ஒரு (மிக) எளிமைப் படுத்தப் பட்ட உதாரணத்துடன் ஆரம்பிப்போம்.
ஒரு மாநிலத்தில் கார்கள் உற்பத்தித் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள். காருக்கான ரப்பர் டயர் உற்பத்திக்கு வேண்டிய ஒரு உட்பொருள். இந்த ரப்பர் டயருக்கான வரி கார் தொழிற்சாலை உள்ள (சொந்த) மாநிலத்தில் 12.5 சதவிகிதம்; அண்டை மாநிலத்தில் வாங்கினால் 4 சதவிகிதம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாதத்திற்கு தொழிற்சாலைக்கு வேண்டியது 1000 டயர்கள். ஒரு டயருக்கு விலை ரூபாய் 1000/- என்று வைத்துக் கொண்டால், சொந்த மாநிலத்தில் வாங்கினால் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 1,25.000/=. அதே அண்டை மாநிலத்தில் வாங்கினால் செலுத்த வேண்டிய வரி ரூ 40,000/= மட்டுமே.
உற்பத்தி உட்பொருட்கள் மேல் மதிப்புக் கூட்டு வரியில் கழிவு பெறலாம் என்றாலும், கார் தொழிற்சாலை இயக்குனர் சொந்த மாநிலத்தில் டயர் வாங்கினால் மாதாமாதம் அரசுக்கு ரூபாய் 85000 அதிகம் வரி செலுத்தி விட்டு கழிவு பெறக் காத்திருக்க வேண்டும். கழிவு கிடைக்க 6 மாதங்கள் ஆகும் என்றால், தொழிலில் தேவையில்லாமல் முடக்க வேண்டிய அதிகப்பணம் (6 x 85000) = ரூபாய் 5,10,000/=. நீங்கள் தொழிற்சாலை இயக்குனராக இருந்தால் இவ்வளவு பணத்தை தேவையில்லாமல் தொழிலில் முடக்குவீர்களா? இந்தப் பணம், உங்களுக்காக உருப்படியான வேலை எதுவும் செய்யாமல் வெளியே போய் வந்து கொண்டிருக்கிறது.
பல இயக்குனர்கள் இத்தகைய நிலைமையில் அண்டை மாநிலத்திலிருந்துதான் டயர் வாங்க முற்படுவார்கள். சொந்த மாநிலத்தில் கிடைக்கும் டயரின் தரம் அதிகமாக இருந்தால் கூட, தரம் சற்றுக் குறைந்த அண்டை மாநில டயர்கள் பக்கமே ஈர்க்கப் படுவார்கள்.
ஆக எந்த ஒரு பொருளின் மீதும் அரசு விதிக்கும் வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறினால் உற்பத்தியாளர்கள் உட்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் தரம், தொழில் நுட்பம், நெடுநாள் உழைக்கும் திறன் எல்லாம் பார்ப்பதை காற்றில் விட்டு விட்டு எங்கே குறைந்த விலையில் வாங்கலாம் என்றுதான் கிளம்புவார்கள்.
போட்டித் தயாரிப்பாளர்கள் அதிகம் உள்ள சந்தைகளில், (1) சந்தையில் அதிகப் பங்கைக் கைப்பற்றும் நோக்கில் விற்பனைப் பொருளின் விலையைக் குறைக்கும் பொருட்டும், (2) உற்பத்திக்காகும் பணப் புழக்கத்தின் அளவைக் கட்டுப் படுத்தும் நோக்கிலும், (3) லாபத்தைப் பெருக்கும் நோக்கிலும் இது போன்ற செயல்கள் கட்டாயம் நடக்கும்.
அறையைக் குளிர்விக்கும் சாதனத்தை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் குஜராத்திலிருந்து வாங்கிக் கொண்டிருந்ததற்கும், சென்னையில் கார் வாங்குபவர்கள் வெகுநாட்கள் பாண்டிச்சேரியில் வாங்கி வந்து ஆறு மாதங்களுக்குப் பின் சென்னையில் பதிவு பெற்றுக் கொண்டிருந்ததற்கும் இந்த மாநிலஙகளுக்கிடையான வரி அளவில் இருந்த வித்தியாசம்தான் காரணம்.
மதிப்புக் கூட்டு வரி அமலுக்கு வந்த பிறகு, மாநிலத்திற்கு மாநிலம் ஒரே பொருளுக்கு வேறு வேறு வரி அளவை அந்தந்த மாநில அரசுகள் அமைத்திருந்தார்கள். மும்பையில் உற்பத்தி செய்ய உள்ளூரிலேயே உட்பொருட்கள் கிடைத்தாலும் அண்டை மாநிலத்திலிருந்து பொருள் வாங்கி வருவது சிறப்பாக நடக்க ஆரம்பித்தது. டில்லியிலும் இதே கதைதான். ஏற்கெனவே இயங்கி வந்த உட்பொருள் வழங்கும் சங்கிலிகளில் (supply chain) இயங்கிய வணிகர்கள் பாதிப்படைந்தனர்.
மதிப்புக் கூட்டு வரியுள்ள அனைத்து மாநில நிதியமைச்சர்களும் சமீபத்தில் கூடி உற்பத்தி உட்பொருட்கள் மேலான வரி அளவுகளை ஒரே சீராக அமைக்க முடிவெடுத்து விட்டார்கள். மேலும் அனைத்து மக்களும் உபயோகிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் மேலும், பொது விநியோக முறையில் விநியோகிக்கப் படும் பொருட்கள் மீதும் வரி குறைக்கப் பட்டு விட்டது அல்லது நீக்கப் பட்டு விட்டது. உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரியைக் குறைப்பதாகச் சொன்னார்கள். உயிர் காக்கும் மருந்துகள் எவை என்ற தெளிவு இன்னும் பிறக்கவில்லை. சாதாரண மருந்துகளையும், அழகுப் பொருட்களையும் வித்தியாசப் படுத்துவதிலும் சிரமமிருப்பதாகக் கூறுகிறார்கள்.
உட்பொருட்கள் மேல் வரி குறைந்தால் உற்பத்திச் செலவு குறையும். உற்பத்திச் செலவு குறைந்தால் செய்யப் பட்ட பொருளின் விலையும் குறைய வேண்டும். விற்பனை வரியைச் செலுத்துவோர் நுகர்வோர் ஆகையால் வரிக் குறைப்புக்கான பலனும் நுகர்வோரைத்தான் சேர வேண்டும். அப்படிச் செய்யாமல் உற்பத்திப் பொருட்களின் விலையை முந்தைய நிலையிலேயே வைத்திருந்து லாபமீட்ட முயற்சிக்கும் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த மாநில அரசுகள் இனம் கண்டு கட்டுப் படுத்த வேண்டும்.
1 comment:
this is very useful to me.
Keep it up...
Post a Comment