழங்கும் நிறுவனம். மேலும் அமெரிக்காவில் வீட்டுக்கு வீடு குளிர்பதனப் பெட்டிகள் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக அமைக்கப் படுவதால், உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் பெரிய அல்லது தேவைக்கதிக அளவில்தான் விலை குறைவாகக் கிடைக்கும். பல சமயம் ஒரு சோப்பு, இரண்டு நாளைக்கு வேண்டிய சோப்புத்தூள், ஒரு வேளைக்கான ஷாம்பூ, அல்லது 50 மி.லி நல்லெண்ணெய் போன்றவைகளை வாங்கும் சிக்கனங்கள் அங்கு சாத்தியமில்லை. இந்தியாவில் இந்தச் சிக்கனங்கள் அத்தியாவசியத் தேவைகள். வால் மார்ட்டிற்கு இந்தச் சிக்கனங்களை இந்தியாவில் நிறுவக் கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் பிடிக்கப் போகிறது.

வால் மார்ட் இந்தியாவில் மேல் தட்டு மக்களுக்கு உதவப் போகும் சில்லறை விற்பனை நிறுவனம் என்பது என் கணிப்பு. கண்டிப்பாக மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கு வேறு வியாபார முனைப்புகள் வால் மார்ட்டிற்கு இருக்காது என்றும் நான் நினைக்கிறேன். வால் மார்ட்டின் மூலம் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப் படக் கூடிய தொழில் நுட்பமும், வியாபாரத் திறமைகளும் மற்றும் வேலை வாய்ப்புகளும் நமக்குத் தேவை.

வால் மார்ட்டின் மூலம் தெருமுனை பலசரக்குக் கடைகள் அழிந்து விடும் என்ற பயம் அர்த்தமற்றது. வால் மார்ட் வரட்டுமே !!

No comments:

Blog Archive