Sunday, May 01, 2005

புதிய பறவை !!

ஏர் பஸ் நிறுவனத்தின் புதிய பறவை A380. உலகின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஒரே மூச்சில பறக்கக் கூடியது இந்த விமானம். இரண்டு அடுக்குகள் கொண்டு 555 பயணிகளுடன் பயணிகள் போக்குவரத்து விமானமாகவோ, அல்ல்து மூன்றடுக்குகள் கொண்டு 150 டன் எடையைத் தூக்கிச் செல்லும் சரக்குகள் விமானமாகவோ விற்பனைக்குக் கிடைக்கப் போகிறது.
சுமார் 15 பில்லியன் இயுரோக்கள் (சுமார் 84000 கோடி ரூபாய்கள்) செலவில் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த விமானம் முதல் முறையாக கடந்த புதன் கிழமை ஆறு சோதனை விமானிகளுடன் வானில் எழும்பிப் பறந்தது. சுமார் 2500 மணிநேர சோதனைப் பயணங்களுக்குப் பிறகு 2006ம் வருடத்தின் மத்தியில் பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராகும்.

இந்த விமானத்தில் உள்ள காற்றின் எடையே சுமார் 2 டன் இருக்கும் என்பது என் அனுமானம். இத்த்னை பெரிய விமானம் ஓடுபாதையில் ஒடி மேலெழும்பிய அந்தக் கணம் மிக அழகானது, மகத்தானது. அந்த விமானத்தை வடிவமைத்து கட்டமைத்த அனைத்து மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து பெருமிதம் கொள்ளச் செய்யும் கணம். போட்டி நிறுவனமான போயிங்கின் வயிற்றில் புளியைக் கரைக்கும் கணம். உலக ஆகாயப் பயணச் சரித்திரத்தில் நிரந்தரமாக பதிக்கப் பட்ட கணம்.

555 பயணிகளுக்கு மட்டுமே இருக்கைகள் அமைக்கப் பட்டிருந்தாலும் 800 க்கும் மேற்பட்ட பயணிகளுக்குத் தேவையான இடம் இந்த விமானத்தில் உண்டாம். உபரியாக உள்ள் இடத்தில் கேளிக்கை அரங்கங்கள், நடன அரங்குகள், பார், உணவுக் கூடம் முதலியவை அமைக்கப் பட்டு நெடுந்தூர விமானப் பயண அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கத் திட்டமிடப் படுகிறது என்று தெரிகிறது.

இந்த விமானத்தை முதலில் வாங்கியிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திற்கு நேரடி விமான சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

323 பேர் பயணித்தாலே ஒரு நெடுந்தூர விமானப் பயணத்தின் முழுச் செலவையும் சம்பாதிக்கக் கூடிய இந்த விமானத்தில், மிச்சமுள்ள 232 இருக்கைகளும் லாபம் தரக்கூடியவை. இது போட்டி விமானங்களை விட 109 இருக்கைகள் அதிகம் என்று ஏர் பஸ் இணைய தளம் தெரிவிக்கிறது.
போயிங் 747-400 ஜம்போ ஜெட் விமானத்தை வெளியிட்ட போது அது விற்காது என்று அசட்டை செய்த ஏர் பஸ் நிறுவனம், ஜம்போ ஜெட் விமான விற்பனை பிய்த்துக் கொண்டு போன போது அரண்டு போனது. அதன் எதிர் விளைவுதான் A380.

அதே நேரம் போயிங் நிறுவனம் ஏர் பஸ் பெரிய விமானங்கள் அமைப்பதில் எடுத்த நிலைப்பாட்டில் உண்மை இருப்பதாக நம்பத் தலைப்பட்டதால் 7E7 திட்டத்தில் இறங்கியது. A380 போன்ற பெரிய விமானத் தயாரிப்புத் திட்டங்கள் எதுவும் அதன் கையில் இல்லை. இப்போது A380 யைப் பார்த்து பயப்படவில்லை என்று அறிக்கைகள் விட்டாலும் உள்ளூர அரண்டு போயிருப்பதாகக் கேள்வி.

No comments:

Blog Archive