Tuesday, May 03, 2005

தனிநபர் உபயோகக் கணினி.

Personal Computer! 1980 களில் இந்தியாவிற்கு வந்தது. முதல் முதலில் வெளிவந்த கணினியில் கருப்பு வெள்ளைத் திரையும், 640 KB நினைவுச் சில்லுகளும், 8 இன்ச் பிளாப்பி தகடு வசதியும் இருந்தன.

கணினி மையங்களில் குளிர்விக்கப் பட்ட அறைகளில், செருப்பை வெளியே விட்டு வெறுங் காலுடன் சென்றால் தரிசனம். தொடுவதற்கு தனி அனுமதி தேவை. இந்தியாவில் கடவுள்களுக்குக் கூட குளிர்விக்கப் பட்ட அறை வசதி கிடையாது என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

இ.சி.ஐ.எல் நிறுவனத்தால் இந்தியாவில் முதலில் அறிமுகப் படுத்தப் பட்ட இந்தத் தனி உபயோகக் கணினி அன்றைய தேதியில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வாங்கக் கூடியதாக இருந்தது. தனவந்தர்கள் வாங்கினால் அவர்கள் வீட்டு ஆடம்பரப் பொருள். பதிவு செய்து விட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை கூட இருந்தது.

இ.சி.ஐ.எல் நிறுவனத்தின் கணினி தரம் குறைந்து காணப் பட்டதால் அது நிரந்தரமாகச் சந்தையில் இல்லை. எச். சி. எல், விப்ரோ, ஜெனித் போன்ற நிறுவனங்கள் தரமுள்ள பொருட்களை விற்று சந்தையைப் பிடித்து விட்டன.

ஐ.பி.எம் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப் பட்ட இந்த தனி நபர் உபயோகக் கணினி, உலகெங்கும் ஐ.பி.எம் மின் சிறப்பான வளர்ச்சிக்கும் புகழுக்கும் முக்கிய காரணமாக இருந்தது.

மைக்ரோசா·ப்ட் நிறுவனம் அதன் இன்றைய நிலைக்கு வளர முக்கியக் காரணங்கள் இந்த தனி நபர் உபயோகக் கணினியும், ஐ.பி.எம் நிறுவனம் அமைத்துக் கொடுத்த வர்த்தக மேடையும் என்றால் மிகையாகாது.

மூர்ஸ் விதி (Moore's Law) விளையாடி, சிலிக்கான் சில்லுகளில் அமைக்கக் கூடிய டிரான்சிஸ்டர்களின் அடர்த்தி அதிகரித்து அந்தச் சில்லுவின் விலையும் குறையக் குறைய, தனி நபர் உபயோகக் கணினியின் செயல் திறன் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு வளர்ந்தது. கூடவே அதை இயக்கத் தேவையான மென்பொருட்களும் வளர்ந்தன. அத்துடன் சென்னை ரிட்சி வீதிச் சந்துக்குப் போனால் அரை நிஜார் போட்ட பையன் பத்து நிமிடத்தில் உங்களுக்கு விருப்பமான வகையில் ஒரு கணினியை அமைத்துக் கொடுக்கும் அளவிற்கு தொழில் நுட்பம் எளிதானது.

ஐ.பி.எம் இந்தக் கணினி இப்படிக் கடைச் சரக்காகும் படியும், அதன் வியாபாரத்தில் லாபம் ஈட்டக் கூடிய திறன் குறையவும் ஏதுவாக ஒரே ஒரு தவறுதான் (?!) செய்தது. அது கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சந்திப்பு முகங்களை (interfaces) உலகுக்கு அறிவித்து அவை திறந்த நியமங்களாக (Open Standard) வழி செய்தது.

இன்று ஐ.பி.எம் தனிநபர் உபயோகக் கணினி வியாபாரத்திலிருந்து விலகிவிட்டது. லெனோவோ என்ற சீன நிறுவனத்திடம் தனி நபர் கணினி வியாபாரத்தை முழுமையாக விற்று விட்டது. இந்தியாவிலும் அதன் பாண்டிச்சேரி தனிநபர் உபயோகக் கணினித் தொழிற்சாலையை லெனோவோ இந்தியா என்ற நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டது.

ஒரு கால் நூற்றாண்டு இடைவெளியில் எவ்வளவு பெரிய மாற்றம்!!

No comments:

Blog Archive